கூடுதல் லாபம் பெற சாமந்தி பூவை பயிரிடலாம் என்று விவசாயி கங்காதரன் தனது அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த கொடுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கங்காதரன், கடந்த 3 ஆண்டுகளாக ஏரோடில் ரக சாமந்தி பூ (மேரி கோல்டு) பயிர் செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறியது:
- டிசம்பர், ஜனவரி மாதத்தில் குழித்தட்டு முறையில் நாற்றங்கால் அமைத்து, 15 முதல் 18 நாள்களில் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 5 அடி இடைவெளியில் இரு வரிசைகளாக, இரண்டரை அடிக்கு 1 என்ற இடைவெளியில் 20 சென்ட் அளவுக்கு நடவுச் செய்துள்ளேன்.
- ரசாயன உரம் அதிகம் சேர்க்காமல் தொழுஉரம் மற்றும் இயற்கை உரங்களைப் போட்டு நடவு செய்த 30 நாள்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும்.
- பூக்கள் 2 நாள்களுக்கு ஒருமுறை சராசரியாக 20 கிலோ கிடைக்கிறது.
- 1 கிலோ பூவின் விலை ரூ.50-க்கு விற்பனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. 25 முறை பூப்பறிக்கப்படுகிறது.
- 3 முறை பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. 2 முறை களையெடுக்கப்படுகிறது.
- தேவைக்கேற்ப சொட்டுநீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. நீரின் மூலம் மேலுரம் இடப்படுகிறது.
- 100 நாள்களில் 20 சென்ட்டில் ரூ.25 ஆயிரம் கிடைக்கிறது.
- சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பூக்களின் விலை அதிகமாக உள்ளதால் நிறைந்த வருமானத்தால் நாங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு உள்ளோம்.
- 20 சென்ட்டுக்கு உழவு மற்றும் தொழு உரத்துக்கு ரூ.1,600, விதைக்கு ரூ.2,400, தென்னை நார்கழிவு மற்றும் குழித்தட்டுக்கு ரூ.200, நாற்று தயார் செய்வதற்கு ரூ.600, நடவுக்கு ரூ.300, நீர்ப் பாய்ச்ச ரூ.2,500, உரத்துக்கு ரூ.500, பூப்பறிக்க ரூ.1,000, மருந்து மற்றும் தெளிப்புக்கு ரூ.600, களையெடுக்க ரூ.300 என மொத்தம் ரூ.9,900 செலவு ஆகிறது.
- சொட்டுநீர்ப் பாசன முறையில் 6 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் செய்துள்ளேன். செவந்தப்பட்டி கத்தரி 1.5 ஏக்கரிலும், சோனல் ரக வெண்டை 50 சென்ட் இடத்திலும், சுரக்காய், மிளகாய் மற்றும் கீரை வகைகள், காய்கறிகள் சொட்டு நீர்ப் பாசனத்தின் மூலம் சிறந்த முறையில் பயிர் செய்து வருகிறேன்.
- இதைத்தவிர கடந்த 3 ஆண்டுகளாக குழித்தட்டு முறையில் தென்னை நார்க் கழிவை பயன்படுத்தி நாற்றுகள் தயாரித்து விவசாயிகளுக்கு நாற்று உற்பத்தி செய்து வழங்கி வருகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
பி.கங்காதரனின் தொடர்பு எண்: 09865276372 படங்கள்: கே.சத்தியமூர்த்தி
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “சாமந்தி பூ பயிரிட்டால் வருமானம்”