கோத்தகிரி பகுதியில் ‘பேஷன் புரூட்’ விளைச்சல் அமோகமாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வால்பேரிக்காய், ரம்பூட்டான், பிளம்ஸ், பேஷன் புரூட், ஆப்பிள் உள்பட பல்வேறு வகையான பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. ஒரு சில இடங்களில் விவசாயிகள் தோட்டங்களில் பழ மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்கள். பொதுமக்கள் சிலரும் தங்களது வீடுகளில் பழ மரங்களை நட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் கிளப் ரோடு மற்றும் ரைபிள் ரேஞ்ச் பகுதிகளில் உள்ள வீடுகளில் ‘பேஷன் புரூட்’ (Passion fruit) பழ மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது மருத்துவ குணம் கொண்ட பேஷன் புரூட் விளைச்சல் அமோகமாக உள்ளது.
இது குறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:-
பேஷன் புரூட் பழங்கள் கோத்தகிரி பகுதியில் உள்ள சீதோஷ்ண நிலைக்கு நல்லமுறையில் வளரும் தன்மை உடையது. இந்த பழத்தை மாதுளம் பழத்தை போலவே விதையுடன் சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி, நார்சத்து காணப்படுகிறது.
பழத்தின் தோலை நீக்கி பழச்சாறாக இரவு நேரத்தில் குடித்தால் நல்ல தூக்கம் வருவதுடன் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. தற்போது ஒரு கிலோ பழம் விவசாயிகளிடம் இருந்து ரூ.40 முதல் ரூ.50 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. கடைகளில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பேஷன் புரூட் பழத்தின் நாற்றுகள் குன்னூர் பழப்பண்ணையில் விவசாயிகள், பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை நட்டு வைத்து வளர்த்தால் சில ஆண்டுகளிலேயே நல்ல பலனை தருகிறது.
நன்றி: தினத்தந்தி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்