முல்லை சாகுபடி

முல்லை பூவை பயிர் செய்து, அதிக லாபம் ஈட்டி வரும் விவசாயி மகாலிங்கம் அவரின் முல்லை பூ சாகுபடி அனுபவங்களை கூறுகிறார:

  • வேலூர், காட்பாடி அருகே உள்ள, இலத்தேரி கிராமம் தான், என் சொந்த ஊர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான், கணிதத்தில் பட்டப் படிப்பு முடித்துள்ளேன்.
  • கடந்த, 34 ஆண்டுகளாக, விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறேன். வழக்கமாக, எங்கள் பகுதியில் பயிரிடப்படும் நெல், கரும்பு மற்றும் வாழை போன்றவற்றைத் தான், நானும் ஆரம்ப காலங்களில் பயிரிட்டேன்.எங்கள் மாவட்டம், வறட்சியால் பாதிக்கப்பட்டது என்பதால், பயிர்களுக்குத் தேவையான நீரை அளிக்க முடியவில்லை. இதனால், பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டது.
  • இதற்குத் தீர்வு காண, நண்பர்களுடன் சேர்ந்து, மாற்றுப் பயிரைப் பயிரிட முடிவு செய்தேன்.நண்பர்கள் அனைவரும், ஒவ்வொரு பயிரை சாகுபடி செய்யலாம் என்று எண்ணினோம்.
  • அதில், முல்லை, கோழிக்கொண்டை, பட்டன் ரோஸ் போன்ற பூ பயிர்கள், எங்கள் பகுதியில் உள்ள சூழலுக்கு உகந்தவையாக இருந்தன. அதன்படி நான், முல்லைப்பூவை அதிகளவில் பயிர் செய்கிறேன்.
  • முல்லைப் பயிரை முறையாகப் பராமரித்தால், ஆண்டுக்கு, 4,000 கிலோ பூக்களை, அறுவடை செய்யலாம்.
  • அடர் நடவு முறையில் பயிரிடுவதன் மூலம், 6,500 கிலோ வரையில் பூக்களை அறுவடை செய்யலாம்.
  • வழக்கமான முறையில், ஓர் ஏக்கரில் முல்லை பயிரிட, 1,000 செடிகளும், அடர் நடவு முறையில் பயிரிடுவதற்கு, 4,000 செடிகளும் தேவைப்படும்.
  • ஆகஸ்ட் மாதம் முதல், நவம்பர் மாதம் வரை, முல்லைச் செடிகளை பயிரிடலாம். ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, தொடர்ச்சியாக பூக்களை அறுவடை செய்யலாம்.பிப்ரவரி மாதத்தில், ‘ஷார்ட் கட்டிங்’ மற்றும், ‘லேட் கட்டிங்’ என்ற அடிப்படையில், செடிகளைக் கத்தரித்துவிட வேண்டும்.இது, செடிகளில், கிளைகளின் எண்ணிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும்.
  • வாரம் ஒரு முறையாவது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  • தற்போது, ஆம்பூர் ரக முல்லைச் செடிகளை பயிர் செய்துள்ளேன்.
  • வேலூரில் உள்ள வியாபாரிகளிடம், நாங்கள் அறுவடை செய்த பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால், லத்தேரி மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தை துவக்கி, வெளியூரில் உள்ள வினியோகஸ்தர்களுக்கு, பூக்களை நேரடியாக விற்கிறோம்.இதன்மூலம், எங்களின் உழைப்பிற்கு உரிய வருமானம் கிடைக்கிறது.
  • சராசரியாக ஒரு கிலோ முல்லைப்பூவை, 30 முதல் 250 ரூபாய் வரை, சீசனுக்கேற்ப விலை வைத்து விற்பனை செய்கிறோம். இதன்மூலம், நடவு செய்வதில் இருந்து, ஆட்கள் கூலி வரை அனைத்து செலவுகளும் போக, ஏக்கருக்கு குறைந்தபட்சம், 2 லட்சம் ரூபாய் வருவாயாகப் பெறலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *