நாட்டில் பெய்யும் மழை நீரில் 65 சதவீதம் கடலில் கலக்கிறது. நதிகளைத் தூர்த்துவிட்டோம். பிறகு, தண்ணீர் கடலுக்குத்தானே போகும். அப்புறம் தண்ணீர் பஞ்சம், நதிகளை இணைப்போம் என்று போகாத ஊருக்குப் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறோம்.
மற்றொரு புறம் 7 கோடி பேர் ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதுதான் இந்தியா. ஒரு பக்கம் இருக்கும் தண்ணீர் பயன்படாது, மக்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மற்றொருபுறம் தண்ணீரே கிடைக்காமல் மக்கள் வாடுவார்கள்.
காணாமல் போகும் நிலம்
அதேபோல, இந்தியாவில் 70 கோடி பேர், அதாவது மக்கள்தொகையில் 3-ல் 2 பங்கினர் சமைப்பதற்கு இன்னமும் விறகையே பயன்படுத்தி வருகின்றனர். இன்னமும் இப்படி நாகரிக வளர்ச்சி அடையாமல் இருக்கிறார்களே, என்று நினைக்கிறீர்களா?
அதேநேரம் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் உருவான புதிய நகரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 2,774. இதற்காக எத்தனை கிராமங்களும் காடுகளும் அழிக்கப்பட்டிருக்கும்?
அதுமட்டுமல்ல, 2026-க்குள் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களுக்காக 61,653 சதுரக் கிலோ மீட்டர் நிலப் பரப்பு கையகப்படுத்தப்பட இருக்கிறது.
இப்படி நாட்டிலுள்ள சுற்றுச்சூழல்-வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிய புள்ளிவிவரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
சுற்றுச்சூழல் மலர்
இந்தியாவின் முதன்மை சுற்றுச்சூழல், அறிவியல் இதழான டவுன் டு எர்த்தின் இரண்டாவது ஆண்டு மலரான ‘ஸ்டேட் ஆஃப் என்விரான்மென்ட் 2015’ மேற்கண்ட பிரச்சினைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஆழமாக ஆராய்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு, சுகாதாரப் பிரச்சினை, மின்சாரம்-எரிசக்தி, நகரமயமாக்கல், கனிமச் சுரங்கம், விவசாயம், பருவநிலை மாற்றம் எனப் பல்வேறு பிரச்சினைகள் இதில் அலசப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல்-சமூக ஆர்வலர் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய இந்த மலர், கடந்த ஆண்டில் நிகழ்ந்த அனைத்து முக்கிய சுற்றுச்சூழல் வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளை அறிவியல் பூர்வமாக முன்வைக்கிறது. டவுன் டு எர்த் ஆசிரியர் சுனிதா நாராயண் உள்ளிட்ட முன்னணி சுற்றுச்சூழல் எழுத்தாளர்கள், கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
சுற்றுச்சூழலைப் பற்றி கரிசனம் மிக்கவர்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உண்மைதானா என்று சந்தேகப்படுபவர்கள் என இரு தரப்பினருமே வாசிக்க வேண்டிய புத்தகம்.
தொடர்புக்கு: www.cseindia.org,
rchandran@cseindia.org / 9810641996.
நன்றி:ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்