பழங்காலத்தில் விவசாயிகள் கடைபிடித்து வந்த எளிய தொழில்நுட்பங்கள்தான், தற்போது விரிவுபடுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு தொழில்நுட்பம்தான், தானியக்குதிர்.
முன்பு நெல், சோளம் உள்ளிட்ட தானியங்களை நீண்ட காலம் சேமித்து வைக்க, தானியக்குதிர்களைத்தான் நம் முன்னோர் பயன்படுத்தியுள்ளனர். 1930-ம் ஆண்டுக்குப் பிறகு, பதனப்படுத்துதலில் புகுத்தப்பட்ட நவீனம் காரணமாக, தானியக்குதிர்கள் வழக்கொழிந்து விட்டன. ஆனாலும், தமிழ்நாட்டில் பச்சமலை, ஜவ்வாது மலை போன்ற மலைப்பகுதிகளில் தானியக்குதிரில்தான் தானியங்களை சேமித்து வைக்கிறார்கள், பழங்குடியின மக்கள். பழங்காலத்தில் நம்முன்னோர்கள் வீட்டில் தானியங்களை சேமித்து வைக்கப் பயன்படுத்திய நீண்ட கூம்பு வடிவ பானை போன்ற அமைப்புக்களுக்கும் பெயர் குதிர்தான்.
முன்பெல்லாம் நெல் அறுவடைக்கு சென்றால் நெல்தானியங்களை மட்டுமே கூலியாக பெறுவது வழக்கம். கூலியாக பெற்று வந்த நெல்லை வீட்டில் உள்ள குதிர்களில்தான் சேமித்து வைப்பது வழக்கம். மேலும், அவர்கள் அவ்வப்போது குடும்ப தேவைக்கும், அவசர தேவை மற்றும் பஞ்சம் வரும் காலங்களில் குதிரில் உள்ள நெல்லை நேரடியாகவோ அல்லது நெல்லை விற்று பணமாகவோ பயன்படுத்தி வந்தனர். வசதி வாய்ப்புகள் இருந்தவர்களானாலும் தானிய குதிர் சேமிப்பு பழக்கத்தை கடைபிடித்து வந்திருக்கிறார்கள். குதிரில் போடப்படும் தானியங்களை வளர்பிறையில், ராசி பாத்து தன் பிள்ளைகள் கையால் போட்டால் நெல் குறையாது என்பது ஐதீகம். குதிரில் இருந்து நெல்லை எடுக்கும்போதும் நல்லநாள் பார்ப்பார்கள். பொங்கல், சித்திரை திருநாள் என நல்ல நாட்களுக்கெல்லாம் குதிருக்கு மஞ்சள் பூசி பொட்டு வைத்து வழிபடும் வழக்கமும் நம்மவர்களிடம் இருந்து வந்துள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா, “இன்றைய நிலையில் அரசு அதிகளவில் தானியக் கிடங்குகளை அமைத்துள்ளது. ஆனால், அவற்றில் தானியங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறிதான். அது ஒருபுறம் இருக்கட்டும். இந்த தானியக் கிடங்குகளுக்கு முன்னோடி, நம் முன்னோர் பயன்படுத்திய தானியக்குதிர்தான். இதை, பத்தாயம், தும்பை எனப் பல பெயர்களில் சொல்லி வந்துள்ளனர். இதில், இயற்கை முறையில் தானியங்கள் சேமிக்கப்படுவதால் உண்ணும் மக்களுக்கும் நன்மைதான். பூச்சிகள் தாக்காமல் இருக்க இதில், இயற்கை மூலிகை பூச்சிவிரட்டிகள், மூலிகைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். தற்போது பச்சமலைப்பகுதிகளில் மலைவாழ் மக்கள் தானியக்குதிரில்தான் தானியங்களை சேமிக்கிறார்கள். மலைவாழ் மக்கள் சோளம், நெல் போன்ற தானியங்களையே அதிக அளவில் சேமிக்கின்றனர். சேமிக்கும் தானியங்கள் பூமிக்கு கீழ், பூமிக்கு மேல் என இரு முறைகளில் குதிர் அமைக்கப்படுகிறது. இதில் தானியங்கள் மட்டுமல்லாமல் மஞ்சள், லவங்கம் போன்றவற்றையும் சேமிக்கிறார்கள். இதில் விதைகளையும் சேமிப்பதுண்டு” என்றவர் தொடர்ந்தார்.
“குதிரின் உள்புறம் அழிஞ்சில் மரக் கிளைகளால் அமைக்கப்பட்டிருக்கும். இதன் மேற்கூரை கூடை பின்னுவதைப்போல பின்னப்பட்டு இருக்கும். அதன் மேற்புறமாக கோரைப்புல், துவரஞ்செடி மற்றும் மூங்கில் கிளைகளும் பொருத்தப்பட்டிருக்கும். குதிரின் சுவர், சேற்றால் மெழுகப்பட்டிருக்கும். தரைப்பகுதி, சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும். மலைக்கிராமங்களில் உள்ள குதிர்கள் மரம், மண், செங்கல் ஆகியவற்றைக் கொண்டு சிறு அளவில் உருவாக்கப்பட்டவை. இதில் சேமிக்கும்போது, தானியங்கள்… பூச்சி தாக்குதல், மழையால் ஈரப்பதமாகுதல், பூஞ்சணம் பிடித்தல் போன்ற பாதிப்புகளுக்குள்ளாவதில்லை. குதிரில் வைக்கப்படும் பொருட்கள் 2 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கின்றன” என்றார்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்