ஸ்ரீபெரும்புதூர் – திருவள்ளூர் சாலையில், செங்காடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 2,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, நீர் பற்றாக்குறை காரணமாக, இங்குள்ள விவசாயிகள், நெல் பயிருக்கு மாற்றுப் பயிராக, சவுக்கு, மா ஆகியவற்றை பயிரிட துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், தோட்டக் கலைத் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, மாந்தோட்டத்தில் ஊடுபயிராக மிளகாய், கத்திரிக்காய் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி விவசாயி சுந்தரவரதன் கூறியதாவது:
- எனக்கு சொந்தமான நிலத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில், மா மரங்களின் இடையே, சொட்டுநீரை பயன்படுத்தி, ஊடுபயிராக, கத்திரிக்காய், மிளகாய் மற்றும் பப்பாளி ஆகியவற்றை பயிரிட்டு வருகிறேன்.
- சொட்டு நீர் பாசன கருவிகளை அமைக்க, தோட்டக் கலைத்துறை சார்பில், 75சதவீத மானியம் வழங்கி உள்ளனர்.
- வீரிய ரக விதைகள் என்பதால், செடிகளுக்கு நோய் தாக்குதல் குறைவாக உள்ளது. நல்ல விளைச்சல் உள்ளதால், லாபம் கிடைக்கிறது,” என்றார்.
- தென்னை நார் கழிவுகளை கொண்டு, குழித்தட்டு முறையில், விதை விதைக்கப்பட்டு, 40 நாட்களில், நடவு செய்ய வேண்டும். 75வது நாளில் இருந்து, மிளகாய் காய்க்க துவங்கும். தொடர்ந்து, ஏழு மாதங்கள் வரை விளைச்சல் கொடுக்கும்.
- இதுகுறித்து, வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ராணி கூறுகையில்,””செங்காடு கிராமத்தில் உள்ள விவசாயிகளில், 90 சதவீதம் பேர், மாந்தோட்டம் அமைத்துள்ளனர். இதில், ஊடுபயிராக மிளகாய், கத்திரி போன்றவை பயிரிட ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி, யு.எஸ்.172 ரக கத்தரி விதைகளை, விவாயிகளுக்கு வழங்கி உள்ளோம். தொடர்ந்து, நான்கு மாதங்கள் வரை, கத்திரிக்காய் அறுவடை செய்யலாம்,” என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்