சுற்றுச் சூழலியலை காக்க சில வழிகள்…!

னிதன் வாழ்வதற்கு, அவன் வாழ்கிற சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருப்பதும் மிக முக்கியம். ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உள்ள பூமியையும், அளவற்ற இயற்கை வளத்தையும் விட்டுச் செல்வதுதான்  நமக்குப் பிறகு வரும் சந்ததிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கைமாறு. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைக் காக்கும் விஷயத்தில் அரசாங்கம் உடனடியாகக் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன…?

தனது ஆலோசனைகளைச் சொல்கிறார்  சூழலியல் களச் செயற்பாட்டாளார் மற்றும் எழுத்தாளர் நக்கீரன்…

1. தமிழர்கள் நிலங்களின் பண்புகளுக்கு ஏற்ப அவற்றை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை… என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்தார்கள். இதுபோன்ற தொலைநோக்கு பார்வை வேறு எந்த இனத்திலும் கிடையாது. தமிழ்நாட்டின் நிலம் அனைத்தும் பாலையாக மாறிக்கொண்டுவருவதுதான் இப்போதைக்கு நாம் சந்திக்கும் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னை. இதைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் உடனடியாகத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

2. குறிஞ்சி நிலமான மலைப்பகுதிகளில் நம் முன்னோர்  எவ்விதமான வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த மாட்டார்கள். காரணம், பூமியின் ரத்தநாளங்களாக இருக்கும் நதிகளின் ஊற்றுக்கண்கள் எல்லாம் மலைகளில்தான் இருக்கின்றன. அங்கிருந்துதான் ஆயிரக்கணக்கான ஓடைகள் உற்பத்தியாகின்றன. எனவே மலையின் இயல்பைக் கெடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால்,  கோடை வாசஸ்தலம் என்கிற பெயரில் மலையைக் குடியிருப்புப் பகுதியாகவும், வணிகக் தளங்களாகவும், தேயிலைத் தோட்டங்களாகவும் அத்துமீறி ஆக்கிரமித்து வைத்திருக்கிறோம். இவற்றை உடனடியாக நிறுத்த நடவடிக்கை தேவை.

3 குறுகிக்கொண்டே வரும் காடுகளின் பரப்பளவைப் பெருக்க வேண்டும். குறிப்பாக சோலைக்காடுகளின் பெருக்கம் மிகவும் முக்கியம். ஆங்கிலேயர்கள் காலம் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை யாருக்கும் சோலைக்காடுகள் என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஆனால், இந்தக் காடுகள்தான், மலைகளில் பெய்யும் மழை நீரை ஆறு மாதங்கள் வரை தேக்கிவைத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கசியவிடும். இந்தக் காடுகள் இருந்த இடங்கள் எல்லாம் இப்போது தேயிலைத் தோட்டங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இதை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

4. தமிழகத்தில் மலைக்காடுகள் மட்டுமல்ல. கோயில் காடுகளும் இருந்திருக்கின்றன. இவற்றின் பரப்பளவு மூன்று சதுரக் கிலோமீட்டர் முதல் 200 சதுரக் கிலோமீட்டர் வரை. இதற்கான ஆதாரங்கள் இன்றைக்கும் அரசு ஆவணக் கோப்புகளில் இருக்கின்றன. மீண்டும் அதே பரப்பளவுக்கு கோயில் காடுகள் உருவாக்கப்பட வேண்டும். ஏனென்றால் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளைக் காட்டிலும்  அதிக அளவுக்கு வெப்பத்தைக் குறைப்பதிலும், கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுவதிலும் கோயில் காடுகள்தான் அதிகப் பங்காற்றுகின்றன.

5. ஆசியாவிலேயே மிகப் பெரிய சமவெளிப் பகுதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள்தான். இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக விவசாயம் செய்யப்படுகிறது. உலகத்தில் வேறு எங்கும் தொடர்ந்து 5000 வருடங்களாக ஒரு நிலம் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு இல்லை. எனவே டெல்டா மாவட்டங்களை விவசாயப் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயத்தைப் பாதிக்கக்கூடிய தொழிற்சாலை அங்கே வர முடியாது. அப்படி அறிவிக்கப்படாததால்தான் மீத்தேன் திட்டம், நரிமணம் எரிவாயு  திட்டங்கள்… போன்றவை விவசாயத்துக்கும் விவசாயிக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.

6 நாட்டு மீனவர்கள் கடல் பல்லுயிர் பெருக்கம் பற்றிய அறிவுகொண்டவர்கள். எந்தக் காலத்தில் என்ன வகையான மீனைப் பிடித்தால் கடலில் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படாது என்பது அவர்களுக்குத் தெரியும். வணிக நோக்கத்தில் மீன் பிடிப்பவர்கள் பயன்படுத்தும் விசைப்படகுகளும், இரட்டை மடி வலைகளும்தான் கடலின் பல்லுயிர் பெருக்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. இதனால் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே நாட்டு மீனவர்களை  கடல் பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் சில பிரத்யேக உரிமைகளைப் பெறமுடியும்.

7. அத்தனை அரசியல் கட்சிகளும், அரசுகளும் மணற்கொள்ளை, இயற்கை வளங்களைச் சூறையாடுதல் ஆகியவை குறித்த தங்களது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தங்களது தேர்தல் அறிக்கைகளிலும், அரசாங்கம் அமைத்த பிறகும் சுற்றுச்சூழல் இயற்கை வளங்களைக் கையாளுதல் சம்மந்தமாக தங்கள் நிலைப்பாடு என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். ஆற்று மணல் எடுத்தல், கிரானைட் எடுத்தல் போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் அளவு குறித்து, ஆண்டுக்கு ஒரு முறை சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ ‘வெள்ளை அறிக்கை’ சமர்ப்பிக்க வேண்டும். அப்போது அவர்கள் குறைத்து சொன்னாலோ அல்லது கூடுதலாகச் சொன்னாலோ மக்கள் கேள்வி கேட்க வசதியாக இருக்கும்.

8. உருகுவே, ஈக்வெடார் போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக  எந்த ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும், அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவார்கள். கையெழுத்து இயக்கத்தை நடத்துவார்கள். 25 சதவிகிதத்துக்கு மேல் எதிர்ப்பு இருந்தால் உடனடியாக அந்தத் திட்டத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளும். ஆனால், இந்தியாவில் பொதுவாக்கெடுப்பு நடத்தாமல், பொதுமக்கள் கருத்துக்கேட்பு மட்டுமே நடத்துவார்கள். இயற்கை வளங்கள் சம்பந்தமான திட்டங்களைச் செயல்படுத்தும்போது, லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பின்பற்ற வேண்டும் .

9. நம் நாட்டில் ஒரு வெளிநாட்டுத் தொழிற்சாலை அமைக்கும்போது, அதில் இவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கும், இவ்வளவு வருவாய் பெருகும் என்றெல்லாம் அறிவிக்கிற அரசு, அந்தத் தொழிற்சாலையால் பயன்படுத்தப்படும் மறை நீர் (virtual water) எவ்வளவு என்பதையும் தெரிவிக்க வேண்டும். உதாரணமாக மூன்று நிமிடங்களில் ஒரு கார் தயாரிக்கிறோம் என்று பெருமையாகச் சொல்வார்கள். ஆனால், அந்தக் காரைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு எவ்வளவு தெரியுமா..? சுமார் 4 லட்சம் லிட்டர். மூன்று நிமிடங்கள் ஒரு கார் வீதம் தயாரிக்கப்படும் அத்தனை கார்களும் தமிழகத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் வெளிநாடுகளுக்குத்தான் அனுப்பப்படுகின்றன. சென்னையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாட காரணம்  ஏன் என்பது இப்போது உங்களுக்கே புரியும்.

10. மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தால்கூட தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு இயற்கை வளச் சுரண்டல் செய்யும் திட்டங்களை அறிவித்துவிடும். உதாரணம்… டெல்டா மாவட்டம் நரிமணத்தில் இருக்கும் ஓ.என்.ஜி.சி. இதனால் திருவாரூர் மாட்டத்தில் அநேகப் பிரச்னைகள் இப்போதும் இருக்கின்றன. ஆனால், இது மத்திய அரசு திட்டம் என்று மாநில அரசு நழுவிக்கொள்கிறது. ஆனால், இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசாங்க வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் மக்கள் வாழும் இடங்களுக்கு தீங்களிக்கும் திட்டங்களை அப்புறப்படுத்த முடியும். இப்படித்தான் அஸ்ஸாமில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் போராட்டத்தின் மூலம் ஓ என் ஜி.சி திருப்பி அனுப்பட்டது. ஏன் இது மாநில அரசின் வரம்புக்குள் வரவேண்டும் என்றால்… ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காகவாவது மாநில அரசு இதுபோன்ற தீங்குவிளைவிக்கும் திட்டங்களைத் திருப்பி அனுப்பும்.

11. புட்டிநீர் விற்பனையை முழுமையாகத் தடைசெய்ய வேண்டும். காரணம், தனியார் செய்யும் இந்த வேலையை ஏன் அரசால் செய்யமுடியாது. தவிரவும், இந்தப் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னைத் துண்டித்துக்கொள்கிறது என்றுதானே அர்த்தம். எனவே தனியார் செய்யும் தண்ணீர் வியாபாரத்தை முற்றிலும் தடுக்க வேண்டும்.

12. ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் குடித்தண்ணீருக்கு முதலிடம் கொடுத்துவிட்டுத்தான் அந்தப் பகுதியில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. உதாரணம் சிவகங்கை மாவட்டம் பரமாத்தூர். இங்கே ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால், கோகோ கோலா கம்பெனிக்கு போர்வெல் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்ச அனுமதி இருக்கிறது. ஏன் அந்த நீரை சிவகங்கை பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு அரசாங்கம் வழங்கக் கூடாது. ஆனால், திருச்சி காவிரியில் இருந்து, கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் ராமநாதபுரம் சிவகங்கை பகுதிகளுக்கு தண்ணீர் போவது ஏமாற்று வேலைதானே?

13. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். கடல் நீரைக் குடிநீராக்க பயன்படுத்தப்படும் ஒரு நாள் மின்சாரத்தை வைத்து 10 கிராமங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்துவிடலாம். சென்னையின் குடிநீர் தேவை 13 டி.எம்.சி. ஆனால், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 2 டி.எம்.சி குடிநீர் மட்டும்தான் கிடைக்கிறது. மீதமுள்ள 11 டி.எம்.சி தண்ணீரை எப்போதும் போல மற்ற பகுதியில் இருந்துதான் பெறுகிறது சென்னை குடிநீர் வாரியம். சென்னைக்கு குடிதண்ணீர் வாங்கும் 29 ஏரிகளில் 10 ஏரிகளைக் காணவில்லை. அந்தப் பத்து ஏரிகளில் இன்றைக்கு நகரமாகிவிட்ட கொளத்தூர், விருகம்பாக்கம் போன்ற பகுதிகள் அடக்கம். மீதமுள்ள ஏரிகளைத் தூர் வாரி அவற்றின் கொள்ளவை உயர்த்தினாலே சென்னை மாநகர மக்களின் குடித்தண்ணீர் தேவை தன்னிறைவை நோக்கி நகர ஆரம்பித்துவிடும்.

14. சிறுதானியத்தை ஊக்குவிக்கப்பதுபோல மருத்துவத் துறையில் சித்த மருத்துவத்தை அதிகமாக ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் நமது பாரம்பர்ய மூலிகைகளை மீட்டெடுக்க முடியும். இதனால் சுற்றுச்சூழலும் மேம்படும். டெங்கு, சிக்குன்குன்யா, வைரல் ஃபீவர்… போன்றவற்றுக்கெல்லாம் என்னென்னவோ மருத்துவம் பார்த்துவிட்டு கடைசியில் நாம் வந்து நின்றது நிலவேம்பு கஷாயத்திடம்தான். மூலிகைகள் அதிகமாகப் பயிரிடப்படுவது மானாவாரி நிலங்களில்தான். மானவாரி நில விவசாயத்தில் ரசாயன உரங்களுக்கு வேலையே இல்லை. இதனால் மானாவாரி நிலத்தின் இயல்புத் தன்மை காக்கப்படும்.

15. கடலோரத்தில் இருக்கும் அலையாத்திக் காடுகள், அக்கறையோடு பராமரிக்கப்பட வேண்டும். சுனாமியைத் தடுத்து அது தரும் ஆபத்தில் இருந்து மக்களைக் காத்தது மட்டும் இதன் முக்கியத்துவம் அல்ல. இன்றைக்கு தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மீன்கள்தான் உணவு. அவற்றின் மூலம் மட்டுமே மக்களுக்கு புரோட்டீன் சத்து கிடைக்கிறது. அப்படிப்பட்ட 80 சதவிகித மீன் உற்பத்திக்கு அலையாத்திக் காடுகளும், கழிமுகப்பகுதிகளுமே  ஆதாரமாக இருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் பிச்சாவரம் – முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளுக்கு இடையே 14 அனல் மின் நிலயங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாக அப்போதை திமுக அரசாங்கம் சொன்னது. பின்னர் வந்த அதிமுக அரசாங்கம், அதைக் கிடப்பில் போட்டுவிட்டது. அந்தத் திட்டத்தை உடனடியாக அரசு கைவிடவேண்டும். ஏனென்றால், இந்த அனல்மின் நிலையங்கள்,  அலையாத்திக் காடுகளுக்கு எமனாக வந்து முடியும். இதனால் மீன் வளம் பாதிக்கப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகிவிடும். ராமநாதபுரத்தில் இருந்து புதுகோட்டை மாவட்டம் வரைக்கும் உள்ள கடல் பகுதியை சேற்றுக் கடல் என்பார்கள். இது இறால் உற்பத்திக்கு சாதகமான நிலப்பகுதி. காரணம் இவை எல்லாம் ஒரு காலத்தில் அலையாத்திக் காடுகள் இருந்த பகுதிகள்.

16 சென்னை போன்ற மாநரங்களில் வாகனங்களால் உண்டாகும் காற்று மாசு என்பது அபாயகரமாக இருக்கிறது. செயின்ட் தாமஸ் போன்ற உயரமான இடங்களில் நின்று,  இரவு நேரங்களில் பார்த்தால் நகரத்தின் மேலே காற்றில் சிவப்புப் படலம் படர்ந்திருப்பதைக் காண முடியும்… இவை எல்லாம் வாகனங்கள்,  தொழிற்சாலைகள் வெளியேற்றிய கார்பன் மோனாக்ஸைடு. இவை ஓசோன் படலத்துக்குக் கீழே இன்னொரு படலமாகத் தேங்கியிருக்கும். அவ்வளவும் நச்சுக்கள். எனவே வெளிநாட்டுக் கார் கம்பெனிகள் இங்கு வந்து தொழில் தொடங்கும்போது தமிழகம் மற்றும் இந்திய தேவைக்கு ஏற்ப கார்களை உற்பத்தி செய்தால் போதும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். ஏனெனில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு கார் உற்பத்தி செய்யும் அளவுக்கு காரின் தேவை தமிழகத்துக்கோ, இந்தியாவுக்கோ இல்லை.

17. சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய எதிரி பாலீத்தின் பைகள் என்றால், அதைவிட வீரியமான எதிரி சின்னச் சின்ன பாலித்தீன் சாஷேக்கள்தான். இவற்றின் உற்பத்தியைத் தடை செய்யவேண்டும். வீட்டுச் சாக்கடையில் இருந்து பாதளச் சாக்கடை வரை அனைத்திலும் அடைப்புகளை உண்டாக்குவதில் இவற்றின் பங்கு மிக அதிகம். ஒருவர் நாளொன்றுக்கு 15 பாலீத்தீன் பைகள் பயன்படுத்தினால்,  சாம்பு  கவர், பாக்குத் தூள் பாக்கெட், பருப்பு பொடி பாக்கெட், தண்ணீர் பாக்கெட் என பாலீத்தீன் சாஷேக்களை 50-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பயன்படுத்துகிறோம். இவை மக்காதத் தன்மை கொண்டவை. இவை மண்வளத்தை அதிகமாகப் பாதிக்கின்றன. பாலீத்தின் பைகளை பொறுக்கிக்கூட மறுசுழற்சிக்கு விடலாம் என்கிறார்கள். ஆனால், பாலீத்தின் சாஷேக்களைப் பொறுக்கி மறுசுழற்சிக்கு அனுப்பும் வாய்ப்பு மிக மிக கடினம்.

19. 1920 வாட்டர் ஆக்ட் ( Water act ). ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இந்தச் சட்டம் சொல்வெதல்லாம் ஊராட்சிக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் எதையும் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் கலக்கக்கூடாது என்பதுதான் . ஆனால், இது சட்டமாக மட்டுமே இருக்கிறது; நடை முறையில் இல்லை. சென்னையில் அப்படி கலந்துதான், கூவம், அடையாறு போன்ற ஆறுகளைச் சாக்கடையாக்கிவிட்டோம். இதனைத் தடுக்கவும் கழிவுகளைச் சரியான முறையில் மேலாண்மை செய்யவும்,  திட்டங்களும் சட்டங்களும் தேவை. மயிலாடுதுறை சத்தியாவனம் கால்வாயில்,  சரியாக சுத்திகரிக்கப்படாத ஊராட்சிக் கழிவுகள்  கலந்ததன் மூலம், அந்தக் கால்வாய் பாசனம் பெறும் 50-க்கும் மேறபட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊர் மக்கள், சத்தியாவனம் கால்வாயை சின்னக் கூவம் என்றே அழைக்கிறார்கள். இது ஒரு சின்ன உதாரணம்தான். இதுபோல தமிழ்நாட்டில் அநேக உதாரணங்களைச் சொல்ல முடியும்.

20. ஈக்வெடார் நாட்டில் தாய்மண் உரிமைச் சட்டம் என்று நிலப் பாதுகாப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறார்கள். இயற்கை வளங்களுக்கு எதிரான எல்லாத் திட்டங்களையும் இந்தச் சட்டம் எதிர்க்கிறது. இயற்கை வளங்கள் சல்லிசாகச் சூறையாடப்படும் தமிழகத்தில்,  இந்தச் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். இயற்கை வளத்துக்கு எதிரான ஒரு திட்டத்துக்கு அரசாங்கம் அனுமதிக்கொடுத்தாலும், இந்தச் சட்டத்தின் மூலம் அந்தத் திட்டத்தை நிறுத்திவைக்க முடியும்.

மனித உரிமையைவிட, நிலம், இயற்கை வளப் பாதுகாப்புக்கு இது மிக முக்கியத்துவம் தருகிறது. எந்தவொரு தனிமனிதனும் இத்திட்டத்தின் மூலம் நிலம் இயற்கை வளங்களைப் பாதுக்காக்க நீதிமன்றத்தில் வழக்குத்  தொடுக்க முடியும்.  இந்தச் சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த 13 லத்தீன் அமெரிக்க நாடுகள், இதை அமல்படுத்தும் முயற்சியில் இருக்கின்றன. இதன் மூலம் நிலத்துக்கு எதிரான கார்ப்பரேட் கம்பெனிகளின் லாப வெறியைத் தடை செய்ய முடியும்.
– கதிர்பாரதி

நன்றி: ஆனந்த விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “சுற்றுச் சூழலியலை காக்க சில வழிகள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *