அச்சு வெல்லம், மண்டை வெல்லம் தயாரிப்பில் பொள்ளாச்சி விவசாயிகள் கைதேர்ந்தவர்கள். கொங்கு மண்டலத்தில் ஆண்டு முழுவதும் கரும்பு உற்பத்தி இருக்கும். மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு விவசாயம் ஆண்டுக்கு ஒரு போகம் மட்டுமே.
வெல்லம் தயாரிப்பில் உடலுக்கு கேடு விளைவிக்காத ரசாயனம் கலப்பது வழக்கம். ரசாயன கலவையில் தயாராகும் வெல்லம் மஞ்சள் நிறமாகவும், பார்த்தவுடன் சுவைக்க துாண்டும் வகையில் பளபளப்பாக மின்னும்.
பனையில் தயாராகும் கருப்பட்டி போல் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லம், இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரசாயன கலவையை முற்றிலும் தவிர்த்து வருகிறார் மதுரை மாவட்டம் குமாரம் அருகே கோட்டைமேடு கரும்பு விவசாயி ஜோதிவேல்.அவர் கூறியதாவது:
- அச்சு வெல்லம், மண்டை வெல்லம் தயாரித்த பின் மஞ்சள் அல்லது பொன்னிறமாக மின்னும்.
அப்படி இருந்தால், அதில் அதிகளவு ரசாயனம் கலக்கப்பட்டதாக அர்த்தம். - கருப்பட்டி போல் வெல்லம் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரசாயனம் சேர்க்காமல் சிவப்பு ரக கரும்பில் இருந்து மலையாள வெல்லம் தயாரிக்கிறேன்.
- கார்த்திகை முதல் சித்திரை வரை கரும்பு அறுவடை இருக்கும். எனவே தோட்டத்திலேயே வெல்ல ஆலை நிறுவியுள்ளேன். முன்பு பொள்ளாச்சியில் இருந்து, கரும்பு பாகு ஆட்ட ஆட்களை வரவழைப்பதுண்டு.
தற்போது இங்குள்ளவர்களே, தொழில்நுட்பம் தெரிந்து கொண்டுள்ளனர். எனவே வேலையாட்களுக்கும் பஞ்சமில்லை. - ரசாயனம் கலக்காமல் மலையாள வெல்லம் தயாரிப்பதால் பார்ப்பதற்கு நிறம் இன்றி கருப்பாக இருக்கும். கரும்பு பாகு தயாரிக்கும்போது கழிவுகள் நுரையாக பொங்கும். அவற்றை அகற்றுவதற்காக சுண்ணாம்பு, இட்லி மாவு சோடா உப்பு சிறிதளவு கலக்கப்படுகிறது. சுண்ணாம்பு சத்து உடலுக்கு தேவை.
குறைந்தளவு சோடா உப்பு சேர்ப்பதால் உடலுக்கு தீங்கில்லை. கருப்பு நிற மலையாள வெல்லம் விலை குறைவு. எனினும் உடல் நலம் பேணுவோர் இவற்றை தேடி பிடித்து வாங்குகின்றனர். - கேரளாவிற்கு பெருமளவு அனுப்பப்படுகிறது. கிலோ 40 ரூபாய். மஞ்சள் நிற மலையாள வெல்லம் விலை அதிகம். ரசாயனம் கலந்து தயாரித்தால் லாபம் ஈட்டலாம். உடல் நலம் கருதி ரசாயனம் கலக்காமல் தயாரிப்பதால் மன நிறைவு ஏற்படுகிறது என்றார்.
தொடர்புக்கு 09965333216 .
– கா.சுப்பிரமணியன், மதுரை.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்