காலிபிளவர் சாகுபடி மூலம், 80 நாள்களில் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும் என்கின்றனர் இதனை பயிர் செய்யும் விவசாயிகள்.
காலிபிளவர் அதிக சுவையுள்ள உணவுப் பொருள். காலிபிளவரில் கால்சியம் அதிகம் உள்ளது. இது நரம்பை பலமாக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது நல்ல உணவு. எனவே இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
காலிபிளவர் கன்று ஒன்று 50 பைசாவுக்கு ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கின்றன. ஒரு ஏக்கர் நிலத்தில் 15 ஆயிரம் கன்றுகள்வரை வைக்கலாம். கன்றுகள் வைத்து முறையாக பராமரித்து வந்தால் 60 நாள்களில் பூக்கள் வர ஆரம்பிக்கும். 80 நாள்களில் பூக்களை அறுவடை செய்ய முடியும்.
காலிபிளவர் செடிகள் வாங்குவது மற்றும் உரங்கள், உழவுக் கூலி, களைச் செடிகள் எடுப்பது, பூச்சிக் கொல்லி மருந்துகள் என மொத்தம் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது.
காலிபிளவரின் ஒரு செடியில் இருந்து ஒரே ஒரு பூ மட்டுமே வரும். ஒரு ஏக்கரில் நடப்படும் 15 ஆயிரம் செடிகளில் 7,500 செடிகள் நல்ல முறையில் வளர்ந்து பூக்கள் வந்தால் கூட போதுமானது.
ஒரு காலிபிளவரின் விலை ரூ.20-க்கு விற்றால் 7,500 பூக்கள் மூலம் ரூ.1,50,000 ஆயிரம் கிடைக்கும். செலவுகள் போக 80 நாளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் எடுக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.திடீர் விலை குறைவு ஏற்பட்டு பாதி விலைக்கு விற்றால் கூட ரூ.50 ஆயிரத்துக்கும் அதிக அளவில் லாபம் கிடைகிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சிங்கனூர் கிராமத்தில், காலிபிளவர் சாகுபடி செய்யும், பண்ருட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் கூறும்போது –
- காலிபிளவர் நல்ல லாபம் தரும் பயிர். குறிப்பாக பனிக்காலங்களில் பயிர் செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். கார்த்திகை மாதத்துக்கு முன் பயிர் செய்து தை மாதத்துக்குள் மகசூல் எடுத்துவிட வேண்டும்.
- முறையாக, பராமரித்தால் 80 நாள்களில் மகசூல் எடுக்கலாம். சில நேரங்களில் ஒரு பூவின் விலை ரூ.40-க்கு கூட விற்பனை ஆகும்.
- காலிபிளவர் சாகுபடி செய்யும் கால நிலைகளையும், மண்ணின் தன்மையையும், அறுவடை செய்யும்போது காலிபிளவர் பூக்களின் மார்க்கெட் நிலவரத்தையும் விவசாயிகள் தெரிந்து கொண்டு பயிர் செய்தால் அதிக லாபம் பெறமுடியும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்ணின் தன்மைக்கே காலிபிளவர் அதிகம் விளைகிறது. கண்டமங்கலம், திண்டிவனம் பகுதிகளில் காலிபிளவரை சிறப்பாக விளைவித்து காண்பித்துள்ளனர் விவசாயிகள்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்