பார்த்தீனியம் செடியை அழிப்பதை ஓர் இயக்கமாக தமிழக அரசு ஏற்று செயல்படுத்தும் என அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, வேலிகாத்தான் முள் செடிகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
பார்த்தீனியம் செடிகள் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் உடல்நலக் கேடுகளை விளைவிப்பவை என்று சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்த போது, அதை முற்றிலும் அழிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார் முதல்வர்.இந்த அறிவிப்பு விவசாயிகளிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதே நேரத்தில் வேலிகாத்தான் முள் செடியின் பாதிப்புகளையும் அறிந்து அதையும் அழித்தால், நிறைய விவசாய நிலத்தில் வேறு சாகுபடிகள் செய்வது சாத்தியமாகும் என்று விவசாய நிபுணர்கள் கூறுகின்றனர்.
- 15 முதல் 30 அடி ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் இச் செடியின் வேர்கள், வறண்ட சூழ்நிலையிலும் வளரக்கூடிய தன்மை உள்ளவை. நிலத்தடி நீர் கிடைத்தால் அதை எடுத்துக் கொள்ளும். அதனால் மற்ற பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும்.
- எனவே வேலிகாத்தான் முள் செடி உள்ள இடத்தின் அருகே வேறு பயிர்கள் வளராது என விவசாயிகள் விளக்குகின்றனர்.இந்தச் செடியை கால்நடைகள் சாப்பிடாது. தவறுதலாக வேறு இலைகளுடன் சேர்த்து இதன் இலைகளை கால்நடைகள் சாப்பிட நேர்ந்தால், அவற்றுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்படும் என்கின்றனர்.
- இந்த முள் செடி உள்ள இடத்தில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால் பறவைகள் கூட கூடு கட்டுவது இல்லை. எனவே இவை அதிகம் உள்ள பகுதிகளில் பறவைகள் வாழாது.
- ஆணி வேர் இல்லாத சிறிய வகை மூலிகைகள் இந்த முள் செடியின் கீழே வளர முடியாமல், இறந்து போகின்றன.
- விவசாயத்துக்கு, விவசாயிக்கு, கால்நடைகளுக்கு, பறவைகளுக்கு என எதற்குமே பயன்படாத இந்த முள்செடி, கரி கட்டை தயாரிப்புக்கு மட்டும் பயன்படுகிறது.
- எனவே இதை விவசாயிகளின் பகைவன் என்ற பட்டியலில் அமெரிக்கா போன்ற நாடுகள் சேர்த்துள்ளதாக விவசாயத் துறையினர் கூறுகின்றனர்.
- கேரளத்தில் அதிகாரபூர்வமாக இதற்கு எதிராக இயக்கம் எதுவும் இல்லை என்றாலும், இந்தச் செடி எங்காவது வளர்வதைப் பார்த்தால் முதலில் அதை வெட்டி அகற்றிவிட்டுத்தான் விவசாய வேலையை பார்ப்பது என்பதை விவசாயிகள் உறுதியாகப் பின்பற்றுகின்றனராம்.
விவசாய நிலங்களில் வேலியாகப் பயன்படுத்த வேறு மரங்களை வளர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்