வறட்சி மாவட்டத்தில் மாதம் ரூ. 50 ஆயிரம் வருமானம்

ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர கிராமப்புற இளைஞர் ஒருவர் எம்.ஃபில். படித்துவிட்டு மதுரை மல்லி சாகுபடி செய்துவருகிறார்.

ராமநாதபுரத்தில் இருந்து 33 கி.மீ. தொலைவில் இருக்கிறது நொச்சியூரணி என்கிற கடலோர கிராமம். ஊருக்குள் நுழைந்ததும் கடல் காற்றில் கருவாடு வாசனைக்குப் பதிலாக மல்லிகை தோட்டங்களின் மணம் சுண்டி இழுக்கிறது.

நொச்சியூரணி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது 20 சென்ட் நிலத்தில் இருந்து 2 ஏக்கர்வரை மல்லிகைப் பூக்களையும், பதியன்களையும் உற்பத்தி செய்துவருகிறார்கள்.

படிப்பும் மல்லிகையும்

இவர்களில் எம்.ஃபில். தமிழ் முடித்துவிட்டு மல்லிகை விவசாயத்தில் சாதித்துக் கொண்டிருக்கும் இளைஞர் எம்.முருகேசன் கூறியதாவது:

மதுரை யாதவர் கல்லூரியில் எம்.ஏ. தமிழும், அதைத் தொடர்ந்து எம்.ஃபில்லும் படித்தேன். மதுரை தியாகராஜர் கல்லூரியில் ‘சங்க இலக்கியம் நெய்தல் பாடல்களில் மக்கள் வாழ்வியல்’ என்ற தலைப்பில் பிஹெச்.டி. ஆய்வை நிறைவு செய்ய உள்ளேன்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

பள்ளியில் படிக்கும் நாட்களிலேயே தந்தைக்கு உதவியாக தோட்டத்தில் மல்லிகை சேகரிக்க நண்பர்களோடு வருவேன். அப்படித்தான் மல்லிகை சாகுபடியில் ஆர்வம் உண்டானது. எனது 20-வது வயதில் தாய் செடிகளில் இருந்து, முதன்முதலாக கிளைத் தண்டுகளை உடைத்து பதியன்களை நட்டேன். அன்று முதல் படிப்பையும், மல்லிகை சாகுபடியையும் விடாமல் செய்துவருகிறேன்.

பதியனும் காசாகும்

ஒரு ஏக்கர் நிலத்தில் ஒன்றரை லட்சம் மல்லிகை பதியன் செடிகளை வளர்க்க முடியும். ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்தால் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 3 லட்சம் பதியன் செடிகள்வரை எடுத்துவிடலாம். ஒரு பதியன் ரூ.1.50-ல் இருந்து ரூ.2.50 வரை சீசனுக்கு ஏற்றவாறு விலை போகும்.

தினமும் 10 கிலோ முதல் 12 கிலோவரை மல்லிகைப் பூக்களை சேகரிக்க முடியும். சீசனுக்கு ஏற்றவாறு ரூ.100 முதல் ரூ. 250 வரை விலை போகும். மாதம்தோறும் குறைந்தது ரூ. 50 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் வருமானமும் இரட்டிப்பாகும்.

மல்லிகை மருத்துவம்

மல்லிகைப் பூ என்றாலே மாலை கட்டுவதற்கும், தலையில் சூடுவதற்கும், சோப்பு மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க மட்டுமே அதிக அளவு பயன்படுத்தி வருகிறோம். ஆனால், மல்லிகைக்கு மருத்துவ குணங்கள் உண்டு. ஒவ்வாமை காரணமாக சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால், மல்லிகைப் பூக்களை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அதை கசக்கி தலையில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். பெண்களுக்கு உடல் சூடு பிரச்சினை ஏற்பட்டால், மல்லிகைப் பூவை தலையில் சூடினால் உடல் சூடு குறையும்.

புவிசார் குறியீடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், நொச்சியூரணி, தண்ணீரூற்று, செம்மமடம் ஆகிய கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாய்ச் செடிகளை விவசாயிகள் பராமரித்துவருகிறோம். இவற்றில் இருந்து கிளைத் தண்டுகளை ஒடித்தெடுத்து மூன்றே மாதங்களில் ஒன்றரை அடி உயர பதியன்களாக வளர்த்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்கிறோம்.

மண்டபத்தில் விளையும் மல்லிகைப் பூக்களும், பதியன்களும் மதுரை சந்தையில் அதிகம் விற்கப்படுவதால் மதுரை மல்லி என்று புவிசார் குறியீடு கிடைத்தது. மதுரை மாவட்டத்தில் தாய் செடிகள் கிடையாது. எங்களிடம் இருந்து மல்லிகைப் பதியன்களை வாங்கித்தான், மதுரை மாவட்ட விவசாயிகள் பூக்களுக்காக வளர்க்கிறார்கள்.

மல்லிகைப் பூக்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பதால், தாய்ச் செடியில் இருந்து வளரும் மண்டபம் மல்லிகை பதியன்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பிக்க உள்ளோம். வேளாண் துறைக்கு இலவச மின்சாரம் வழங்கும் தமிழக அரசு, மல்லிகை விவசாயத்துக்கும் இலவச மின்சாரம் வழங்கினால் உதவியாக அமையும் என்கிறார் முருகேசன்.

விவசாயி முருகேசன், தொடர்புக்கு: 09865569020

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *