திருவள்ளூர் பகுதியில் விளைவிக்கப்படும் துளசி இலைகள் ஆந்திரத்தில் உள்ள திருப்பதி கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், பராமரிப்பு குறைவு மற்றும் நாள்தோறும் வருவாய் தரும் பயிராக இருப்பதால் விவசாயிகள் துளசி சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து திருப்பதிக்கு…: துளசி செடிகள் வயல் வரப்புகளிலும், சாலையோரங்களிலும் தன்னிச்சையாக வளரும் மூலிகை வகைச் செடியாகும். இச்செடி 50 செ.மீ. உயரம் வரை வளரக் கூடியது.
மேலும், இச்செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மூலிகைச் செடி என்பதோடு, மூலிகைகளின் அரசியாகவும் துளசி இருந்து வருகிறது. இவை நாள்தோறும் கோயில்களில் பூஜை, பூமாலைகள் கட்டுதல், மூலிகை மருந்துகள் தயார் செய்தல் உள்பட பல்வேறு காரியங்களுக்கு பயன்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் பகுதிகளில் விளைவிக்கப்படும் துளசி இலைகள் சென்னை கோயம்பேடு சந்தை, வைத்திய வீரராகவர் கோயில் உள்பட பல்வேறு கோயில்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், இங்கிருந்து தினமும் பூஜைக்காகவும், மாலை கட்டுவதற்காகவும் பக்தர்கள் துளசியை வாங்கி திருப்பதிக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
நாள்தோறும் வருவாய் :
நாள்தோறும் வருவாய் ஈட்டித் தரும் பயிராகவும் இருப்பதால் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள அம்பத்தூர், ஆவடி, ஆயலூர், கிளாம்பாக்கம், பாக்கம், கோயம்பாக்கம், வதட்டூர், பெரியபாளையம், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 250 ஏக்கரில் விவசாயிகள் துளசி செடிகளை பயிரிட்டு வருகின்றனர்.
இப்பயிருக்கு இடுபொருள்கள் மற்றும் பராமரிப்புச் செலவும் குறைவு என்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர். அதோடு, விவசாயிகள் பயிரிட்டுள்ள பரப்பளவுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுக்கு நாள்தோறும் வருவாய் கிடைக்கும் பயிராகவும் இருந்து வருகிறது.
ஒரு முறை முதலீடு; 4 ஆண்டுகள் பலன்:
அதோடு, ஒருமுறை முதலீடு செய்து பயிரிட்டால் மறுதாம்பு முறையில் 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து அறுவடை செய்ய முடியும். இதுபோன்ற காரணங்களால் விவசாயிகளின் விருப்பப் பயிராகவும் துளசி மாறி வருகிறது. திருவள்ளூர் பகுதியில் ஆயலூர், பிஞ்சிவாக்கம், கிளாம்பாக்கம், கோயம்பாக்கம், வதட்டூர், பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பெருமளவில் துளசி சாகுபடி நடைபெற்று வருகிறது.
துளசி ஒரு மூலிகைச் செடி என்பதோடு, மூலிகைகளின் அரசி எனவும் அழைக்கப்படுகிறது. இப்பயிர் செய்ய உகந்த பருவம் மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் ஆகும். எல்லாவிதமான மண் வகைகளிலும் துளசி வளரும் என்பதால் வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் செம்பொறை மண் மிகவும் ஏற்றதாகும்.
பயிரிடுதல் மற்றும் பராமரிப்பு:
ஒரு ஏக்கருக்கு நாற்றங்காலில் நாற்றுகள் உற்பத்தி செய்ய 150 முதல் 200 கிராம் விதைகள் தேவைப்படும். நிலத்தை நன்கு உழுது தேவையான அளவிற்கு மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து விதைத்தவுடன் நீர் தெளிப்பதன் மூலம் அடுத்து வரும் 10 நாள்களில் முளைத்துவிடும். அதைத் தொடர்ந்து, நிலத்தை 2 அல்லது 3 முறை உழவு செய்ய வேண்டும். அதில் கடைசி உழவின் போது 5 டன் தொழு உரம் போட்டு மண்ணுடன் கலக்க வேண்டும்.
இந்த நாற்றுகள் 6 வாரங்களில் 4-5 இலைகளுடன் காணப்படும். அப்போதுதான் விளைநிலத்தில் நடவு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும். அதேபோல், விதைகளை நேரடியாக விதைத்தும் சாகுபடி செய்யலாம். அதாவது விதைகளை மணல் சேர்த்து 50 முதல் 60 செ.மீ. இடைவெளி விட்டு, வரிசையாக விதைத்து அவற்றை மேல்மண் கொண்டு மூடிவிட வேண்டும்.
அதேபோல், மருதாம்பு முறையில் தண்டுகள் மூலம் சாகுபடி செய்ய துளசியின் நுனிகளை வெட்டி அக்டோபர், டிசம்பர் மாதங்களில் நடவு செய்தால் 90 சதவீதம் முளைத்துவிடும். இதற்கு 8-10 கணுக்கள் மற்றும் 10-15 செ.மீ. நீளமுடைய துண்டுகளை நட வேண்டும்.
இதுகுறித்து வதட்டூரைச் சேர்ந்த விவசாயி வசந்தராஜன்(45) கூறியது:
- இப்பகுதியில் அரை ஏக்கரில் துளசி பயிரிட்டுள்ளேன். இப்பயிருக்கு வாரந்தோறும் அல்லது 10 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
- பயிரிட்ட 60-ஆவது நாளில் இருந்து ஒவ்வொரு பகுதியாக தேவையான அளவுக்கு அறுவடை செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் 30 கிலோ எடை கொண்ட துளசி மூட்டை ரூ.400 முதல் ரூ.450 வரையில் விற்பனையாகிறது.
- அரை ஏக்கரில் பயிர் செய்வதற்கு ரூ.5 ஆயிரம் வரையில் செலவாகும். இதில் இருந்து 6 டன் துளசி இலைகள் உற்பத்தி செய்யமுடியும்.
- இப்பகுதியில், பெருமாள் கோயில்கள் மற்றும் பல்வேறு கோயில்கள் உள்ளதால் நாள்தோறும் துளசி அதிகமாக தேவைப்படுகிறது. இங்கிருந்து பக்தர்கள் வேண்டுதலுக்காக வீரராகவ பெருமாள் கோயிலுக்கும், திருப்பதிக்கும் துளசிகளை வாங்கி அனுப்புகின்றனர்.
- இதில் விலை குறைந்தால் சிறிதளவு மட்டும் அறுவடை செய்து விட்டு, மற்றதை அப்படியே செடியிலேயே விட்டு விடுவோம்.
- இதில் ஒரு முறை முதலீடு செய்தால் மறுதாம்பு முறையில் 4 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும் என்பதால் துளசி விவசாயிகளின் விருப்பப் பயிராகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்