மரபான செங்கற்கள்தான் வீட்டுக்கு வலுவானது என்ற நிலை இப்போது மாறியிருக்கிறது. அதற்கு மாற்றாகப் பலவிதமான மாற்றுச் செங்கற்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவ்வகை மாற்றுக் கட்டுமானக் கற்கள் ஒப்பீட்டளவில் விலை குறைவாகவும் கிடைக்கின்றன. மேலும் சுற்றுச்சூழலுக்கும் உகந்த வகையில் இருக்கின்றன. அம்மாதிரியான கட்டுமானக் கற்களில் ஒன்றுதான் செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் ப்ளாக் (Cellular Lightweight Concrete Blocks).
ப்ளே ஆஷ், சிமெண்ட், ஃபோமிங் ஏஜண்ட் (இது தாவர எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படுகிறது) ஆகிய பகுதிப் பொருள்கள் கொண்டு இந்தக் கட்டுமானக் கற்கள் தயாரிக்கப்படுகின்றன. ஃபோமிங் ஜெனரேட்டரில் உருவாக்கப்பட்ட ஃபோமிங் உடன் ப்ளே ஆஷ், சிமெண்ட் ஆகியவற்றை மிக்ஸர் கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும். சில மணி நேரங்களுக்குப் பிறகு கடினமான ஒரு கலவை உருவாகும். இப்படி உருவாகும் இந்தக் கலவையை அச்சுகளில் ஊற்றி உலரவைக்க வேண்டும். போதுமான நேரம் உலர்ந்த பிறகு கற்களை அச்சுகளிலிருந்து பிரிக்க வேண்டும்.
இது ஜெர்மன் தொழில்நுட்பமான ‘Neopor’ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பெரிய கட்டிடப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் ப்ளாக் உற்பத்தி இயந்திரங்களைத் தனியாக வாங்கித் தயாரிக்கின்றன. இவை இல்லாமல் சிறு சிறு கட்டிடப் பணிகளுக்காக இவ்வகைக் கற்கள் தயாரித்து விற்கப்படுகின்றன. இந்தக் கட்டுமானக் கற்கள் மற்ற மாற்றுச் செங்கற்களைக் காட்டிலும் மிகுந்த பயன்பாடு கொண்டவை.
மரபான செங்கற்களைக் காட்டிலும் இது அதிகப் பளு தாங்கும் திறன் கொண்டது என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதுபோல வெப்பத்தைக் கடத்தும் திறனும் மிகக் குறைவு.
அதனால் வீட்டுக்குக் கோடைக்காலத்திலும் குளுமையைத் தரும். தீயைக் கடத்தும் பண்பும் மற்ற மாற்றுக் கட்டுமானக் கற்களுடன் ஒப்பிடும்போது குறைவு. இது அளவில் பெரியதாக இருப்பதால் செங்கற்களைக் காட்டிலும் சிக்கனமானது.
அதே சமயம் எடையும் குறைவானது. அதனால் கையால்வது எளிது.
எடை குறைவாக இருப்பதால் இதன் உறுதியைப் பற்ற சந்தேகப்பட வேண்டாம். மிகவும் உறுதியானது. கட்டுமானத்தின் மொத்த செலவுகளில் 20 சதவீகிதம்வரை மிச்சமாகும். அளவு பெரிதாக இருப்பதால் கட்டுமானப் பணியை விரைவாக முடிக்க முடியும்.
நன்றி: ஹிந்து
இந்தியாவில் இதை தயாரிக்கும் ஒரு நிறுவனம் பற்றி இங்கே அறியலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்