தற்போதைய நிலையில் மாமரங்களில் நன்றாக விளைச்சல் கண்டுள்ளதால் காய்கள் அறுவடையும் தொடங்கியுள்ளது. பறித்த காய்களை இயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்வதன் மூலம் அதிகம் லாபம் பெறலாம் என மா சாகுபடி விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
16,800 ஹெக்டேரில் மா சாகுபடி :
திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் பயிருக்கு அடுத்து விவசாயிகளால் விரும்பும் பயிராக மாமரச் சாகுபடி இருந்து வருகிறது. இம்மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, பூண்டி, பென்னலூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், கடம்பத்தூர், கொப்பூர், வெங்கல், தாமரைபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மா சாகுபடி மொத்தம் 16,800 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், மா வகைகளான நீலம், பங்கனப்பள்ளி, அல்போன்சா, இமாம்பஸந்த், பெங்களூரா மற்றும் இம்மாவட்டத்திற்கான சிறப்பு ரகமான சவ்வாரி ரகம் உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்குக் காரணம் நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலம் இப்பகுதியில் அதிகமாக உள்ளன. அதோடு மா பயிர் செய்வதற்கு ஏற்ற வகையில் மண்ணின் கார அமிலத் தன்மையும் சரியான விகிதத்தில் உள்ளன. மேலும், பூக்கும் பருவம், காய் பிடிக்கும் பருவம் வரையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் மட்டுமே நல்ல மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் பராமரிப்பு பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் மாம்பழ சீசன் மார்ச் மாதம் தொடங்கி, ஜூன் மாத இறுதி வரையில் நீடிக்கும். தற்போதைய நிலையில் மா மரங்களில் காய் விளைச்சல் நன்றாகவே உள்ளது. சிலர், காய்கள் நன்றாக முற்றும் முன்பே அறுவடை செய்கின்றனர். இதனால் போதுமான விலை கிடைக்காது. இவை, பழுக்க வைத்தாலும் ருசிக்காது. அதேபோல், மணமும் இருக்காது. அதனால் விரும்பி வாங்க மாட்டார்கள்.
ஒரு ஏக்கரில் மா சாகுபடி: ஒரு ஏக்கரில் 500 மாமரங்கள் வரையில் இருக்கலாம்.
இதில் நன்றாக விளைந்தால் குறைந்தது 80 கிலோ முதல், 150 கிலோ வரையில் கிடைக்கும். தற்போது, சதைப்பற்று நிறைந்த பழுக்கும் பருவத்தில் உள்ள காய்கள் ரூ.40 முதல் ரூ.50 வரையில் விற்பனையாகிறது. அதேபோல், ஊறுகாய்க்கு பயன்படும் காய்கள் ரூ.20 முதல் ரூ.25 வரையில் விற்பனையாகிறது. ஒரு ஏக்கர் பராமரிப்புக்கு குறைந்தது ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையில் செலவாகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அறுவடை செய்யும் பருவம்:
காய்கள் காய்க்க ஆரம்பித்த பிறகு, காய்களின் வளர்ச்சிக்காக ஒருமுறை “வளர்ச்சி ஊக்கி’ தெளிக்க வேண்டும். அதையடுத்து நன்றாக விளைந்த காய்களை, அதாவது மாம்பழத்தின் காம்பு தளர்ச்சி அடைந்து பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறியிருக்கும். இந்த அறிகுறிதான் பழத்திற்கு சரியான பருவம் என்பதால் வலை மூலம் காய்கள் அடிபடாமல் பாதுகாப்பாக அறுவடை செய்வதுஅவசியம்.
ஆனால், சிலர் பாதி முத்தியதும், அவசரமாக பணமாக்க வேண்டும் என்பதற்காக பறித்து விடுகிறார்கள். இது தவறான கண்ணோட்டமாகும்.
இதில் எக்காரணம் கொண்டும் காய்களை அடிபடாமல் பறிக்க வேண்டும். இதேபோல் அடர் நடவு முறையில் இருந்தால் நின்று கொண்டே கைகளால் பறிக்க முடியும். அதனால் மாங்காயின் காம்பை 10 செ.மீ. -இல் இருந்து 20 செ.மீ. வரை இடைவெளி விட்டு கத்தரி உதவியோடு அறுவடை செய்ய வேண்டும்.
இதனால் மாங்காய் பறிக்கும் போது பால் அதன் தோல் மீது தெறிக்காமல் பாதுகாக்கப்படும். மாங்காய் பால் தோல் மீது படும் இடம் கரும் புள்ளியாக மாறிப் பழம் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. மேலும் இதனால் கெட்டும் போகும்.
பழ ஈக்களை கட்டுப்படுத்த…:
காய்கள் காய்க்கத் தொடங்கும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பழ ஈக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். பழ ஈக்கள் மஞ்சள் நிறத்தில், வீட்டு ஈக்களை விட பெரிதாக காணப்படும். இந்த ஈக்கள் முதிர்ந்த காய்களை துளைத்து முட்டைகளையும் இடுகின்றன. பின்னர் அந்த முட்டைகள் பொரிந்து புழுக்கள் வெளிவந்தவுடன் பழத்தை துளைத்து அழுகச் செய்யும்.
இதனால் அடிக்கடி பழம் அழுகி மரத்திலிருந்து கீழே விழும். இதனால், விவசாயிகள் நஷ்டம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த ஈக்களை கட்டுப் படுத்த காய்களுக்கு “வளர்ச்சி ஊக்கி’ தெளிக்கும் போது ஈக்களை விரட்டவும் “ஊக்கி’ தெளித்து பாதுகாக்க வேண்டும்.
இயற்கை முறையில் பழுக்க…:
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் முத்துதுரை கூறியதாவது: இதில் நன்றாக முற்றிய காய்களைப் பறித்து பாதுகாப்பாக இயற்கை முறையில் காற்று புகாத அறையில் வைத்து மாங்காய்கள் மீது வைக்கோல் போர்த்த வேண்டும்.
இதுபோன்று செய்வதன் மூலம் குறைந்தது ஒருவாரம் முதல் 10 நாள்களில் நன்றாக பழுக்க ஆரம்பித்து விடும். இந்த முறையில் ஒரே தடவையில் பழுக்காமல் குறைந்தது 5 நாள்களில் இருந்து 10-ஆவது நாள் வரையில் பழுப்பதால் அழுகல் இல்லாமல் இருக்கும். மேலும், நல்ல மணமாக இருப்பதோடு அவ்வப்போது எளிதாக விற்பனை செய்ய முடியும். இதையடுத்து அரசால் அனுமதித்த எத்தலீன் திரவத்தைக் கலந்து மாங்காய்களை 3 முறைகளில் பழுக்க வைக்கலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்