சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் இளைஞர்கள்

நாகப்பட்டினத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

நாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. குறிப்பாக புத்தூர், செல்லூர், பாலையூர், கிழக்குக் கடற்கரை சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம், கல்லார், கருவேலங்கடை, பாப்பாகோயில், சின்னதும்பூர், பெரிய தும்பூர், கருங்கண்ணி, திருக்குவளை, திருமருகல், பனங்குடி என நாகை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் அளவுக்கதிகமான சீமைக்கருவேல மரங்கள் காணப்படுகின்றன.

சீமைக்கருவேல மரங்கள் காரணமாக விவசாயம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. அத்துடன் 30 அடி வரை சென்று நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.

இந்த சீமைக்கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது.

Courtesy: Dinamani

இந்நிலையில், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு நாகை பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் திட்டமிட்டனர். அதன்படி விடுமுறை நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவர்கள் குழுவாக களமிறங்கி இப் பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த குழுவினர் தங்களது வீடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி, மரங்களை அகற்றிய பின், அவைகள் மீண்டும் வளராத வகையில் தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர்.

புத்தூர் அருகே சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்த குழுவினர் கூறியது:

கடந்த இரண்டு வாரங்களாக இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. முதலில் சாலை ஓரங்களில் காணப்படும் மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. தனியார் இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு அவர்களிடம் பேசி முடிவெடுக்கப்படும்.

சமூக வலைதளங்கள் மூலமாக சீமைக்கருவேல மரங்களின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன்மூலம் எங்கள் ஆதரவை திரட்டுகிறோம். சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பேச குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் அவர்களிடம் பேசி உரிய முடிவெடுக்கப்படும்.விடுமுறை தினத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் இந்தப் பணியை தொடங்கியுள்ளோம் என்றனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *