கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்ற சுற்றுச்சூழல் நூல்கள் பற்றி ஒரு பார்வை:
சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு l ராமச்சந்திர குஹா
(தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்)
வரலாற்று ஆசிரியரான ராமசந்திர குஹா, சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்துகளுக்காகவும் நன்றாக அறியப்படுபவர். அவர் மேற்கொண்ட உலகச் சுற்றுப்பயணங்கள், ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நூல் இது. இந்தியச் சூழலுடன் உலகச் சூழலையும் பொருத்திப் பார்த்து அவரால் எழுத முடிந்திருக்கிறது. ஆங்காங்கே, இடம்பெறும் காந்தியக் கருத்துகள் இன்றைய சுற்றுச்சூழல் இயக்கங்களின் முன்னோடியாக, அப்போதே காந்தி இருந்திருக்கிறார் என்பதை நமக்குப் புலப்படுத்துகின்றன. முக்கியமான இந்த நூலை இன்னும் பொறுப்புடன் மொழிபெயர்த்திருக்கலாம்.
எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 09942511302
தட்டான்கள், ஊசித்தட்டான்கள்: அறிமுகக் கையேடு l ப. ஜெகநாதன், ஆர். பானுமதி
தட்டான்களைப் பற்றிய உருப்படியான நூல்கள் தமிழில் இல்லை என்ற குறையைப் போக்கும் நூல் இது. தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படும் தட்டான்கள்-ஊசித்தட்டான்களில் 73 வகைகளைப் பற்றி இந்தப் புத்தகம் விளக்குகிறது. அறிமுகப் பகுதியில் தட்டான்களின் உலகைப் பற்றி விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கையேட்டின் மிக முக்கியமான அம்சம், தட்டான்களின் ஒளிப்படங்கள் . அழகாகவும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் கையேடு இது.
க்ரியா, தொடர்புக்கு: 07299905950
அறிவியல், ஜனநாயகம், இயற்கைச் சூழல் பாதுகாப்பு l மாதவ் காட்கில்
(தமிழில்: டாக்டர். ஜீவானந்தம்)
இந்தியாவின் பிரபல சுற்றுச்சூழல் அறிஞர்களுள் ஒருவரான மாதவ் காட்கில் எழுதியுள்ள புத்தகம். இந்திய இயற்கைச் சூழலை நமது அரசுகளும் பெருநிறுவனங்களும் குழிதோண்டிப் புதைத்துவிட்டிருக்கும் நிலையில், தற்போதைய நிலைமையை மதிப்பீடு செய்து காட்கில் எழுதியிருக்கிறார். அறிவியல், தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் ஒருங்கே அக்கறை கொண்டிருந்த நேருவின் லட்சியங்கள் கைவிடப்பட்டு, சுரண்டலை அடிப்படையாகக்கொண்ட தொழில் வளர்ச்சி மட்டுமே முன்னெடுக்கப்படுவதை காட்கில் தோலுரிக்கிறார்.
மெத்தா பதிப்பகம், தொடர்புக்கு: 09094869175
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்