அரியலூர் மாவட்டம் என்றாலே மக்களின் மனத்தில் தோன்றும் சித்திரம்… வறண்ட பூமி, எங்கே பார்த்தாலும் சிமென்ட் ஆலைகள் ஆகியவைதாம்!
அந்த மாவட்டத்தின் மண் வளம், ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளது. இதனால் கொள்ளிடக் கரையோரத்தில் கரும்பு, நெல் சாகுபடியும், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதிகளில் முந்திரியும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அரியலூர், செந்துறைப் பகுதிகளில் அதிக அளவு சுண்ணாம்புக் கற்கள் கிடைப்பதால் அரியலூரைச் சுற்றி ஒன்பது சிமென்ட் ஆலைகள் உள்ளன.
ஆனாலும், மாவட்டம் முழுவதும் உள்ள உழவர்கள் தங்களிடம் இருக்கும் கொஞ்ச நிலத்திலும் காய்கறிகள், மலர்கள், பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர்.
கன்றுகளுக்கு இடைவெளி
அந்த வறண்ட பூமியில் சற்றே வித்தியாசமாக, மக்களுக்குக் குளிர்ச்சி தரும் சாத்துக்குடி பழச்சாகுபடியைச் சிறப்பாகச் செய்து வருகிறார் அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்த உழவர் சீனிவாசன்.
தனது சொந்த ஊரான வண்ணம்புத்தூரில், ஒரு ஏக்கர் பரப்பளவில் ஒட்டுரக சாத்துக்குடியைப் பயிரிட்டுள்ளார். ‘வறண்ட பூமியில் இது எப்படிச் சாத்தியம்? மகசூல் கிடைக்குமா? லாபம் கைகொடுக்குமா?’ என நமது பல ‘எப்படி?’களுக்குப் புன்னகைத்துக்கொண்டே பதிலளித்தார் சீனிவாசன்.
“பெரும்பாலும் குளிர்ச்சியான பகுதிகளில் செழிப்பாக வளரக்கூடிய சாத்துக்குடி நமது மண்ணுக்கு ஏற்றதா?’ எனப் பலரும் என்னிடம் கேட்டனர். நமது மண்ணில் நன்றாக வளரும் தன்மை அதற்கு உள்ளது. நான் ஒரு ஏக்கர் பரப்பளவில் சாத்துக்குடி பயிரிட்டுள்ளேன். பயிரிட்டு இரண்டு வருடங்கள் ஆறு மாதங்கள் ஆகின்றன. கடந்த ஒரு மாதமாக சுவைமிக்க பழங்களை அறுவடை செய்து வருகிறேன்.
இதற்கான கன்றுகளை திண்டுக்கல்லில் உள்ள ஒரு பண்ணையில் வாங்கி வந்தேன். 20-க்கு 15 என்ற இடைவெளியில் கன்றுகளை நட்டுப் பராமரித்துவந்தால், போதுமானது” என்று ஆச்சரியப்படுத்தியவர், இந்தப் பயிரைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பது குறித்தும் விளக்கினார்.
எரு தரும் செழிப்பு
“இந்தச் செடியில் வேர் பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்கும். அதற்கு வேப்பம்புண்ணாக்கு அவசியம் இட வேண்டும். பூக்களில் வண்டு தாக்கம் ஏற்படுவதை அவ்வப்போது கண்டறிந்து, அதற்கு உரிய மருந்து தெளிப்பதும் மிக முக்கியம்” என்றார்.
குளிர் பிரதேசங்களில் காய்க்கும் பழங்களைவிட இங்கு விளையும் பழங்கள் சுவைமிக்கதாக உள்ளன என்கிறார்கள், அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட சிறு வியாபாரிகள். அதனால் அவர்கள் தினமும் வந்து பழங்களை கிலோ 45 ரூபாய்க்குக் கொள்முதல் செய்கிறார்கள் என்று கூறியவர், சாத்துக்குடி சாகுபடி முறையைப் பற்றிப் பகிர்ந்தார்.
“செடிகளுக்கு மாட்டு எருவை அதிகம் இடுவதால் செடிகள் எப்போதும் செழிப்பாக உள்ளன. வாரத்தில் ஒருநாள் தண்ணீர் விட்டால் போதும். இடைவெளிவிட்டுச் செடிகளை நடுவதால் டிராக்டர் இயந்திரம் கொண்டு உழவு செய்து விடலாம். செடியின் அருகில் இருக்கும் புல்லை மட்டும் ஆட்களைக் கொண்டு எளிதாக அகற்றிவிடலாம். இதனால் பராமரிப்புச் செலவும் குறைகிறது. இந்தச் செடிகள், கோடைக்காலத்தில் அதிக மகசூலைத் தருகின்றன. கிணற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி இந்தச் சாகுபடியைச் செய்துள்ளேன்” என்பவர் மாதுளை, ஒட்டுரக எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, அரைநெல்லி போன்ற பழக்கன்றுகளையும் மாதிரிக்கு வளர்த்து வருகிறார்.
அடுத்தது ஆரஞ்சு
“இதில், கமலா ஆரஞ்சு அதிக அளவு பழங்களைத் தந்துள்ளது. அதனால், மேலும் ஒரு ஏக்கர் பரப்பளவில் கமலா ஆரஞ்சு சாகுபடியை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்” என்று சொல்லும் சீனிவாசன், விவசாயிகளுக்கு ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கினார்.
“விவசாயிகள் எப்போதுமே நெல், கரும்பு, பருத்தி, சோளம் என இல்லாமல் இதுபோல மாறுபட்ட பயிர்களைச் சாகுபடி செய்தால் நிச்சயம் லாபம் பெறலாம்!”
சீனிவாசன் தொடர்புக்கு: 9843731739
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்