காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் நிலத்தை உழுவதற்கு, பவர்டில்லர் மற்றும் சாதாரண ஏர் கலப்பைகளைப் பயன்படுத்துவது குறைந்து வருகிறது.
புதிதாக “ரோட்டாவேட்டர்’ என அழைக்கப்படும் சுழற்கலப்பையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். பெரும்பாலான விவசாயிகள் ஆண்டிற்கு மூன்று போகம் பயிரிடுகின்றனர். தண்ணீர் இல்லாத விவசாயிகள் பயறு விதைக்கின்றனர். இந்தாண்டு பருவ மழை காரணமாக ஏரிகள் நிரம்பியுள்ளன. விவசாயிகள் நவரைப் பட்டத்தில் நெல் பயிரிட உழவுப் பணிகளை துவக்கியுள்ளனர்.
பெரும்பாலான விவசாயிகள் புதிய “ரோட்டாவேட்டர்’ சுழற் கலப்பையைக் கொண்டு, தங்கள் நிலங்களில் உழவுப் பணியை துவக்கியுள்ளனர்.
சாதாரண கலப்பை:
- ஒரு ஏக்கர் நிலத்தை சாதாரண கலப்பையால் உழுவதற்கு, குறைந்தது 2 மணி நேரம் பிடிக்கும். வேகமாக டிராக்டரை ஓட்டினால் ஒன்றரை மணி நேரத்தில் உழவுப் பணி முடிந்து விடும்.
- இதற்கு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு 600 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரை செலவாகிறது.
- சாதாரண கலப்பையில் உழவு செய்தால் சேற்றை உருவாக்க நாட்கள் கூடுதலாகும்.
- நடவு செய்யப்படும் நெற்பயிர்களில் களை அதிகமாக காணப்படும். அவற்றை நீக்க கூடுதல் செலவாகும்.
ரோட்டாவேட்டர் கலப்பை:
- புதிய ரக கலப்பையில், கடினமான நிலத்தை கூட எளிதாக உழவு செய்து சேற்றை உருவக்க முடிகிறது.
- புதிய ரக கலப்பையை டிராக்டரில் பொருத்தி நிலத்தை உழவு ஒரு மணி நேரத்திற்கு 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
- சாதாரண கலப்பையில் உழவு செய்வதை விடக் கூடுதல் செலவானாலும், பலன் அதிகம் என்பதால் விவசாயிகள் புதிய கலப்பையைப் பயன்படுத்தி உழவு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
- புதிய கலப்பையில் உழவு செய்தால், “களை’ குறைவாக இருக்கும்; இதனால் களை எடுக்கும் கூலி மிச்சமாகிறது.
- இதனால் புதிய ரக கலப்பையைப் பயன்படுத்தும் போது செலவு குறைகிறது.
இதனால் சாதாரண கலப்பை வைத்திருக்கும் விவசாயிகளும், புதிய ரக கலப்பைகயை தேடி நிலங்களில் உழவுப் பணி செய்கின்றனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்