குறைந்த காய்ப்பு திறன் கொண்ட மா மரத்தில் கவாத்து செய்வது நல்ல பலனை கொடுக்கும்.
மா மரங்களில் ஆண்டு தோறும் காய்ந்த நோய் வாய்ப்பட்ட கிளைகள் மற்றும் வாதுக்களை நீக்க வேண்டும்.
மரத்தில் குறுக்கும் நெடுக்குமாக உள்ள கிளைகள், முறுக்கிப் பிணைந்த கிளைகள் ஆகியவற்றை நீக்கி சூரியஒளி புகுமாறு செய்து நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் கிளைகளை கவாத்து செய்வதால் உரமிடுதல் மற்றும் தோட்ட மேலாண்மை போன்ற செயல்களை துரிதப்படுத்த உதவிகரமாக இருக்கும்.
புதிதாக நடவு செய்யும் இளங்கன்றுகளில் தொடக்கத்தில் இருந்தே இளம் மரங்களை உருவமைப்பு செய்வதன் மூலம் ஆண்டு தோறும் நல்ல மகசூல் கிடைப்பதோடு, அறுவடை மற்றும் பயிர் பாதுகாப்பு போன்ற செயல்களை எளிதாக நடைமுறைப்படுத்தலாம்.
கவாத்து தொழில்நுட்பம்
பழங்களின் அரசன் என்று போற்றப்படும் மா, இன்று உலகின் பல நாடுகளில் முக்கிய பயிராக பயிரிடப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மா ரகங்கள் இருந்தாலும், செந்துாரம், அல்போன்சா, பங்கனப்பள்ளி, கல்லாமை, இமாம்பசந்த், காலப்பாடு, நீலம் போன்ற 20 முதல் 30 ரகங்கள் மட்டுமே வணிக ரீதியாக அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மா மரம் சாகுபடியில் மகசூல் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மா மரங்களை சரிவர உருவமைப்பு செய்யாமல் விடுதலும், மகசூல் இழப்பிற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
நன்கு காய்க்கும் மரங்களில் பொதுவாக கவாத்து செய்யும் அவசியம் இல்லை. ஏனெனில் மா வில் மற்ற பழ மரங்களை போல் இல்லாமல் பூக்கள் நன்கு முதிர்வுற்ற வாதுகளில் தான் தோன்றுகின்றன. ஆகவே மா மரங்களில் மகசூல் துரிதப்படுத்த ஜூலை கடைசி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கவாத்து தொழில் நுட்பங்களை மா மரத்தில் நடைமுறைப் படுத்தி பரிந்துரைக்கப்பட்ட உரங்கள் மற்றும் நீர் நிர்வாக முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் மா மரங்களில் அதிக மகசூல் பெறலாம்.
– சு. செந்தில்குமார்
தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர்
காந்திகிராம கிராமிய பல்கலை.
9047054350
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்