`வீடுதோறும் வெற்றிலைக்கொடி வளர்ப்போம்”

`வீட்டுக்கு ஒரு வெற்றிலைக் கொடி வளர்ப்போம். அழிந்து வரும் வெற்றிலைக் கொடி வளர்ப்பைக் காப்போம்” என உடன்குடியில் நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் வெற்றிலை விவசாயிகள்.

வெற்றிலை கொடிக்கால்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் – உடன்குடி, மதுரை மாவட்டம் சோழவந்தான், சேலம் மாவட்டம் ஆத்தூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் ஆகிய பகுதிகளில் வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர், உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 32 கிராமங்களில் வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. கொழுந்து, சக்கை, மாத்து, சன்னரகம் ஆகிய இளம்பச்சை மற்றும் கரும்பச்சை நிறத்தில் உள்ள வெற்றிலை விவசாயம் செய்யப்படுகிறது. காரம் மிகுந்து தனிச்சுவையுடன் காணப்படுகிறது.

வெற்றிலை கொடிக்கால்

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வரை வெற்றிலை விவசாயத்தைத் தொழுவுரம் மட்டும் போட்டு செய்து வந்தனர் விவசாயிகள். வெற்றிலை விவசாயத்திலும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லியைப் புகுத்தியதால் வெற்றிலை விளைச்சல் இல்லாமல் போனது. இந்தக் கிராமங்களிலுள்ள எல்லா வீடுகளிலும் வெற்றிலைக் கொடி படர்ந்து நிற்கும். தற்போது இதுவும் இல்லாமல்போனது. தாமிரபரணியில் நீர் வரத்தும் குறைந்ததால் வெற்றிலை விவசாயப் பரப்பும் குறைந்துவிட்டது. இதனால் வெற்றிலை விவசாயத்திலிருந்து முருங்கை, தென்னை விவசாயத்துக்கு மாறிவிட்டனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வெற்றிலை விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் வெற்றிலை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, “மண்ணின் வேந்தனான வெற்றிலை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் வீட்டுக்கு ஒரு வெற்றிலைக் கொடிக்கால் கொடுத்து வளர்க்கச் சொல்ல வேண்டும்.

வெற்றிலைக்கட்டுகள்

பாட்டி கை வைத்திய முறையில் வெற்றிலையைக் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை மருந்தாக அரைத்துக்கொடுக்க வலியுறுத்த வேண்டும்.

பாரம்பர்யமாகச் செய்துவரும் வெற்றிலை விவசாயத்தைத் தவிர, பிற பயிர்கள் சாகுபடி செய்வதைத் தவிர்த்தல் வேண்டும். பிற விவசாயம் செய்யும் நமது பகுதி விவசாயிகளிடம் வெற்றிலை விவசாயம் செய்ய வலியுறுத்த வேண்டும்.

ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்பாட்டை நிறுத்திவிட்டு இயற்கை உரம், மூலிகைப் பூச்சிவிரட்டி கொண்டு விவசாயம் செய்ய வேண்டும்” எனப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *