முந்திரி கன்றுகள் மானிய விலையில் விற்பனை

விருத்தாசலம் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 40 ஆயிரம் முந்திரி கன்றுகள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.

விருத்தாசலம் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையில் முந்திரி, மா, பலா, கொய்யா, மிளகாய், பப்பாளி உள்ளிட்ட பயிர்களின் கன்றுகள் உற்பத்தி செய்து, அரசு அறிவிக்கும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கன்றுகள் கடலூர் மாவட்டம் மட்டும் இன்றி அருகில் உள்ள வெளிமாவட்ட விவசாயிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அந்தவகையில் தற்போது முந்திரி வி.ஆர்.ஐ–3 என்ற வீரிய ஒட்டு ரக கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் விற்பனை

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை பண்ணை மேலாளர் கலைச்செல்வன் கூறியதாவது:–

விருத்தாசலம் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை மூலம் நடப்பு ஆண்டில் இதுவரை கம்மாபுரம், நல்லூர், மங்களூர், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு 80 ஆயிரம் முந்திரி கன்றுகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழும், அரியலூர், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு ஆர்.ஏ.டி.பி, என்.எச்.எம்., ஐ.எச்.எஸ்.டி. என்ற திட்டத்திலும் மானிய விலையில் வி.ஆர்.ஐ–3 ரக முந்திரி கன்றுகள் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது 40 ஆயிரம் முந்திரி கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு மானிய விலையில் விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முந்திரி கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் நிலம் வைத்திருப்பதற்கான ஆவணங்கள் மற்றும் சிட்டா, அடங்கல் ஆவணங்களுடன் நேரில் வந்து அரசு அறிவித்துள்ள மானிய விலைகளில் முந்திரி கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புக்கு 04143260231

நன்றி:தினத்தந்தி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *