பூத்து குலுங்கும் மாமரங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன. சாதகமான காலநிலை நிலவுவதால், 100 சதவீதம் விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ஒருங்கிணைந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 55 ஆயிரம் ஹெக்டரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் செந்தூரா, அல்போன்ஸா, பெங்களூரா, நீலம், பங்கனப்பள்ளி உள்ளிட்ட ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

மானாவாரி நிலங்கள் அதிகம் கொண்ட பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் பெங்களூரா ரக மா அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. பெங்களூரா ரகங்கள் பெரும்பாலும் மாங்கூழ் தொழிற்சாலைக்கு விற்பனைக்கு செல்கிறது.
மா சாகுபடியை பொறுத்த வரையில் ஆண்டுதோறும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்க ஆரம்பிக்கும். ஏப்ரல் மாதம் இறுதியில் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் மா அறுவடை நடக்கும். தற்போது மாவட்டத்தில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்க தொடங்கி விட்டன.

தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

  • தர்மபுரி மாவட்டத்தில் பருவ நிலை மாற்றங்கள் காரணமாக பூக்கள் உரிய காலத்தில் பூப்பது தடுக்கப்படுகிறது. இதை தவிர்க்க முறையான பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் கடைப்பிடித்தால், சீரான பூக்கள் மலர வாய்ப்புள்ளது.
  • முறையான நீர் பாசனம், மக்கிய தென்னை நார் கழிவு இடுதல் போன்ற பயிர் ஊக்கிகள் பயன்படுத்துதல், பரிந்துரை செய்யப்பட்ட ரசாயன உரம், தொழு உரம் இடுதல், கவாத்து செய்தல் மற்றும் காய்ந்த குச்சிகள், பூங்கொத்துக்கள் ஆகியவற்றை நீக்கி முறையான பயிர் பாதுகாப்பு செய்வதன் மூலம் நிலையான மகசூல் பெற முடியும்.
  • பூச்சி மற்றும் பூச்சாண மருந்துகளை விவசாயிகள் தேர்வு செய்து தெளித்து, பூங்கொத்து மற்றும் மலர்கள் நன்கு செழிப்படையும் வகையில் பயிர் நிர்வாகத்தில் ஈடுபட வேண்டும்.
  • மேலும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் (தத்துப்பூச்சி) இலைபேன், உண்ணிகள் மற்றும் இலைப்பிணைப்பு பூச்சிகளையும், மொட்டுகள் கருகல், பறவைகள் கண் நோய் ஆகியவற்றில் இருந்து காக்க வேண்டும்.
  • பூக்கள் உதிராமல் காப்பதுடன் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிஞ்சு வளரும் பருவத்தில் மூன்று முறை பரிந்துரை செய்யப்படும் மருந்துகளை தெளித்து, பூச்சி மற்றும் பூஞ்சாண மருந்துகளை தெளித்தால், மா உற்பத்தியை பெருக்க முடியும் என்றனர்.
  • மா மரத்தை பொறுத்த வரையில் ஓராண்டு உற்பத்தி குறைந்தால், அடுத்தாண்டு பம்பர் உற்பத்தி கிடைக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.
  • இந்தாண்டு நல்ல சீதோஷ்ண நிலையும், மாவுக்கு தேவையான மழையும் பெய்திருப்பதால், நல்ல மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. காலையில் குளிர்ந்த காற்றும், பகலில் வெப்ப காற்றும் வீசுவதாலும், பருவநிலை மாற்றத்தாலும், சில மரங்களில் மாம்பூ அதிகளவில் பூத்துள்ளது என்றார்.

நன்றி:தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *