ரோஜா சாகுபடியில் உயர்தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றினால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் ஈட்டலாம் என்று தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
ரகங்கள்: எட்வர்ட் ரோஜா, ஆந்திர சிவப்பு ரோஜா.
மண்வகை: வடிகால் வசதியுள்ள மணற்சாரி வண்டல்.
இடைவெளி:
வரிசைக்கு வரிசை 2 மீட்டர், செடிக்குச் செடி 1 மீட்டர் என்ற இடைவெளி அவசியம். ஒன்றரை அடி கன அளவுள்ள குழிகள் தேவை. நடுவதற்கு முன் குழிக்கு 10 கிலோ தொழு உரம், 20 கிராம் லிண்டேன் தூள் இட வேண்டும்.
நீர்ப்பாசனம்:
புதுத் தளிர் விடும்வரை இரு நாள்களுக்கு ஒரு முறையும், பின்னர் வாரம் ஒரு முறையும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
உர அளவு:
ஜூலையில் ஒரு முறையும், கவாத்து செய்த பின்னர் அக்டோபரில் ஒரு முறையும் என இரு முறை செடிக்கு 10 கிலோ தொழுஉரம், 15 கிராம் யூரியா, 75 கிராம் சூப்பர் பாஸ்பேட், 20 கிராம் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு:
ரோஜாவில் செதில் பூச்சி, மாவுப் பூச்சி, மொட்டுப் புழு, இலைப்பேன், அசுவிணி தத்துப் பூச்சிகள் தாக்கும் வாய்ப்புள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த தகுந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
மாவுப்பூச்சி கட்டுப்பாடு:
ஒரு லிட்டர் தண்ணீர்க்கு 2 மி.லி. என்ற அளவில் மானோகுரோட்டோபாஸ் அல்லது மிதைல் பாரத்தியான் கலந்து தெளிக்க வேண்டும்.
மொட்டுப்புழு கட்டுப்பாடு:
பூக்கும் தருணத்தில் 15 நாள்களுக்கு ஒருமுறை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. என்ற அளவில் மானோ குரோட்டோபாஸ் மருந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
இலைப்பேன், அசுவிணி, தத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மூன்று சதவீத வேப்ப எண்ணெய் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. பாசலோன் கலந்து தெளிக்கலாம். மிதைல் ஓ டெமட்டான் மருந்தும் பயன்படுத்தலாம்.
நோய்கள்:
இலைகளில் வட்ட வடிவில் கரும்புள்ளிகள் தோன்றி, இலைகள் உதிர்வதை தடுக்க கார்பண்டசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து மாதம் இரு முறை தெளிக்க வேண்டும். சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் கார்பண்டசிம் அல்லது 2 கிராம் நனையும் கந்தகம் கலந்து தெளிக்கலாம்.
மகசூல்:
முதலாம் ஆண்டே ரோஜா பூக்க ஆரம்பிக்கும். இருப்பினும் பொருளாதார ரீதியாக இரண்டாம் ஆண்டு முதலே நல்ல பலன் கிடைக்கும். கவாத்து செய்த 45ஆவது நாள் முதல் பூக்கத் தொடங்கும். மலர்ந்த மலர்களை அதிகாலையில் பறிக்க வேண்டும். இத்தகைய தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் ஓராண்டில் ஒரு ஏக்கர் பரப்பில் 4 லட்சம் மலர்களைப் பறிக்க முடியும். மேலும், விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை அணுகலாம்.
நன்றி தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்