பஞ்சு மரம் வளர்க்கக்கூடாது… அவ்வாறு வளர்த்தால் நெற்று வெடித்து காற்றில் பஞ்சு பறப்பதுபோல், குடும்பமும் பஞ்சாய் பறந்துவிடும் என்ற மூட நம்பிக்கை அநேக மாவட்ட விவசாயிகளிடையே இருக்கிறது. ஆனால், சில பகுதி விவசாயிகள் ஏக்கர் கணக்கில் இலவம் தோப்பு உண்டு செய்து, பெரிய பராமரிப்பு ஏதும் இல்லாமல் இலகுவாக பணம் சம்பாதித்து வருகின்றனர்.
இலவு உற்பத்தி என்பது இலவம் பஞ்சில் மெத்தை, தலையணை, ரஜாய் தயாரித்தல், பஞ்சு ஏற்றுமதி, விதையில் இருந்து எண்ணெய் எடுத்தல் என தொட்டுத் தொடரும் தொழில் வாய்ப்புகள் உள்ள விவசாயம்.
இலவு காத்த கிளி பழமாகி சாப்பிட ஏமாந்தது உண்மையாக இருக்கலாம். ஆனால், இலவு காந்த மனிதன் இலகுவாக பணத்தை அள்ளிக் குவிக்கிறான் என்பதில் இரண்டாவது கருத்தே இல்லை.
இலவு மரம் சாகுபடி செய்ய நல்ல ஆழமான மண் கண்டம் உள்ளதும், வடிகால் வசதி உள்ளதுமான நிலம் தேவை. மலை அடிவாரத்து மேடு பள்ளமான நிலங்கள், வீணாக ஒதுக்கப்பட்ட நிலங்கள்கூட இலவுச் சாகுபடிக்கு ஏற்றதுதான்.
இலவு மரங்களில் இரண்டு ரகங்கள் உண்டு. ஒன்று, நீளமான காய்களும், அதிக காய்ப்புத் திறனும் உள்ளதும், அதிக அளவு பஞ்சு உடையதுமான சிங்கப்பூர் ரகம். இதை, பேச்சு மொழியில் ‘கம்பெனி காய்’ என்றும் சொல்வார்கள்.
இரண்டாவது ரகம், குட்டையான காய்களையும், குறைந்த அளவு பஞ்சும் உடைய நாட்டு ரகம். இயல்பாகவே, விவசாயிகளின் விருப்பத் தேர்வு சிங்கப்பூர் இலவு ரகம்தான். இலவம் மரத்தை விதை மூலம் இனப்பெருக்கம் செய்யும் முறையே பரவலாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அனைத்து மரக் கன்றுகளைப் போலவே, நர்சரி பைகளில் மண்ணிட்டு, தரமான தாய் மரத்தில் இருந்து தேர்வு செய்த இலவம் நெற்றுகளில் இருந்து கிடைக்கும் விதைகளை, விதை உறக்க காலம் முடிந்ததும், அவற்றை கொதிக்கும் நீரில் போட்டு பத்து நிமிடம் கழித்து, நீரை வடித்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் போட்டு ஒரு இரவு முழுதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் பை ஒன்றுக்கு இரண்டு விதைகள் வீதம் போட்டு, காலை மாலை இரண்டு வேளை தண்ணீர் தெளித்து வந்தால், எட்டு மாத காலத்தில் நடவுக்கு ஏற்ற பை நாற்றுகள் தயாராகிவிடும்.
இலவம் மரத்தை போத்து மூலமும் இனப்பெருக்கம் செய்யலாம். போத்து என்றால், மரத்தில் வெட்டப்பட்ட கிளைகள் என நினைத்துவிட வேண்டாம். இலவம் போத்தையும் விதைகள் மூலம்தான் தயார் செய்ய முடியும். ஏற்கெனவே கூறியபடி, இலவம் விதைகளைக் கொதி நீரில் போட்டும், குளிர்ந்த நீரில் ஊறவைத்தும் தயார் செய்து மறுநாள் காலை ஒன்றரை அடி உயரம் உள்ள மேட்டுப் பாத்தியில் 30 செ.மீ.க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
இந்த விதையில் இருந்து முளைத்து வரும் செடியை பத்து முதல் 12 அடி உயரம் வரை வளரக்க வேண்டும். இவ்வாறு வளர குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, நடவு செய்யத் தயாராகும் நேரத்தில், தரையில் இருந்து சுமார் ஒரு அடி ஆழத்தில் அதன் வேர்ப்பகுதியை வெட்டி, கிழங்கு போன்ற அமைப்புடன் செடியை தனியாக எடுத்துவிட வேண்டும். ஆறு அடி உயரம் வைத்து, மேல் பகுதியையும் கூர்மையான அரிவாளால் வெட்டிக் கழித்துவிட்டு நடவுக்குத் தயார் செய்ய வேண்டும். இப்போது ஒன்றரை அங்குலம் முதல் இரண்டு அங்குலம் கனம் உள்ள ‘கழி’ போன்ற போத்து நடவுக்குத் தயார். இதை, ‘கட்டை நாற்று’ என்றும் சொல்வார்கள்.
இந்தப் போத்து முறையில் நடவு செய்யப்படும் இலவு, விரைவில் துளிர்த்து நன்கு வளர்ந்து மரமாகி, இரண்டாம் ஆண்டே கன்னிக் காய்ப்புக்கு வந்துவிடும். ஐந்தாவது ஆண்டில், ஆஜானுபாகுவாக நிற்கும். நடவு செய்து, பின் பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் கொடுக்க வேண்டும். நன்கு வளர்ந்த பின், கோடையில் மட்டும் நீர்ப்பாசனம் செய்தால் போகும். மற்றபடி, மழையிலேயே வளர்ந்துவிடும். தண்ணீர்ப் பாசனம் என்பது, நடவு செய்யப்படும் பகுதியில் கிடைக்கும் பருவ மழை, காற்றின் ஈரப்பதம், மண்ணின் தன்மை, நிலத்தின் கரிவு போன்றவற்றைப் பொருத்து மாறுபடும்.
போத்து நடவு செய்யும்போது, சுமார் ஒரு அடிக்கும் குறையாத ஆழத்தில் அளவான குழி எடுத்து, போத்தை உள்ளே வைத்து, சுற்றியுள்ள மண்ணை போத்துக்கு எவ்வித காயமும் ஏற்படாமல் மிதித்துக் கொடுக்க வேண்டும். போத்தின் மேல் பகுதியில் சாண உருண்டை வைக்க வேண்டும். மேல் பகுதியில் சாண உருண்டை வைக்காவிட்டால், வெய்யிலில் போத்து மேலிருந்து கீழ் நோக்கி காயத் துவங்கும். சாண உருண்டை வைப்பதால், போத்தில் பசுமைத்தன்மை காப்பாற்றப்பட்டு விரைவில் துளிர் விடும்.
போத்தில் பல இடங்களில் துளிர்கள் தோன்றும். நன்கு ஊக்கமாக வரும் துளிர்களில் இரண்டை மட்டும் எதிர் எதிரே விட்டு மற்றவற்றை அவ்வப்போது கிள்ளியோ, மரத்துக்குக் காயம் ஏற்படாமல் அறுத்தோ நீக்கிவிட வேண்டும். இயன்றவரை, இளம் துளிரிலேயே கிள்ளி நீக்கிவிடுவது நல்லது.
விட்ட இரண்டு துளிர்கள் சுமார் ஒன்றரை அடி உயரம் வளர்ந்ததும், இரண்டில் நன்கு ஊக்கமாக வளரும் ஒன்றை மட்டும் விட்டுவிட்டு பலவீனமாக இருக்கும் இன்னொன்றை நீக்கவிட வேண்டும். அதன்பிறகு, எஞ்சியிருக்கும் ஒரு துளிரின் வளர்ச்சி மிக விரைவாக இருக்கும். இந்தத் துளிரை ஒதுக்கி கவனமாகக் கையாண்டு வளர்ப்பதுதான், மரத்தின் அடுக்குகளுடன் புதிய மரம் உண்டாவதற்கு அடிப்படை. அதனால், இந்தப் பணியை மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டும்
போத்துகள் கிடைக்காத இடங்களில், பை நாற்றுகளைப் பயன்படுத்தலாம். ஒன்றரை அடி நீள, அகல, ஆழம் உள்ள குழி எடுத்து, குழியில் எரு, வண்டல் மண், நிலத்தின் மேல் மண் போன்றவற்றை நிரப்பி, பிறகு சில நாள்கள் கழித்து குழியின் நடுப்பகுதியில் நாற்றுப்பை மூழ்கும் அளவுக்கு கைகளால் குழி எடுத்து, பை நாற்றில் உள்ள பிளாஸ்டிக் கையை அதனுள் இருக்கும் வேர்ப் பகுதிகள் சேதம் அடையாமல், கூர்மையான கத்தி அல்லது பிளேடு கொண்டு கிழித்து எடுத்துவிட்டு, பையில் உள்ள மண் சேதம் அடைந்தவிடாமல் நடவு செய்து, சுற்றிலும் மண் மிதித்து, காற்று புகாமல் செய்து உடனடியாக நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மூன்றாம் நாள், உயிர்த் தண்ணீர் விட வேண்டும். பருவ மழை துவங்கும் முன்னரே நடவு செய்வது நல்ல பலனைத் தரும்.
நாட்டு இலவு ரகத்தின் காய்கள் குட்டையாக இருக்கும். இந்த ரக மரம், நடவு செய்ததில் இருந்து ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் பலன் தரத் தொடங்கும். ஒரு மரத்துக்கு, ஆண்டுக்கு சராசரியாக முந்நூறு காய்கள் வரை காய்க்கும். நாட்டு வகை மரத்தின் ஆயுள்காலம் நூறு ஆண்டுகள் வரை உள்ளது. நாட்டு மரத்தைப் பொதுவாக புதிய நடவு செய்வதில்லை. நாட்டு ரகம்தான் நடவு செய்வேன் என்பவர்கள், மரத்துக்கு மரம் 12 அடி இடைவெளி விடலாம் மிகவும் வளமான மண் என்றால், 15 அடி வரை இடைவெளி விட வேண்டும்.
சிங்கப்பூர் இலவு ரகத்தின் காய்கள் நீளமாக இருக்கும். இந்த ரகம் மரம் நடவு செய்த மூன்றாவது வருடத்தில் இருந்து காய்க்கத் துவங்கும். ஒரு மரத்துக்கு, ஆண்டுக்கு அறுநூறு முதல் எண்ணூறு காய்கள் வரை காய்க்கும். சிங்கப்பூர் இலவ மரத்தின் ஆயுள்காலம் முப்பது முதல் நாற்பது ஆண்டுகள் வரைதான். சிங்கப்பூர் மரத்தின் பக்கக் கிளைகள் நீண்டு வளரும் இயல்பை உடையதால், இருபது அடி இடைவெளி விட்டு மரங்களை நடவு செய்ய வேண்டும்.
நிலத்தின் தன்மை, நமது வசதி வாய்ப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு, பருவ மழையை நம்பியிருப்பவர்கள் மானாவாரியிலும், பாசன வசதி உள்ளவர்கள் இறவையிலும் ஊடுபயிர் செய்யலாம். மானாவாரி நிலம் என்றால், தட்டைப் பயிறு, அவரை, துவரை, எள், கொள்ளு, நரிப் பயிறு போன்ற பயறு வகை தானியங்களை பருவ மழையின்போது விதைக்கலாம்.
இறவை பாசன வசதி இருந்தால், நிலக்கடலை, வெங்காயம், தக்காளி, கத்தரி, கொத்தவரை, வெண்டை போன்ற காய்கறிகள் பயிர்களை பட்டத்தை அனுசரித்து ஊடுபயிராக விளைவிக்கலாம்.
மலை, மலை அடிவாரம் சார்ந்த பகுதிகளில், நிரந்தர ஊடுபயிராக மிளகு, எலுமிச்சை, கிடாரங்காய் போன்றவற்றுடன் அன்னாசி, பீன்ஸ் போன்றவற்றையும் சாகுபடி செய்யலாம். ஊடுபயிர் சாகுபடி செய்தால், நிலம் சுத்தமாக இருக்கும், பண்படும். இலவு வருமானம் வரும் வரை, ஊடுபயிர் மகசூலில் வருமானம் கிடைக்கும்.
இதர பயிர்களைப்போல, இலவு சாகுபடியில் ரசாயன உரத்துக்கோ, பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கோ இடமில்லை. எந்தவித பூச்சி நோய்த் தாக்குதலும் இருப்பதில்லை. இலவம் மரத்தின் இளம் துளிர்களை ஆடு, மாடு, காட்டெருமை போன்றவை விரும்பித் தின்று, மரம் வளர விடாமல் மொட்டையத்துவிடும். இளம்ப பருவத்தில் இதை மட்டும் கவனமாகப் பார்த்துகொண்டால் போதும். குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் உயரம் வளர்ந்த பிறகு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாது.
இலவு சாகுபடியில் மிகப்பெரிய வேலை என்பது அறுவடைதான். இதற்குப் பயிற்சி பெற்ற ஆள்கள் தேவை. இலவ மரம் எளிதில் முறிந்துவிடும் மிக இலகு ரக மர வகை. அதிகக் காய்களின் கனம் தாங்காமல்கூட கிளைகள் முறிந்து விழுந்துவிடும். காய்கள் நிறைந்திருக்கும்போது சற்று பலமான காற்று வீசினால்கூட காய்களில் சில உதிர்ந்துவிடவும், கிளைகள் உடையவும் வாய்ப்பு உண்டு.
நல்ல பயிற்சி உள்ள ஆள்கள் மட்டுமே, அடி மரத்தில் உள்ள முள்ளையும் தாண்டி மரத்தில் ஏறி, நீளமான மூங்கிலால் ஆன தொறட்டி எனும் கொக்கியின் உதவியுடன் கொப்புகளை லேசாக உலுப்பிவிட்டு காய்களை கீழே உதிர்த்துவிடுவர். கீழே உதிர்ந்துள்ள காய்களை பொறுக்கி ஒன்று சேர்த்து சாக்குகளில் கட்டுவார்கள்.
ஏப்ரல், மே, ஜூன் மாதம், இலவு அறுவடைக் காலம். நன்கு விளைந்த வெடிக்கும் பக்குவத்தில் உள்ள இலவம் காய்களை அறுவடை செய்வார்கள். நெற்றுக் காய்களுடன் கீழே விழும் பச்சைக் காய்களை தனியே பொறுக்கி எடுத்து நல்ல வெய்யிலில் காயவைத்து, காய்ந்த நெற்றுகளுடன் சேர்ப்பர். இவ்வாறு அறுவடை செய்யப்படும் காய்கள், சில்லறை வியாபாரிகளால் வாங்கப்பட்டு, மொத்த வியாபாரிகளிடமும், மொத்த வியாபாரிகளிடம் இருந்து பஞ்சுப் பேட்டைக்கும் வந்து சேரும்.
பஞ்சுப் பேட்டை என்பது, இலவம் காய் நெற்றுகளில் இருந்து பஞ்சை நீக்கி மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றும் இடம். மொத்த வியாபாரிகளிடம் வாங்கிய நெற்றுகளில் நன்கு முற்றி வெடிக்கும் நிலையில் உள்ள காய்களில் இருந்து கொட்டையுடன் உள்ள பஞ்சை தனியாகவும், மேல் ஓட்டை தனியாகவும் பிரிப்பர். இலவம் காய் ஓடுகள், வீடுகள், ஹோட்டல்களில் அடுப்பு எரிக்க எரிபொருளாக விற்பனை செய்யப்படுகிறது.
காய்களில் இருந்து பிரிக்கப்பட்ட கொட்டையுடன் உள்ள பஞ்சும், அதன் நடுவில் இருக்கும் கோது எனப்படும் கெட்டித் தண்டுப் பகுதியும் நன்கு காய வைக்கப்படும். இவை நன்கு காய்ந்ததும், இலவம் பஞ்சு அரைப்பதற்கு என தனியே வடிமைக்கப்பட்ட ஜின்னிங் மெஷினில் அரைத்தால், நல்ல மிருதுவான நயம் பஞ்சு பறந்துபோய் தூரத்தில் ஒன்று சேர்ந்து அம்பாரமாகக் குவியும். ஜின்னிங் மெஷின் அருகிலேயே கோதுவும் கொட்டைகளும் தனியே பிரிக்கப்பட்டுவிடும்.
ஒரு சாக்கு மூட்டையில் ஐந்து கிலோ நயம் பஞ்சை அடைத்து சிப்பம் கட்டுவர். நல்ல விலை கிடைப்பதால், இலவம் பஞ்சில் கலப்படும் என்பது மிக சாதாரணமான விஷயம். கலப்படம் இல்லாத தயமான இலவம் பஞ்சு, பட்டுப் போன்ற பளபளப்பும் சற்றே மங்கலான நிறத்தையும் உடையது.
தரமான நயம் இலவம் பஞ்சை ஒரு எளிய சோதனை மூலம் நாமே கண்டறியலாம். சிறிதளவு இலவம் பஞ்சை எடுத்து கையில் பந்துபோல் உருட்டி, நன்கு அழுத்தி கையை விரித்ததும், சட்டென விரிந்து பழைய நிலைமையை அடைந்தால், அது நயமான பஞ்சு. கழிவுப் பஞ்சை அரைத்து இலவம் பஞ்சுடன் கலப்பதுதான் இயல்பான கலப்படம்.
பருத்திப் பஞ்சு சேர்ந்த இலவம் பஞ்சு, நல்ல வெண்மையாகவும், பளபளப்பு குறைந்தும் இருக்கும். கைகளில் அழுத்தி சுட்டி வைத்து கையை விரித்தால் விரிவடையாது. நயமான இலவம் பஞ்சு மெத்தை, படுத்தவுடன் அமுங்கிக் கொடுக்கும். எழுந்தவுடன், மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடும். ஆனால், பருத்திப் பஞ்சு கலந்திருந்தால், மெத்தை திரண்டுவிடும்.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது பாலியஸ்டர் இழை தயாரிப்புத் தொழிற்சாலையில் இருந்து கிடைக்கும் கழிவு பாலியஸ்டர் இழைகளில் இருந்து கிடைத்த செயற்கை பஞ்சை, 1985-ல் ரெக்ரான் என்ற பெயரில் விற்பனை செய்தது. இலவம் பஞ்சு விலையில் பாதி விலையில் இந்த ரெக்ரான் கிடைத்தது. ஒரு சாதாரண தலையணைக்கு ஒரு கிலோ பஞ்சு தேவை. ஆனால், அரை கிலோ ரெக்ரான் பஞ்சே ஒரு தலையணைக்குப் போதுமானதாக இருந்தது. விலையும் குறைவு, அளவும் குறைவு, மிருதுத்தன்மையும் அதிகம் என்பதால், இலவம் பஞ்சு மார்க்கெட்டை ரெக்ரான் சரித்து வீழ்த்தியது.
புதிய மோகத்தில் ரெக்ரானை அங்கீகரித்த மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக செயற்கையின் கெடுதலை உணர்ந்து, மீண்டும் இலவம் பஞ்சு பக்கம் வரவே, சந்தை மீண்டும் நிமிர்ந்தது. ரப்பரைஸ்டு காயர் மெத்தை, பாலியுரேத்தின் ஃபோம் மெத்தை என செயற்கை மெத்தை, தலையணைகள் ஆயிரம் வந்தாலும், இலவு துயில் எனும் மூதுரைக்கு ஏற்ப, இலவு தலையணை, மெத்தையைப் பயன்படுத்தி சுகம் கண்டவர்கள் வேறு பொருளுக்கு மாறமாட்டார்கள்.
வெறும் மெத்தை, தலையணை மட்டும்தான் இலவின் சந்தை வாய்ப்பு என்று நினைத்துவிட வேண்டாம். இலவம் பஞ்சில் இருந்து குளிர்ப் பிரதேசங்களில் பணிபுரியும் ராணுவத்தினருக்கான பாதுகாப்பு ஆடை, மிகக் கடும் குளிரையும் தாங்கும் ரஜாய் மெத்தை, தண்ணீரில் மிதக்கும் லைஃப் ஜாக்கெட், ஜெர்க்கின் என பல்வேறு பொருள்களை தயாரிக்க உதவுவதுடன், மருத்துவத் துறையில் அறுவைச் சிகிச்சைக்கான தையல் நூல் தயாரிக்கவும் இலவம் பஞ்சு பயன்படுகிறது.
குறைவான சாகுபடிச் செலவு, குறைந்த அளவு தண்ணீர்த் தேவை, மிகக் குறைந்த பயிர் பராமரிப்பு, குறைந்த அளவு இடு முதல் செலவு என பல்வேறு ‘குறைவுகள்’, இந்த இலவு சாகுபடியில் உண்டு. ஆனால், இலவு வருமானத்துக்கு ஒருபோதும் குறைவே இல்லை. சிங்கப்பூர் ரகம் என்றால், ஏக்கருக்கு 150 மரம் நடலாம். மரத்துக்கு சராசரியாக, மிகக் குறைந்த அளவு எனக் கணக்கிட்டாலும், எண்ணூறு காய்கள் கிடைக்கும்.
அதன்படி, 150 மரங்களில் இருந்து மொத்தம் 1,20,000 காய்கள் கிடைக்கும். காய்களுக்கு தற்போதைய மார்க்கெட் விலை 70 காசுகள் என்று கணக்கிட்டாலும், 84,000 ரூபாய் கிடைக்கும். இருபது சதவீதம் அறுவடைக் கூலியாக 16,800 ரூபாயைக் கழித்தால் 67,200 கிடைக்கும். இதில் இருந்து பராமரிப்பு செலவு 7,200 ரூபாயைக் கழித்துவிட்டால், மிக மிகக் குறைந்த கணக்கீட்டில் ஒரு ஏக்கருக்கு ரூ.60,000 நிகர லாபமாகக் கிடைக்கும்.
தரிசு நிலங்களிலும், வேலை ஓரங்களிலும் இலவு சாகுபடி செய்வது மிகுந்த பலனைக் கொடுக்கும். அத்துடன், வயதான இலவ மரம், நல்ல விலைக்கு விற்பனை ஆகிறது. இலவ மரத்தை அறுத்து பலகையாக்கி கட்டட சென்ட்ரிங் வேலைக்கும், வீனியர் எடுத்து பிளைவுட் எனும் ஒட்டுப்பலகைக்கும், தீப்பெட்டி செய்ய அறுக்கவும் இலவு பயன்படுகிறது. வயதான காய்த்து ஓய்ந்த இலவ மரத்துக்கும் நிரந்தரமான சந்தை வாய்ப்பு உள்ளது.
இலவம் பஞ்சை எடுத்தபின் கிடைக்கும் இலவ விதைகளுக்குக்கூட நல்ல சந்தை வாய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. இலவு விதையில் இருந்து எண்ணெய் பிழிந்து எடுக்கப்படுகிறது. இலவு எண்ணெய்யில் இருந்து சோப்பு தயாரிக்கப்படுகிறது. உயவுப் பொருளாக லூப்ரிகேட்டிங் ஆயிலாகவும் பயன்படுகிறது. இலவு எண்ணெய்யை ரீபைன்ட் செய்து உணவு எண்ணெய்யில் கலப்படம் செய்கின்றனர் என்ற செய்தியும் அரசல் புரசலாக வருகிறது. இலவு விதையில் இருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் புண்ணாக்கு, மாடு, கோழி போன்றவற்றின் தீவனத்தில் சேர்க்கப்படுகிறது.
நுனி முதல் அடிவரை, விதை முதல் மரம் வரை அத்தனை பாகங்களும் பயன்படும் இலவு சாகுபடி, தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பெரிய அளவில் நடைபெறுகிறது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்