செண்டுமல்லி சாகுபடியில் சாதிக்கும் ஒய்வு பெற்ற காவல் துறை ஆணையர்

பணியில் இருக்கும், ஐம்பது வயதை நெருங்கிய பெரும்பாலானோரின் கவலை… பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றித்தான் இருக்கும். ஆனால், முறையாகத் திட்டமிட்டால், ஓய்வுக்குப் பிறகும் நிறைவான வாழ்க்கை வாழ முடியும் என்பதை பலர் நிரூபித்துள்ளனர். அந்த வகையில், தனது செயல்பாடுகளால் மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார், புதுக்கோட்டை மாவட்டம், பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். தமிழக காவல்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தற்போது முழு நேர விவசாயி.

பசுமை வயல்களுக்கு இடையில் மண்புழு உரத்தை சலித்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனைச் சந்தித்தோம். புன்னகையைப் பூச்செண்டாக்கி வரவேற்றவர், ”ஓய்வுக்குப் பிறகு என்னை ஆரோக்கியமா வாழ வெச்சுட்டு இருக்குறது விவசாயம்தான்.

‘பசுமை விகடன்’ படிச்ச பிறகுதான் விவசாயத்து மேல, குறிப்பா இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்துச்சு.

இந்த எட்டு ஏக்கர் நிலத்துல நாலு வருஷமா விவசாயம் பாக்குறேன். நாலு ஏக்கர்ல தென்னை இருக்கு. ஒரு ஏக்கர் தென்னையில மட்டும் ஊடுபயிரா மா இருக்கு. தனியா மூணு ஏக்கர்ல கரும்பு இருக்கு. கரும்பைத் தவிர, மத்த பயிருக்கெல்லாம் இயற்கை உரங்களைத்தான் கொடுக்குறோம். ஒரு ஏக்கர் நிலத்துல வழக்கமா நெல் போடுவேன்.

நெல் சாகுபடியில பெருசா லாபம் இல்ல. கரன்ட் இல்லாத காலத்துலயும் கஷ்டப்பட்டு, பராமரிச்சாலும்… அறுவடை செஞ்ச பிறகு, ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சாலே பெரிய விஷயம். அதனால இந்த வருஷம் வேற பயிரைப் போட்டு பாக்கலாம்னு முடிவு செஞ்சு… நெல்லுக்கு பதிலா செண்டுமல்லி சாகுபடி செஞ்சுருக்கேன். குறைவான தண்ணி, பராமரிப்புலயே இதுல நல்ல லாபம் கிடைக்குது.

தோட்டக்கலைதுறை உதவி இயக்குநர் குருமணியும், வேளாண் அலுவலர் அண்ணாமலையும்தான் இந்த செண்டிப்பூவைப் பத்தி சொன்னாங்க. ஆனா, எங்க பகுதியில யாருமே இதை சாகுபடி செஞ்சது இல்ல.

‘இது சரியா விளையாது நஷ்டம்தான் வரும்’னு மத்த விவசாயிக பயமுறுத்தினாங்க. ஆனாலும் துணிச்சலா அரை ஏக்கர் நிலத்துல மட்டும் சாகுபடி பண்ணினேன்” என மாற்றுப்பயிருக்கு மாறிய கதை சொன்ன பாலகிருஷ்ணன், அரை ஏக்கர் நிலத்தில் செண்டுமல்லி சாகுபடி  செய்யும் முறையைச் சொன்னார்.

அது இங்கே பாடமாக…

ஒரு விதை… ஒரு நாற்று!

செண்டு மல்லியின் வயது 120 நாட்கள். அரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய 2 ஆயிரத்து 500 விதைகள் தேவைப்படும்.

ஒரு விதையில் இருந்து ஒரு நாற்றுதான் உற்பத்தி செய்ய முடியும். நாற்று தயாரிப்புக்காக உள்ள பிரத்யேகமான பிளாஸ்டிக் குழித்தட்டில் ஒவ்வொரு குழியிலும் முக்கால் பகுதிக்கு, தென்னைநார்க் கழிவை நிரப்பி ஒவ்வொரு விதையை வைத்து… ஈரமான நார்க்கழிவைப் போட்டு குழியை நிரப்ப வேண்டும் (குழித்தட்டு கிடைக்காதவர்கள், சிறிய பிளாஸ்டிக் டீ கப்பை பயன்படுத்தலாம்).

எப்போதும் ஈரம் இருக்குமளவுக்கு தண்ணீர் தெளித்து வந்தால், 23-ம் நாள், நாற்று நடவுக்கு தயாராகி விடும். சாகுபடி நிலத்தில், ஒன்றரை டன் அளவுக்கு மண்புழு உரம் அல்லது குப்பை எருவை இட்டு, இரண்டு சால் புழுதி உழவு ஓட்டி, ஒன்றே கால் அடி அகலம், முக்கால் அடி உயரத்துக்கு இரண்டு அடி இடைவெளியில் பார் அமைக்க வேண்டும். நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப, பாரின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம்.

2 அடி இடைவெளி !

நிலத்தில் தண்ணீர் விட்டு, எல்லா பார்களிலுமே ஒரே சீராக இடது அல்லது வலது ஓரத்தில் மட்டும், 2 அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்து 3-ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். 7-ம் நாள் அரை அடி உயரத்துக்கு செடி வளர்ந்திருக்கும். 8 மற்றும் 30-ம் நாட்களில் களையெடுத்து, ஒவ்வொரு செடிக்கும் தலா ஒரு கையளவு மண்புழு உரத்தை வேர்பகுதியில் வைத்து, மண் அணைக்க வேண்டும்.

பதினெட்டாம் நாளில் இருந்து அறுவடை !

18-ம் நாளில் இருந்து தினமும் பூவை அறுவடை செய்யலாம். 25-ம் நாள் பூண்டு-பச்சைமிளகாய் கரைசலை, 1:40 என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் (தலா ஒரு கிலோ பூண்டு, பச்சைமிளகாய், வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாக உரலில் இட்டு இடித்து… பானையில் இட்டு ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றி இறுக்கமாக வேடு கட்டி விட வேண்டும். 3 நாட்கள் கழித்து, இக்கலவையை எடுத்துப் பயன்படுத்தலாம்). இதனால் பூச்சிகள் தாக்காது.

50-ம் நாள், 100 கிலோ மண்புழு உரம், மண்புழு உரம் சலித்து எடுக்கப்பட்ட 100 கிலோ குப்பை எரு ஆகியவற்றைக் கலந்து, ஒவ்வொரு செடியின் வேர்ப்பகுதியிலும் பகிர்ந்து போட வேண்டும். நிலத்தை இரண்டாகப் பிரித்து சுழற்சி முறையில் அறுவடை செய்ய வேண்டும்.

சாகுபடிப் பாடம் முடித்த பாலகிருஷ்ணன், ”இது வீரிய ரக செண்டி. பாக்குறதுக்கு அழகா, மஞ்சள் நிறத்துல பளிச்சுனு கண்ணைப் பறிக்கும். இயற்கை இடுபொருள்களை மட்டும் கொடுக்கறதுனால, இங்க விளையுற செண்டி பூ, பறிச்ச பிறகும் மூணு நாளைக்கு வாடாம இருக்கு. சுழற்சி முறையில பறிக்கிறதால தினமும் சராசரியா 20 கிலோ அளவுக்கு பூ கிடைக்குது. பறிக்கறதுக்கு ரெண்டு ஆளுங்களே போதும். பூ நல்லா பெருசா இருக்கறதுனால, பறிக்கவும் சுலபமா இருக்கு. வேலைக்கு ஆளுங்க கிடைக்கலைனாலும் நாமளே பறிச்சுடலாம்.

என்கிட்ட ஒரு மாடுதான் இருக்கு. வெளியில ஒரு டன் சாணத்தை 700 ரூபாய்னு வாங்குவேன். அதோட மெஷின்ல போட்டு தூளாக்குன மா, தேக்கு சருகுகள், கரும்புத் தோகைகள் எல்லாத்தையும் கலந்து மண்புழு உரம் தயாரிப்பேன். இப்படிக் கிடைக்கிற மண்புழு உரத்தை ஒரு கிலோ 10 ரூபாய்னு வித்துடுவேன். மாசத்துக்கு 600 கிலோ அளவுக்கு விற்பனை ஆகுது. மண்புழு உரத்தை சலிச்சதுக்குப் பிறகு கிடைக்குற குப்பை எருவை, பயிர்களுக்குப் போட்டுடுவேன்” என்று போகிற போக்கில் அசத்தலான தொழில்நுட்பம் ஒன்றை அள்ளிவிட்டதோடு…

40 ஆயிரம் லாபம் !

”நடவுல இருந்து இப்ப 48 நாளைக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் 600 கிலோ அளவுக்கு மகசூல் கிடைச்சிருக்கு. புதுக்கோட்டை பூ மார்க்கெட்டுல ஒரு கிலோவுக்கு சராசரியா 50 ரூபாய் அளவுக்கு விலை கிடைக்குது. இன்னும் 50 நாளைக்கு பூ பறிக்கலாம். எப்படிப் பார்த்தாலும், இன்னும் 600 கிலோ அளவுக்குக் கிடைக்கும்.

நடவு செஞ்ச ரெண்டாவது வாரத்துல கடுமையான புயல், மழையடிச்சதுல பெரும்பாலான செடிக கீழ சாஞ்சிடுச்சு. தேங்கியிருந்த தண்ணியை வடிகட்டி, மறுபடியும் செடிகளை நிமித்தி வெச்சோம். இனிமே பொழைச்சி வருமானு பயந்துக்கிட்டுதான் இருந்தேன். ஆனாலும் தாக்குப்புடிச்சி வந்துடுச்சு.

வளர்ச்சி வேகம் குறைஞ்சதால எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்கல. அப்படியிருந்தும் இந்த அரை ஏக்கர்ல இது வரை 30 ஆயிரம் ரூபாய் கிடைச்சுருக்கு. இன்னும் 30 ஆயிரம் ரூபாய்க்கு பூ கிடைக்கும். மொத்தம் 60 ஆயிரம் ரூபாய். செலவு போக, 40 ஆயிரம் ரூபாய் லாபமா மிஞ்சும்.

புயல் அடிக்காம இருந்துருந்தா, இன்னும் கூடுதலா லாபம் கிடைச்சுருக்கும். எப்படிப் பார்த்தாலும்… நெல்லோட ஒப்பிடும்போது, இதுல பல மடங்கு கூடுதல் லாபம். அதனால, இன்னும் அதிகமான நிலத்துல இதை சாகுபடி பண்ணப் போறேன்” என்று தெம்பாகச் சொன்ன பாலகிருஷ்ணன்,

”வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும், பரபரப்பா வேலை செஞ்சுட்டு ரிட்டயர்டு ஆன பிறகும், என்னை உற்சாகமா வெச்சுருக்குறது விவசாயம்தான்” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,பாலகிருஷ்ணன், அலைபேசி: 9865938452 .

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *