அணுசக்தி ராஜதந்திரத்தின் அநியாய விலை

பிரதமர் மோடியும் அதிபர் ஒபாமாவும் சமீபத்தில் வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்தியாவில் 6 ‘ஏ.பி.1000’ ரக அணு உலைகளை வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் கட்டித்தருவதற்கான ஆயத்த வேலைகளைச் செய்யவிருப்பதை வரவேற்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதே போன்ற அணு உலைகள் அமெரிக்காவில் செயல்படுவதிலிருந்து பார்க்கும்போது, இந்த 6 அணு உலைகளின் விலை மட்டும் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான மிகப் பெரிய வர்த்தக உடன்பாடு இது.

மிகவும் கவலைப்படத்தக்க பல அம்சங்கள் இந்த வர்த்தகத்தில் உண்டு. நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தை நேரடியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். விபத்து ஏதும் ஏற்பட்டால் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் இந்தியாவுக்கோ இந்தியர்களுக்கோ இழப்பீடு தராது. இந்த அணு உலைகளைப் பயன்படுத்துவதால் மின்உற்பத்திச் செலவு அதிகரிக்கும். அதை நுகர்வோர்தான் ஏற்க வேண்டியிருக்கும்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

சிறப்போ தரமோ அல்ல

இதற்கு முன்னால் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 12-வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2012-2017) வெஸ்டிங்ஹவுஸ் மற்றும் ஜெனரல் எலெக்ட்ரிக் (ஜி.இ.) ஆகிய இரு நிறுவனங்களிடமிருந்தும் தலா இரு அணு உலைகளை வாங்க விரும்புவதாக அறிவித்தது. இவற்றின் சிறப்புக்காகவோ தரத்துக்காகவோ வாங்க நினைக்கவில்லை என்ற உண்மையையும் அப்போது தெரிவித்தது. அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவரான அனில் ககோட்கர் இதை வெளிப்படையாகவே விளக்கினார். “நம்முடன் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் நாடுகளின் வணிக நலன்களையும் நாம் பார்க்க வேண்டியிருப்பதாலும் ராஜீயரீதியாகப் பல பிரச்சினைகளில் அமெரிக்கா நம்மை சர்வதேச அரங்கில் ஆதரிக்க வேண்டும் என்பதற்காகவும் இவற்றை வாங்க வேண்டியிருக்கிறது” என்றார்.

ஆனாலும், இந்தியாவின் ‘இழப்பு ஏற்புச் சட்டம்’ தனக்குப் போதிய பாதுகாப்பை அளிக்காது என்ற எண்ணத்தில், ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த விற்பனையிலிருந்து விலகியது. உலகில் இதுவரை எந்த நாட்டுக்குமே விற்றிராத, இதுவரை சோதனையே செய்து பார்த்திராத ஒரு வடிவமைப்பில் அணு உலையை விற்க ஜெனரல் எலெக்ட்ரிக் உத்தேசித்திருந்தது. வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத் தயாரிப்புகள் சரியில்லை என்று சர்வதேச அரங்கில் கருத்துகள் வலுத்துவரும் நிலையில், இந்திய அரசு அதன் 6 உலைகளை வாங்கிக்கொள்வது என்று முடிவு செய்திருப்பது புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை.

வெஸ்டிங்ஹவுஸ் வரலாறு

வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தை டோஷிபா நிறுவனம் 2006-ல் வாங்கியது. வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் ‘ஏ.பி.1000’ வடிவமைப்பைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அதிக செலவாகிறது. எனவே, கட்டுப்படியாகாது என்று தொழில்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை அடுத்து, அதன் மதிப்பை 230 கோடி டாலருக்குக் கடந்த ஏப்ரலில் குறைத்தது. 12-க்கும் மேற்பட்ட ஆர்டர்களைப் பெற்றுவிடலாம் என்று வெஸ்டிங்ஹவுஸ் பத்தாண்டுகளுக்கும் முன்னர் கருதியது. ஆனால், 4 ஆர்டர்கள் மட்டும்தான் இதுவரை கிடைத்துள்ளன. ‘ஃப்ளோரிடா பவர் அண்ட் லைட்’ என்ற நிறுவனம் 2 ‘ஏ.பி.1000’ ரக அணு உலைகளை வாங்குவதென்ற முடிவை, மேலும் 4 ஆண்டுகளுக்குத் தள்ளிவைத்திருக்கிறது. ‘டென்னஸி பள்ளத்தாக்கு ஆணையம்’ என்ற அமெரிக்க அரசின் நிறுவனம், தான் ஏற்கெனவே அளித்த 2 ‘ஏ.பி.1000’ ரக அணு உலைகளுக்கான ஆர்டரை பிப்ரவரியில் ரத்துசெய்தது; “நிதி நிர்வாகத்தில் பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆர்டரை ரத்துசெய்ததாக” அதற்கு விளக்கமும் அளித்தது.

இந்திய அரசும் இந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்வதுதான் சிறந்தது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இப்போது கட்டப்பட்டுவரும் 2 ‘ஏ.பி.1000’ அணு உலைகளின் விலை ரூ.1.4 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு மெகாவாட் அணு மின்உற்பத்தி செய்ய ரூ.70 கோடி செலவாகிறது. பொருளாதாரரீதியாகக் கட்டுப்படியாகவில்லை என்று இந்தியாவில் தயாரிக்கப்படும் அணு உலைகளைப் பற்றிக் கூறுவதுண்டு. அந்த உலைகளே ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ரூ.10 கோடி என்ற செலவில் கட்டப்படுகிறது. அதாவது, வெஸ்டிங்ஹவுஸைவிட ஏழு மடங்கு விலை குறைவு!

இந்தக் கணக்குகளை எல்லாம் போட்டுப் பார்த்தால், வெஸ்டிங்ஹவுஸ் அணு உலை மூலம் முதலாண்டில் மின்சாரம் தயாரிக்கும்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.25 உற்பத்திச் செலவாகும் என்று தெரிகிறது. இப்போது சூரியஒளி மின்உற்பத்திப் பிரிவுகள் ஒரு யூனிட் மின்சாரத் தயாரிப்புக்கு ரூ.5 என்ற விலையில்தான் ஒப்பந்தங்களைச் செய்துகொள்கின்றன. இந்தியாவில் அணு மின்நிலையங்களின் கட்டுமானச் செலவை 25% முதல் 30% வரையில் குறைத்துவிட முடியும் என்று அரசு கூறுகிறது. அப்படியே செய்தாலும்கூட ‘ஏ.பி.1000’ ரக அணு உலைகள் தயாரிக்கும் மின்சாரம் மலிவாக இருக்க முடியாது.

இழப்பீடு இல்லை

கடந்த பிப்ரவரி மாதம், அணு மின்உற்பத்தி நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அரசே கூடுதல் இழப்பீடு (Liability) வழங்கும் ஏற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தது. ஒரு நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டால் அந்த நிறுவனம்தான் இழப்பீடு தர வேண்டும் என்ற வழக்கமான இந்தியச் சட்டத்துக்கு இது முரணானது. அத்துடன் அணு மின்நிலையத்துக்கு இடுபொருள், தொழில்நுட்பம், இயந்திரங்கள் போன்றவற்றை அளிக்கும் அனைத்து நிறுவனங்களையும் இழப்பீடு தரும் பொறுப்பிலிருந்து விலக்குவதாக இருக்கிறது. விபத்து நேரிட்டால் இந்திய நீதிமன்றங்களால் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது. காரணம், அது இந்தியாவில் இல்லை மற்றும் சர்வதேச உடன்படிக்கைப்படி அந்த நிறுவனம் எந்தவித எதிர்கால இழப்பீடு கோரலிலிருந்தும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

போபால் விஷவாயு விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கிய டௌ கெமிக்கல் நிறுவனம், இழப்பீடு தருமாறு தனக்கு உத்தரவிடும் சட்டபூர்வ அதிகாரம் இந்திய நீதிமன்றங்களுக்குக் கிடையாது என்று வாதிட்டது இங்கே நாம் நினைவுகூர வேண்டியது.

அணுசக்தி விநியோகஸ்தர்கள் குழுவில் (என்.எஸ்.ஜி.) சேர இந்தியா தயாராக இருப்பதாக பராக் ஒபாமா கூட்டறிக்கையில் அறிவித்தார். தன்னுடைய மின் தேவைகளுக்காக அணுசக்தி விநியோகஸ்தர்கள் குழுவில் இந்தியா சேர வேண்டிய அவசியமே இல்லை. 2008-ல் அனுமதிக்கப்பட்ட விதிவிலக்கின்படி தன்னுடைய மின்உற்பத்திக்குத் தேவைப்படும் யுரேனியத்தை இந்தியா எவரிடமிருந்தும் வாங்கிக்கொள்ளலாம். அதற்கும் மேல், இந்தியாவின் மொத்த மின்உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு வெறும் 1% தான்.

தேவையற்ற தொழில்நுட்பம்

அணுசக்தி விநியோகஸ்தர்கள் குழு (என்.எஸ்.ஜி.) என்ற அமைப்பில் சேருவதால் யுரேனியத்தைச் செறிவூட்டுவது, மறு பதனப்படுத்துவது போன்றவற்றுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பத்தை இந்தியா பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்தியாவின் கனநீர் அணு உலைகள் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்துவதில்லை. இறக்குமதி செய்யப்படும் மென்நீர் உலைகள் எரிபொருளையும் சேர்த்தே பெறுவதற்கான உடன்பாட்டோடுதான் வாங்கப்படுகின்றன. எனவே, இந்தத் தொழில்நுட்பமானது இந்தியாவின் மின்உற்பத்தித் துறைக்குத் தேவையே இல்லாத ஒன்று.

நஷ்டத்தில் நடக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் நலனுக்காகப் பல்லாயிரக் கோடிக்கணக்கில் இந்தியப் பணத்தைக் கொட்டிக்கொடுக்கும் ஒரு பேரத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அத்துடன் அங்கு தயாராகும் மின்சாரத்துக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கும் மேலாக இந்நிறுவனத்தில் விபத்து ஏதும் ஏற்பட்டால் அந்நிறுவனத்தை எந்த விதத்திலும் பொறுப்பாக்க முடியாமலும் இழப்பீடு பெற முடியாமலும் ஒரு நிலையை வலியச் சென்று ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் பதிலாக இந்தியா மகிழும்படியாக சில வார்த்தைகளை அந்நாட்டு அதிபர் பாராட்டிப் பேசியிருக்கிறார்! இந்திய – அமெரிக்க கூட்டணி வளரப்போகும் விதம் இதுதானா?

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *