மண்ணால் புதிய கட்டிடக் கலை!

 இப்போது எந்த கட்டிடம் பார்த்தாலும் சிமெண்ட் இரும்பு கம்பி வைத்தே கட்ட படுகிறது. டிவி மற்றும் பத்திரிகைகளில் இரும்பு கம்பிக்கு பெரிய அளவில் விளம்பரம்! ஏதோ பிஸ்கட் அரிசி விளம்பரம் போல!!
இந்த சிமெண்ட் இரும்பு கம்பி மூலம் கட்ட பட்ட வீடுகள் வெயிலை அப்படியே கிரகித்து இரவில் வெளியில் விடும். இதனால் தான் கான்க்ரீட் மூலம் கட்டப்பட்ட அபர்ட்மெண்ட் போன்ற வீடுகளில் ஏசி இல்லாமல் இரவில் இருக்க முடியாத சூழ்நிலை.

இந்த நிலையில், இயற்க்கையில் கிடைக்கும் மண் மூலம் வீடு கட்டும் கலையை மீண்டும் புதிப்பித்து வரும் இளைஞர்கள் பற்றிய கட்டுரை – ஹிந்துவில் இருந்து 

மண்ணால் புதிய கட்டிடக் கலை!

சூழலுக்கு (Environment) உகந்த கட்டிடங்கள்தாம் இன்றைய காலத்தின் தேவை. ஏனெனில் பூமியின் வெப்பம் அதிகரிக்கக் காரணமான வெப்பம் கணிசமான அளவு கட்டுமானத் தொழிலால் உண்டாகிறது. சிமெண்ட், செங்கல், கம்பி என ஒவ்வொரு கட்டுமானப் பொருளைத் தயாரிக்கும்போது அதிகமான அளவு வெப்பம் வெளியேற்றப்படுகிறது. இன்றைய நிலையைக் கருத்தில் கொண்டுதான் லாரி பேக்கர் (Laurie Baker) போன்ற கட்டிடக் கலை முன்னோடிகள் சூழல் சார்ந்த கட்டிடக் கலையை வலியுறுத்தினர்.

அந்த வழிக்கு இன்றைக்கு இளைஞர்கள் சிலர் திரும்பியிருக்கிறார்கள். இரும்பு , மரம், காங்கிரீட், ஜல்லி என எதுவுமில்லாத கட்டிடம் ஒன்றை குக்கூ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தும் பள்ளிக்காக உருவாக்கியிருக்கிறார்கள்.

மெக்சிகோவில் பணி புரிந்து வரும் வருண் தவுட்டம், பெங்களூருவில் உள்ள மேட் இன் எர்த் என்ற நிறுவனத்தைச்சார்ந்த ஜெரமி, ஸ்ருதி ஆகியோர்தான் அந்த மூன்று இளம் கட்டுமானக் கலைஞர்கள். அவர்களுடன் கட்டுமானத் துறை தொடர்பான ஒரு நேர்காணல்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் ?

ஜெரமி குதம், ஸ்ருதி ராமகிருஷ்ணா:

நாங்கள் அனைவரும் மண் கட்டிடக் கலையின் ஆர்வலர்கள். 2008-ம் ஆண்டு புதுச்சேரியின் ஆரோவில்லில் உள்ள எர்த் இன்ஸ்டிட்யூடில் சந்தித்தோம். அங்கு நெருக்கப்பட்ட மணல் கற்களை (compressed earth blocks) பெருவாரியான பயன்பாட்டுப் பொருளாக ஆக்கும் புதிய ஆலோசனைகளின் அடிப்படையில் பணிபுரிந்து கொண்டிருந்தோம். அன்றிலிருந்து எங்களுக்கான பாதைகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டோம்.

வருண் தவுட்டம்:

நெருக்கிய மணல் கற்களை உருவாக்கும் முயற்சிக்குத் தொடக்க முதலீடு நிறைய தேவைப்படும் என்பதை உணர்ந்து கொண்டோம். உள்ளூர் அளவிலான சிறிய திட்டங்களுக்கு இது கட்டுப்படியாகாது. எனவே நெருக்கிய மணல் கற்களை உருவாக்கும் இன்னொரு வழிமுறையான ‘இறுக்கிய மண்’ (Rammed earth) உருவாக்கும் முறையைத் தேர்ந்தெடுத்தேன். இந்த முறையைக் கையாண்டு பெங்களூருவில் உள்ள யெலஹங்காவில் எனது பெற்றோரின் வீட்டைக் கட்டினேன். கட்டிடக் கலையில் இதுதான் எனது முதல் திட்டம்.

இதை நிறைவு செய்த பின் பெங்களூருவில் உள்ள வேறு சில கட்டுமானத் திட்டங்களையும் நிறைவேற்றத் தொடங்கினேன். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்று உண்டு. அதுதான் 2009-ம் ஆண்டு இறுக்கிய மண் உருவாக்க முறையில் காவல்துறை ஆணையருக்கான மூன்றடுக்கு இல்லத்தைக் கட்டினேன்.

இந்தத் துறையில் எனது மேல் படிப்பைத் தொடர்வதற்காக கனடா சென்றேன். தற்சமயம் மெக்சிகோவின் வளைந்த கூரை முறைக் கட்டுமானத்தில் சுண்ணாம்பைப் பயன்படுத்தும் முறை குறித்தும் பயின்று கொண்டிருக்கின்றேன்.

ஃபிரான்ஸ், ஸ்பெயின், மெக்சிகோ நாட்டைச் சார்ந்த இத்துறை சார் வல்லுநர்களிடமும், தலைமுறை தலைமுறையாக வரும் திறன்களையும் தொழில் நுட்பங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள உள்ளூர் கொத்தனார்களிடமும் தொடர்ந்து பயின்றுவருகிறேன்.

மண், இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தி கனடா, இந்தியா, மெக்சிகோ போன்ற பகுதிகளில் சிறு சிறு திட்டங்களில் ஈடுபட்டுவருகின்றேன்.

ஜெரமி, ஸ்ருதி:

எங்களின் ஆரோவில் சந்திப்பிற்குப் பிறகு நாங்கள் மூவரும் சேர்ந்து பல்வேறுபட்ட திட்டங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றோம்.

எடுத்துக்காட்டாக ஃபிரான்ஸில் சமூகச் சூழலியல் வீடுகளைக் கட்டுதல், இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் பகுதிகளில் உள்ள கைவினைஞர்களுடன் இணைந்து கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல், கட்ச் பகுதியின் உள்ளூர் தேவைகளை உள்ளடக்கிய பள்ளிக்கூடக் கற்கை நெறிகளை மேம்படுத்துதல், குஜராத்தின் புஜ் பகுதியில் பொதுமக்களுக்கான தளம் ஒன்றை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கூட்டாக ஈடுபட்டுள்ளோம்.

சூழலுக்கும் வாழ்வாதாரத்திற்கும் ஏற்றவாறு நிலைத்த தன்மையில் உதவக்கூடிய வகையில் உள்ளூர் மரபுகளையும் வளங்களையும் எப்படி மறு ஆக்கம் செய்வது என்ற உந்துதல்தான் நாங்கள் மேற்கொள்ளும் திட்டங்களில் எங்களை வழி நடத்துகிறது.

எங்களது விருப்பங்களை ஒருங்கிணைத்து “Made In Earth Collective” என்ற நிறுவனத்தை 2014-ம் ஆண்டு நாங்களிருவரும் (ஸ்ருதி , ஜெரமி) தொடங்கினோம். இந்தப் பூமியின் மீதான எங்களின் நேசத்தை வெளிப்படுத்தும் விதமாக பயிற்சிப் பட்டறைகளை இயன்றவரை கூடுதலாக நடத்திவருகிறோம்.

சூழலியலுக்கு உகந்த கட்டிடக் கலையை தேர்ந்தெடுத்தீர்கள்?

வருண் : நான் கட்டிடக் கலைஞர் சித்ரா விஸ்வநாத்திடம் கட்டிடக் கலையைப் பயின்றேன். அவர் கட்டிடக் கலையைச் சூழலியல் முறையில் அணுகியவர். இது என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல ஆரோவில்லிலும் இதற்கான ஊக்கத்தைப் பெற்றேன்.

ஜெரமி, ஸ்ருதி : எங்களைப் பொறுத்தவரை மனிதர்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுமே இயன்ற அளவு நீடித்த தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

வெவ்வெறு நிதி நிலைகளுக்கேற்ப வெவ்வேறு தீர்வுகள் என மற்ற துறைகளில் இருப்பதைப் போலவே கட்டிடக் கலைக்கும் உண்டு.

வழமையான கட்டும் முறைக்கு ஆகும் செலவில் ஒரு பங்கு அல்லது அரைப் பங்குதான் மணல் உள்ளிட்ட இயற்கை சார்ந்த கட்டிடக் கலைக்கும் ஆகும். எங்களைப் பொறுத்தவரை இவ்விரண்டு வழியிலான வகை மாதிரிகளும் இருக்கும்போதுதான் கட்டிடக் கலையின் வெவ்வேறு வெளிப்பாடுகளின் பன்மயத்தன்மை பேணப்படும்.

லாரி பேக்கர் பாணி கட்டிடங்களில் சுவற்றின் மீது கலவை பூசாமல் செங்கல்லின் இயல்பான சிவந்த நிறம் தெரியும்படியாக விட்டு விடுவார்கள். அதற்கான காரணமாக சுவரின் மூச்சுக்காற்றைத் தடுக்கக் கூடாது என்பார்கள். ஆனால் உங்கள் பாணி கட்டிடக் கலையில் மண் சாந்து கொண்டு பூசுகிறீர்கள். இது சுவரின் சுவாசத்தைத் தடுக்காதா?

மண் பூச்சும் அது சார்ந்த பண்பாட்டு வெளிப்பாடுகளும் நாகரிகத்தின் தொடக்க நிலையோடு தொடர்புடையவை. சுட்ட செங்கற்களெல்லாம் வருவதற்கு முந்தியவை. மண் சுவர்களும் மண் பூச்சும் சுட்ட செங்கல்களை விட நன்கு சுவாசிக்கும். அவற்றின் அனல்சார் பொருண்மையானது ஈரப்பதத்தை ஒழுங்குபடுத்துவதில் சிறந்தது. அத்துடன் சுட்ட செங்கற்களினால் கட்டப்பட்ட சுவர்களை விட நன்கு சுவாசிப்பவை.

அரிதான மேல்மண்ணைப் பயன்படுத்தியே சுட்ட செங்கற்கள் உண்டாக்கப்படுகின்றன. இப்படிப் பயன்படுத்தப்பட்ட பிறகு அந்த மேல் மண் எடுக்கப்பட்ட விவசாய நிலங்கள் தரிசாக மாறிவிடுகின்றன அல்லது உரங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

இதற்கு மாறாக கனிம அடிமண்ணையே நாங்கள் பயன்படுத்துகின்றோம். அடுத்ததாக பெரும்பாலான நடைமுறைகளில் செங்கற்களைச் சுடுவது என்பது மிகவும் மாசுண்டாக்கும் தொழில்கள். அத்துடன் பெரும்பாலான இடங்களில் அவை காங்கிரீட் கற்களை விடச் சூழல்மீது கூடுதல் தாக்கங்களை ஏற்படுத்தும்.

கட்டிடம் கட்டப்போகும் மண்ணின் என்னென்ன தன்மைகளைக் கணக்கில் எடுக்க வேண்டும்?

மண்ணைக் கொண்டு வீடு கட்டுவது என்பது எளிதானது. ஒவ்வொரு கிராமத்திற்கும் / குடியிருப்பிற்கும் அருகில் பொருத்தமான மண் ஆதாரம் இருக்கும். பெறுமதி மிக்க மேல் மண்ணை எடுத்த குவித்த பிறகு அடி மண்ணைத்தான் நாம் தோண்ட வேண்டி வரும். அவை இயல்பிலேயே களிமண் தன்மை கொண்டதாக இருக்கும்.

மண்ணைக் கண்டுகொள்வது என்பது அறிவியல் தன்மையுடான ஒரு கலை. கிடைக்கும் மண்ணை பொறுத்துதான் மண் சார்ந்த கட்டுமானமும் இருக்கும். இல்லையெனில் மணல், சரளைக்கற்கள், நார் அல்லது இவை போன்ற துணைப் பொருட்களைக் கொண்டுதான் மண்ணை மாற்றியமைக்க வேண்டும்.

சுடப்படாத செங்கல்கள், கவிகை மாடங்கள், வளைவுகள் போன்றவை உங்களின் கட்டுமானக் கலையில் சிறப்பிடத்தைப் பெறுகின்றன. அவற்றின் உறுதித் தன்மை, சிறப்பம்சங்கள் குறித்து கொஞ்சம் சொல்லுங்கள் ?

வருண்: 2014 ஆம் ஆண்டிலிருந்தே நான் நெருக்கி நிலைப்படுத்தப்பட்ட செங்கற்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டுவிட்டு கதிரவனின் ஒளியில் உலர்த்தப்பட்ட செங்கற்களையே பயன்படுத்திவருகிறேன். அவற்றின் விலையும் மலிவு அவற்றை வாங்குவதும் எளிதானது. அவற்றுடன் சிமிட்டியும் சுண்ணாம்பும் கலக்கப்படாததால் சூழல் மீதான அவற்றின் தாக்கம் மிகக் குறைவாகும்.

இவற்றைப் பயன்படுத்தி கவிகை மாடங்கள், வளைவுகள் கட்டுவதில் தொடக்கத்திலேயே வெற்றியடைந்துவிட்டேன். மண் சாந்துடன் அவற்றைப் பிணைப்பது எளிது என்பதால் அவை நன்கு பயன்பட்டன. நானும் ஜெரமியும் ஆரோவில்லில் உள்ள எர்த் இன்ஸ்டிட்யூட்டில் 2008-ம் ஆண்டு, வளைவுகளின் நுட்பங்களைப் பயின்றோம்.

இவற்றை வடிவமைப்பதும் பராமரிப்பதும்தான் அறைகூவலான விஷயம். மண் கட்டிடங்கள் மழையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றுக்கு உயர்ந்த கூரை நுனிகளும் பெரிய மழைக்காப்புக் குடைகளும் இருக்க வேண்டும்

மண், சுடாத செங்கல், களிமண், அரிசியின் உமி, தக்கை, நீர், ஆளி எண்ணை இவற்றுடன் மனிதனின் கையும் கண்களும் அழகியல் புள்ளியில் ஒரே நேர் கோட்டில் இணையும்போது மனிதர்களுக்கான இருப்பிடம் ஆயத்தம் என்கிறீர்கள். மனிதம் குழைந்த உங்களின் இந்தக் கட்டிட பாணியைப் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள்?

நாம் மண்ணைப் பயன்படுத்தும்போது இயற்கையின் வடிவங்களோடும் இணைந்தே பணியாற்ற வேண்டும். அந்த இயற்கையின் வடிவத்தில் நேர்க்கோடு என்பது கிடையவே கிடையாது.

கருவிகள் இல்லாமல் எந்தத் திறனுமில்லாமல் வெறும் கைகளாலேயே யாரும் மண்ணைக் கொண்டு கட்ட முடியும். பறவை பறப்பதும் மீன் நீந்துவதும் எப்படி இயல்பானதோ அது போல்தான் மண்ணை வார்க்கவும் செதுக்கவும் செய்யும் திறனுடனேயே ஒவ்வொரு குழந்தையும் பிறக்கிறது.

மணலுக்கென்றே தனி அழகியல் இருக்கிறது. மண்ணைக் கொண்டு கட்டும் கைகள்தான் இந்த அழகியலை வடிவமைக்கின்றன. இந்த வகையான கட்டிடத்தைக் கட்டுவதற்காக ஒன்றிணைந்து பணியாற்றும் மனிதர்களின் அன்பும் ஆற்றலும்தான் அந்த கட்டிடங்களுக்கான தனித்தன்மையை கொடுக்கிறது.

நேர்க்கோடுகள் என்பவை தொழிற்சாலை கட்டுமானக் பொருட்களுக்கானவை. அவற்றுக்கு உயர்ந்த திறன்களும் ஆற்றலும் வலுவான பொருட்களும் கருவிகளும் தேவைப்படுகின்றன. அத்துடன் அவை தனி மனிதத் தொடர்பு அற்றவை.

எளிய அழகிய சூழலுக்கு உகந்த எல்லோருக்குமான இந்தக் கட்டிடக்கலையை எத்தனை பேருக்கு இதுவரை கற்பித்திருப்பீர்கள்?

கொஞ்சம் பேருக்குத்தான் கற்பித்திருக்கிறோம். மண்ணைக் கொண்டு கட்டுவதற்கான ஆர்வத்தைப் பரப்புவதிலும் அதற்கான வழிமுறைகளில் உதவுவதற்காகவும் இளம் கட்டிடக்கலைஞர்களாகிய நாங்கள் இப்போதுதான் இறங்கிப் புறப்பட்டிருக்கிறோம்.

எல்லாருக்குமான கட்டிடக்கலை என்ற போதிலும் இந்தியக் கட்டுமானத் துறைக்கு என்று ஒரு பெரும்போக்கு இருக்கிறதே? அவர்கள் இதை எப்படி பார்க்கிறார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடக் கலைஞர்களின் நேர்காணல்களை ஆய்வு செய்ததின் வழியாக மண் கட்டுமானத்தில் உள்ள தடங்கல்களைப் பற்றி அறிந்தோம்.

மண் என்பது வலுவற்றது , பிற்போக்கானது ஏழைகளுக்கு மட்டுமே உரித்தானது என மக்கள் பார்க்கின்றனர். மண்ணைப் பயன்படுத்தும் மரபார்ந்த அறிவும் தொழில்நுட்பமும் காணாமல் போய்விட்டது. மண் கட்டிடக்கலையின் பயன்கள் பல காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்தக் கட்டிடக்கலைக்கு எதிர்காலம் உண்டா?

கட்டுமானங்களில் மண்ணைப் பயன்படுத்த வேண்டுமென்றால் ஆயத்த நிலையில் உள்ள கட்டுமானப் பொருட்களும், திறன்களும் கட்டுமானத் துறையினருக்குத் தேவைப் படுகின்றன. இவையிரண்டுமே அரிதானவை. இதில் களம் காண விரும்புவர்கள் தங்களுக்கான பாதையை அவர்களேதான் மறு கண்டுபிடிப்பு செய்ய வேண்டும்.

நமது உள்ளூர் கட்டிடக் கலைகள் அனைத்துமே சூழலுக்கு உகந்ததும் குறைந்த செலவு பிடிக்கக் கூடியது. நிலத்திற்கும் ஒரு சமூகத்திற்கும் இடையேயான பிணைப்பின் வழியாகத்தான் இந்த பாதை மலர்ந்திருக்கின்றது. நமக்கு முன்னால் உள்ள நிரூபிக்கப்பட்ட வழியும் அதுதான்.

தொடர்புக்கு :சாளை பஷீர், shalai_basheer@yahoo.com

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *