ஒற்றை எழுத்தில் ஓர் கனி. உலக நடுகள் விரும்பும் அற்புத கனி. ஆண்டிற்கு ஒரு முறை தான் கிடைக்குமென்றாலும் முக்கனிகளில் முதலில் வைத்துப் போற்றப்படுவது ‘மா’. மாம்பழத்திற்கு மயங்காதவர்கள் எவரேனும் உண்டா? எத்தனை எத்தனை ரகங்கள்? எத்தனை நிறம்? எத்தனை மணம்? எத்தனை சுவை. இந்தப் பழம் கிடைக்கவில்லை என்று முருகப்பெருமான் கோவித்துக் கொண்டதும் நியாயமாகத்தான் படுகின்றது. மாவின் சுவை அலாதியானது.
பழங்களின் அரசன் என அழைக்கப்படும் ‘மா’ இந்தியாவில் அதிகம் உற்பத்தியாகும் பழமாகும். இதன் அற்புதமான சுவை, மணம் போன்றவைகளுடன் இதனுள் இருக்கும் வைட்டமின் A ம் C ம் நல்ல சக்தியை கொடுக்கின்றது. வங்காள தேசம், தென் கிழக்கு ஆசிய நாடுகளை தன் தாயகமாக கொண்டது. Mangiferra Indica எனும் தாவரவியல் பெயர் கொண்ட மாம்பழம் கோடை காலங்களில் உலகெங்கும் சுவைக்கப்படுகின்றது. மேங்கோ எனும் ஆங்கிலப் பெயரே தமிழின் மாங்காய் என்பதிலிருந்து திரிந்தது தான் என்கின்றனர் மொழியியலாளர்கள்.
மாம்பழத்தில் மாவடு, மாங்காய், மாம்பழம் என அதன் அத்தனை வளர்நிலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. மாவடு, ஊறுகாய் செய்ய உதவுகின்றது. மாங்காயும் உலகெங்கும் பலவிதமாக உண்ணப்படுகிறது. மாங்காய் துண்டுகளை பத்தைகளாக நறுக்கி உப்பு, மிளகாய் தூள் தூவி சுவைக்காதவர் வெகு சிலரே. நினைத்தாலே நாவில் எச்சில் ஊறவைக்கும் அற்புதமானதொரு உணவுப் பண்டமிது. மாங்காயில் குழம்பு, தொக்கு, பச்சடி ஊறுகாய் போன்றவை தயார் செய்யலாம். மாங்காயை காய வைத்து சமையல் பொடியாகவும் சேமித்து வைத்துப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. பெரும்பாலும் மாம்பழம் தோலையும், கொட்டையையும் நீக்கிய பின் பழத்தை துண்டுகளாக்கி அப்படியே உண்ணப்படுகிறது. இந்த சதைப் பகுதி கூழாக்கப்பட்டு சேமிக்கப்பட்டு ஆண்டு முழுவதும் பழச்சாறாகவும் பயன்படுத்தப்படுகின்றது. மாம்பழத்தையும், கெட்டித்தயிரையும் கலந்து மாம்பழ லஸ்சி செய்யலாம். மாம்பழ ஐஸ்க்ரீம் செய்யலாம். சர்க்கரை சேர்த்து மாம்பழ மிட்டாய் செய்யலாம்.
மாம்பழத்தில் பல்வேறு ரகங்கள் உள்ளன. நீலம், பெங்களூரா, நடுச்சாலை, சப்பட்டை, செந்தூரம், ஹூமாயுன், காலேபாடு, மோனி,மல்கோவா, பையூர், மல்லிகா, அல்போன்சா, சிந்து, PKM 1, PKM 2, ரத்னா அம்ராபாலி, மஞ்சிரா, அர்கா, அருணா, அர்கா புனீத், அர்க்கா அன்மோல், அர்க்கா நீல்கிரண், கறுத்த கொழுப்பான், வெள்ளை கொழும்பான், பங்கனப்பல்லி, ருமானி, திருகுணி, விலாட்டு, கிளி கொண்டன், சாதாரண அம்பலனா, செம்பாடான், பாண்டி, சேலம், களைகட்டி, பச்சதின்னி, கொடி மா, மத்தள காய்ச்சி, சிந்து, தேமா, புளிமா, கத்தே, மார், பனீசான், காதர் பசந்த், பீதர் பசந்த் என ஏகப்பட்ட ரகங்கள் உள்ளன. ஒரே வகை மாம்பழத்தினை ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பெயரில் குறிப்பிடுவர் உதாரணமாக அல்போன்சா மாம்பழத்தினை சில பகுதியில் காதர் எனவும், காதர் பசந்த் எனவும், குண்டு எனவும், பாதாமி எனவும் குறிப்பிடுகின்றனர். ஒரே ரகம் ஆனாலும் பகுதிக்கு ஏற்ப உருவ அமைப்பு, மணம், சுவை மாறுபடுகின்றது. மாமரத்தில் ஒட்டக் கட்டி கலப்பினம் உருவாக்கி புதிய அதிகா சுவையுள்ல இனங்களுக்கான ஆயுவுகள் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதானுள்ளது.
சுமார் 3 மில்லியன் ஏக்கரில் பயிரிடப்படும் மா உலகின் மொத்த விளைச்சலான 25 மில்லியன் டன்களில் 15 மில்லியன் டன்னை கொடுக்கும் நிலையில் இந்தியா உள்ளது. உத்திரபிரதேசம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களுடன் பிஹார், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களும் மா விளைச்சலில் முன்னிலை வகிக்கின்றது.
அமெரிக்க நாடுகளுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து மாம்பழமும், மாம்பழக் கூழும் ஏற்றுமதியாகின்றது. அத்துடன் ஐரோப்பியாவின் பெரும்பாலான நாடுகளுக்கும் இந்திய மாம்பழம் ஏற்றுமதி ஆகின்றது. உலக மாம்பழ ஏற்றுமதிச் சந்தையில் இந்தியாவின் பங்கு 15% ஆகும். ஏற்றுமதியாகும் மாம்பழ வகைகளில் அல்போன்ஸாவும், தாஷேகரியும் அதிக இடம் பெற்றுள்ளது. உலக மாம்பழ உற்பத்தியில் 60% இந்தியாவில் தான் என்பதுடன் இந்திய பழ ஏற்றுமதியில் மாம்பழத்தின் பங்கு மட்டும் 40%. மா சாகுபடி பரப்பின் அளவு ஆண்டிற்கு ஆண்டு விரிவடைகின்றது. பிரகாசமான ஏற்றுமதி வாய்ப்பும், பரந்துள்ள உள்நாட்டு வணிக வாய்ப்பும் மா சாகுபடியின் மேல் விவசாயிகளுக்கு நல்ல ஈர்ப்பை உண்டாக்குகின்றது.
மா சாகுபடி செய்ய நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலம் ஏற்றதாகும். மண்ணில் கார அமில நிலை (pH) 6.5 முதல் 8 வரையிலும் இருக்கலாம். மா பயிரிட ஜூலை முதல் டிசம்பர் வரையிலான பருவம் ஏற்றது. மா விதை மூலம் இனப்பெருக்கம் செய்ய இயலுமென்றால் தாய் செடியின் தன்மையை அப்படியே கொண்டு வர வேண்டும் என்பதால் ஒட்டுக் கட்டிய செடிகள் மூலம் மட்டு மா நடவு செய்யப்படுகின்றது.
மா பயிரிட இருக்கும் நிலத்தை சரிவிற்கு குறுக்கே 3 முதல் 4 முறை நன்கு ஆழமாக உழவு செய்ய வேண்டும். மா நடவு செய்ய 3 அடி நீளம் X 3 அடி அகலம் X 3 அடி ஆழமுள்ள குழிகளை வெட்டி நன்கு ஆற விட வேண்டும். நன்கு ஆறிய பின்னர் குழி ஒன்றிற்கு 20 கிலோ நன்கு மக்கிய தொழி உரத்துடன், மேல் மண் 100 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்ரீரியம், 1 கிலோ மண்புழு உரம், நன்கு பொடி செய்யப்பட்ட வேப்பம் புண்ணாக்கு அல்லது புங்கம் புண்ணாக்கு ½ கிலோ கலந்து குழியின் முக்கால் பாகும் மூடி, நடுவில் அடையாளத்திற்கு ஒரு குச்சி நட வேண்டும். ஒட்டு மா செடியின் ஒட்டு கட்டிய பகுதி மண்ணிற்கு மேல் இருக்குமாறு நடவு செய்து, நடவு செய்த செடி காற்றில் ஆடி ஒடிந்து விடாமலிருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு குச்சியையும், செடியையும் சணல் கயிற்றால் தேவையான இடைவெளிவிட்டு ‘B’ வடிவில் கட்ட வேண்டும்.
மா மரத்திற்கு என்ன இடைவெளி விட வேண்டும் என்ற கேள்விக்கு எல்லோருக்கும் ஒரே பதிலை கூற முடியாது. இடைவெளி எவ்வளவு என்பதை மண்ணின் வளம், மண்ணின் தன்மை, மண் எந்த அளவு ஆழம் வரை உள்ளது, மண்ணின் நீர் பிடிப்பு தன்மை, வடிகால் வசதி, மலைச்சரிவு, நடவு செய்யப்படக் கூடிய பகுதியில் காற்றின் வேகம், மழை அளவு, பாசன வசதி, காற்றின் ஈரப்பதம் என்பதாக பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. சாதாரணமாக மா ஒரு அடி முதல் 35 அடி இடைவெளி வரை நடவு செய்யப்படுகின்றது. 10 அடி X 10 அடி இடைவெளியில் மா நடவு செய்யப்படுகின்றது. நடவு செய்ய மாஞ்செடிகள் உயிர்பிடித்து நன்கு வளரும் வரை அடிக்கடி நீர்ப்பாசனம் செய்தல் அவசியம். வளர்ந்த மா மரங்களுக்கு 10 – 15 நாட்களுக்கு ஒரு முறை நீர்பாசனம் செய்து வந்தால் மாவில் நல்ல மகசூல் எடுக்கலாம். மா பூக்கும் பருவத்திற்கு 2-3 மாதங்கள் முன்னர் நீர்பாசனத்தை நிறுத்த வேண்டும். இந்த காலத்தில் நீர்பாய்ச்சினால் இலை வளர்ச்சி அதிகரித்து பூக்கள் உண்டாவது குறைந்துவிடும்.
மாவில் ஊடு பயிர் செய்வதானால் மாமரம் பலனுக்கு வரும் வரை ஒரு உபரி வருவாய் கிடைப்பதுடன் மா சாகுபடி செய்த நிலம் நன்கு களைகளின்றீயும் பராமரிக்கப்படும். வேர் முடிச்சுக்களில் தழைச்சத்தை சேகரிக்கும் பயறுவகை தாவரங்களைப் பயிரிட்டால் மாசாகுபடி செய்யும் நிலம் நன்கு வளப்படும். பயறு வகைகளான தட்டைப்பயறு, அவரை, மொச்சை, பாசிபயிறு, உளுந்து, பச்சை பயிறு, கல் பயிறு, நரிப்பயிறு, நிலக்கடலை, காய்கறிகள் போன்ற குறுகிய கால சாகுபடிகளை தனியே பாசனவசதி ஏற்படுத்தியோ, மானாவாரியாக சாகுபடி செய்யலாம்.
மாவிற்கு தேவையான உரத்தை இரண்டாகப் பிரித்து பாதியை ஜூன், ஜூலை, மாதங்களில் பழம் அறுவடை செய்த உடனேயும், மீதி பாதியை அக்டோபர் மாதத்திலும் இட வேண்டும். 3% யூரியா கரைசலை இலைவழி உரமாகவும் கொடுக்கலாம்.
ஒரு மாமரத்திற்கு தேவையான உர அளவு
உரவகை |
முதலாம் ஆண்டு |
ஆண்டிற்கு |
10வது ஆண்டு |
நன்கு மக்கிய தொழு உரம் |
10 கிலோ | 10 கிலோ | 50 கிலோ |
தழைச் சத்து N | 100 கிராம் | 100 கிராம் | 1 கிலோ |
மணிச் சத்து P | 50 கிராம் | 50 கிராம் | ½ கிலோ |
சாம்பல் சத்து K |
100 கிராம் | 100 கிராம் | 1 கிலோ |
நுண்ணூட்ட கலவையை அடியுரமாகவோ, இலைவழி தெளிப்பு உரமாகவோ கொடுக்கலாம்.
மாமரம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கவாத்து செய்ய வேண்டும். மரத்திற்கு நல்ல சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் கிடைக்குமாறு மரத்தில் தாழ்ந்து இருக்கும் கிளைகள், குறுக்கும் நெடுக்குமாக பின்னியிருக்கும் இலைகள், காய்ந்த, மெல்லிய நோய் தாக்கிய இலைகள் போன்றவைகளை வெட்டி எடுக்க வேண்டும். கூர்மையான சிக்சேச்சர், அல்லது கவாத்து கத்தியை கொண்டு கவாத்து செய்தல் வேண்டும். மாமரத்தில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு தோன்றும் பூக்களை கிள்ளி அப்புறப்படுத்த வேண்டும். அப்போதுதான் செடி விரைவில் வளர்ந்து மரமாகும்.
3-4 ஆண்டுகளில் மரம் ஒன்றிற்கு 10-20 பழங்கள் (சுமார் 2-3 கிலோ) மகசூலும் தொடரும் ஆண்டுகளில் 50-75 பழம் (10-15 கிலோ) என அதிகரித்து 10வது ஆண்டில் 500 பழம் (100 கிலோ) வரை மகசூல் கிட்டும். 20-40 வயதில் மரம் 1000 முதல் 3000 வரையில் பழம் (200 – 600 கிலோ) மகசூல் கிட்டும். 40-50 ஆண்டுகள் வரை மாவில் நல்ல மகசூல் எடுக்கலாம். அதன் பின் மாமரத்திற்கு வயது அதிகரிக்க, அதிகரிக்க மகசூல் குறையத் துவங்கும். மாம்பழத்தின் ஆயுட்காலம் 2 முதல் 3 வாரங்கள் மட்டுமே. 13 C குளிர் நிலையிலும் சேகரித்து வைக்கலாம். சில ரகங்கள் 10 C குளிர் நிலையிலும் வைக்கலாம். மாம்பழத்தை குளிர்பதன கிடங்கில் வைக்க அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்களான தரம் பிரித்தல், கழுவுதல், உலரவைத்தல், மெழுகு பூசுதல், சிப்பமிடல், முன் குளிரூட்டல், அடுக்குகளில் அடுக்குதல் போன்ற நில செய் நேர்த்திகளைச் செய்ய வேண்டும்.
மாமரங்களில் தத்துப் பூச்சிகள், பூங்கொத்துக்கள், இளம் குருத்துகள், இலைகள் ஆகியவற்றிலிருந்து சாறினை உறிஞ்சி சேதப்படுத்துவதுடன் கரும்படல நோய் பூசணங்களை வளர்க்கும். இயற்கை முறையில் கட்டுப்படுத்த வெர்டிசீலியம் லகானி என பூசன உயிர் கலவை தெளிக்கலாம். அதனை தொடர்ந்து மூலிகை பூச்சி விரட்டி, வேப்பங்கொட்டைச் சாரு தெளிக்கலாம் ரசாயன முறையில் 1 லிட்டர் தண்ணீரில் 1 மில்லி பஸ்போமிடான் அல்லது மோனோ குரோட்டோபாஸ் தெளிக்கலாம். மாவு பூச்சி (mealy bug) கட்டுப்படுத்த இயற்கையில் வேப்ப எண்ணெய் கரைசல், ரசாயனத்தில் 1 லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி மீதைல் பாரத்தியான் தெளிக்கலாம்.
மாமரத்தண்டையும், கிளைகளையும் துளையிட்டு உண்கின்ற தண்டுப்புழு மாமரத்தின் இலைகளை வாட வைத்து, காய வைத்து விடும். தண்டு துளைப்பான் துளைத்த துளைக்குள் கம்பியை விட்டு குத்தி கொண்டோ, வேப்ப எண்ணெய்யை ஆயில் கன் மூலம் உட்செலுத்தி இயற்கை வழியிலும், ரசாயன வழியில் அலுமினிய பாஸ்பைட் அல்லது செல்பாஸ் போன்ற புகை நஞ்சு மாத்திரைகளை துளையிலிட்டு களிமண் கொண்டு துளையை அடைத்துப் புழுவை கொல்லலாம்.
பழ ஈக்களின் தாய் பூச்சியானது மாம்பழங்களில் துளையிட்டு முட்டையிடும். அதிலிருந்து பொரித்து வெளிவரும் புழுக்கள் மாம்பழ சதையை உண்டு பழத்தை அழுகி கீழே உதிர வைக்கும். இயற்ஐயாக கட்டுப்படுத்த மரத்தடியில் உள்ள மண்ணை கிளறிவிட்டு கூட்டுப்புழுவை அழிக்க வேண்டும். ரசாயனம் மூலம் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் 1 மில்லி மீதைல் யூஜினால் மற்றும் 1 மில்லி மாலத்தியான் கலந்து இக்கலவையில் 10 மில்லி எடுத்து ஏக்கருக்கு 10 இடத்தில் கவர்ச்சி பொறியாக வைத்து ஈக்களை கவர்ந்து கொல்லலாம்.
மா இலைகளில் பழுப்பு / கருப்பு வண்ண ஒழுங்கற்ற வட்ட வடிவில் புள்ளிகள் தோன்றும். கிளைகள் பின் நோக்கி காயும். இது பூசணத்தால் ஏற்படும் நோய். இயற்கை வழி கட்டுப்பாட்டிற்கு சூடோமோனஸ் புளோசென்ஸ் எனும் பேக்டீரியா நுண்ணுயிர் கலவையை அக்டோபர், நவம்பர் முதல் காய் உருவாகும் வரை 6-7 முறை தெளித்து கட்டுப்படுத்தலாம். ரசாயனமுறையில் கார்பண்டசிம் 1 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து நவம்பர், டிசம்பரில் 15 நாள் இடைவெளியில் 4 முறை தெளிக்க வேண்டும். Sooty mould எனும் கரும்படல நோய் உறிஞ்சி சாப்பிடும் பூச்சிகள் சுரக்கும் தேன் போன்ற திரவத்தால் இலைகள், இலைக்காம்புகள், பூங்கொத்துகள், காய்கள் மீது படர்வதால் ஒளிச்சேர்க்கை குறைவதுடன் கறுப்பு நிறமாவதால் பழவிற்பனையும் பாதிக்க்படுகின்றது. இயற்கை முறையில் கட்டுப்படுத்த 5 கிலோ மைதா மாவை 10 லிட்டர் இளம் சூடு உள்ள தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து பின் இக்கலவையை 90 லிட்டர் தண்ணீரில் கலந்து கரும்படலம் இருக்கும் பகுதியில் நன்கு தெளிக்க வேண்டும். காய்ந்தும் பசைமாவோடு கரும்படலமும் சேர்ந்து பெயர்ந்து கீழே உதிரும். ரசாயன முறையில் 1 லிட்டர் தண்ணீரில் 1.5 மில்லி மோனோ குரோடாபாஸ் தெளித்து பின் 1 சதவிகித போர்டோ கலவை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
குளிர் காலத்தில் மாமரத்தில் பூங்கொத்துகள் தோன்றும் சமயம் சாம்பல் நோய் (powdery mildew) அதிகம் தாக்கும். இயற்கை முறையில் வேப்பங்கொட்டை சாறு தெளித்தும் ரசாயன முறையில் 2 கிராம் நனையும் கந்தக தூளை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்கும் முன் பூத்த உடன், பூத்து முடித்த உடன் என மூன்று முறை தெளித்தால் சாம்பல் நோய் வராது தடுக்கலாம்.
மாவிலையின் மேல் தோன்றும் ஆரஞ்சு அல்லது செந்நிற புள்ளிகள் துரு நோயின் பாதிப்பு ஆகும். மரங்கள் அடர்த்தியாக இருந்தால் அடைமழை காலங்களில் இந்த நோய் பரவும். இயற்கையாக கட்டுப்படுத்த சூடோமோனஸ் பிளாரசன்ஸ் தெளித்தும், ரசாயன முறையில் காப்பர் ஆக்ஸி குளோரைடு தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
பூக்கள் மிக நெருக்கமாக உருவாகி, பூக்காம்புகள் மிக சிறியதாகி, பூங்கொத்து ஒரு பந்துபோல் ஆகிவிடும். இந்த பூக்களிலிருந்து காய்கள் உருவாகாது. பூக்கள் மலட்டுப் பூக்களாக இருக்கும். 200 ppm நேப்தலின் அசிடிக் அமிலம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
நமது மண்ணுக்கு ஏற்ற மா ரகத்தை, நமது பகுதியில் நன்கு விளைச்சல் கொடுத்து எளிதில் விற்பனையாகும் ரகத்தை தேர்வு செய்து நடவு செய்து முதல் 5 ஆண்டுகளுக்கு மாஞ்செடியினை பராமரித்து தோப்பாக்கினால் அதன் பின் அந்த மாந்தோப்பு நம்மை பராமரிக்க துவங்கிவிடும். தரமான மாங்கன்று, முறையான பராமரிப்பு இருந்தால் இன்றைய உலக சந்தை பொருளாதாரத்தில் ‘மா’ வெற்றிக்கரமான விவசாயம் தான் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்