நீலகிரி கூடலுாரில், சிறு விவசாயிகளை ஊக்குவித்தால், ஏலக்காய் சாகுபடி கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
வாசனை திரவியங்களில் ஒன்றான ஏலக்காய், அனைத்து இடங்களிலும் பயிர் செய்யப்படுவதில்லை. கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரமுள்ள மிதமான சீதோஷண நிலை கொண்ட பகுதிகளில் மட்டுமே பயிராகிறது. தமிழகத்தில், நீலகிரி மாவட்டம் கூடலுார், கம்பம், போடி, திண்டுக்கல், கீழ்பழனி பகுதிகளில் ஏற்ற காலநிலை இருப்பதால், விவசாயிகள் ஏலக்காய் சாகுபடி செய்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலுாரில் தேவையான மழை, அதற்கான காலநிலை இருப்பதால், எஸ்டேட்டுகள் மட்டுமின்றி, சிறு விவசாயிகளும் ஏலக்காய் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ளனர். இச்செடிகள் ஆண்டுக்கு ஒரு முறை பலன் தருபவை. முதிர்ந்த ஏலக்காயை பறித்து, உலர்த்தி பதப்படுத்தி தரம் பிரித்து விற்பனை செய்கின்றனர்.அதன்படி, 8 மி.மீ., அளவுள்ள ஏலக்காய் முதல் தரமாகவும், 7 மற்றும் 6 மி.மீ., அளவுள்ள ஏலக்காய்கள், இரண்டு மற்றும் மூன்றாம் தரமாகவும் பிரிக்கப்படுகின்றன. ஏலச் செடிகளுக்கு நடுவே, ஊடு பயிராக கிராம்பு, குறுமிளகு, பாக்கு, தென்னை மரங்களும் பயிரிடுகின்றனர்.
ஏலக்காய் வியாபாரி பாபு கூறுகையில், “கடந்த ஆண்டு சீசனில், ஏலக்காய் கிலோவுக்கு 580 ரூபாய் வரை விலை கிடைத்தது; அதிகபட்சமாக 900 ரூபாய் வரை விலை கிடைத்தன. தற்போது, கிலோ 700 முதல் 750 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. கூடலுார் பகுதியில் ஆண்டுக்கு 500 டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது,” என்றார். மாநில தோட்டக்கலைத்துறை, சிறு விவசாயிகளை மேலும் ஊக்கப்படுத்தினால், இப்பகுதியில் ஏலக்காய் உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்