மாவில் அடர் முறை நடவு

பால்காரன்கொட்டாய் கிராமம், கோவிந்தபுரம் அஞ்சல், ஊத்தங்கரை வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் மா சாகுபடியில் நல்ல அனுபவம் பெற்றவர். இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், பேரம்பட்டு கிராமத்தில் சுமார் 5 ஏக்கரில் ஆல்போன்சா ரக மரங் களை நட்டு விவசாயம் செய்து வருகிறார். தனது மரங்களுக்கு சொட்டுநீர் பாசனம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் வளமான செம்மண் உள்ளது. இந்த மண்ணின் ஆழம் சுமார் 6 அடியாகும். விவசாயி மரங்களை “அடர்வு’ முறையில் நட்டுள்ளார். இவரது 5 ஏக்கர்கள் பரப்பில் 15 து 15 என்ற இடைவெளியில் ஆல்போன்சா ஒட்டு மாஞ்செடிகள் மொத்தம் 950 நட்டுள்ளார்.

மாவில் ஊடுபயிர்கள்:

 • இவரது ஊர் பக்கம் மானாவாரி நிலங்களில் அவரை, துவரை, உளுந்து, பாசிப்பயறு, காராமணி போன்றவைகளை விவசாயிகள் சாகுபடி செய்துவருகின்றனர்.
 • விவசாயி மேற்கண்ட பயிர்களை தனது மாந்தோட்டத்தில் ஊடு பயிராக சாகுபடி செய்துள்ளார்.
 • அவரை மற்றும் துவரை பயிர் செய்யும் காலம் ஜூன் முதல் ஜூலை 15 முடிய. உளுந்து, பாசிப்பயறு, காராமணி பயிர்செய்யும் காலம் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் முடிய.
 • சாகுபடி செய்த பயிர்களில் துவரை 6 மாதம் முதல் 7 மாதம் உள்ள காலத்தில் காய்கள் அனைத்தும் முதிர்ச்சி அடைந்து வருகின்றன.இவைகளின் மகசூலினை எடுக்கிறார்.
 • அடுத்து துவரையில் 6 மாதம் கழித்து மகசூல் எடுக்கிறார். உளுந்து, பாசிப்பயறு, காராமணி இவைகள் 90ம் நாள் முதல் 120 நாட்களில் அறுவடைக்கு வருகின்றன. இவைகள் சாகுபடியில் விவசாயிக்கு கணிசமான லாபம் கொடுக்கின்றன.
 • துவரையில் ரூ.13,000. அவரையில் ரூ.8,000. இதர பயிர்களில் ரூ.8,000 லாபம் எடுக்கிறார். இவரது சாகுபடியை பல விவசாயிகள் பார்த்து ஊடுபயிர் சாகுபடியில் இவ்வளவு லாபமா என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
 • இவர் மாமரங்களுக்கு ஜூன் மாதம் கவாத்து செய்து முடித்தவுடன் மரம் ஒன்றுக்கு தொழு உரம் 30 கிலோ, டிஏபி 1 கிலோ, யூரியா 1 கிலோ, பொட்டாஷ் அரை கிலோ, வேப்பம் பிண்ணாக்கு ஒரு கிலோ இடுகிறார்.
 • விவசாயி செய்துவரும் கட்டுக் கோப்பு சாகுபடி முறைகள் அவர் தோட்டத்தில்உள்ள மாமரங்களுக்கு 3 வருடம் முடிந்தவுடனேயே பலர்
  ஆச்சரியப்படும்படி காய்ப்பிற்கு கொண்டுவந்துவிட்டன.
 • இந்த மரங்களில் காய்த்துள்ள காய்களின் எடை 300 அல்லது 350 கிராமாக உள்ளன. இந்த காய்களுக்கு கிலோவிற்கு விலை ரூ.35லிருந்து ரூ.40 வரை கிடைக்கின்றது.
 • விவசாயி மரங்களை நெருக்கமாக நட்டுள்ளதால் மரங்கள் பூதாகரமாக வளராமல் அழகிய சிறிய மரங்களாகவே வளர்ந்துள்ளன.
 • மரங்கள் சிறியதாக வளர்ந்துள்ளதால் விவசாயி நன்மைகள் பெற்றுள்ளார். சிறிய மரங்களில் கவாத்து செய்வது சுலபமாக உள்ளது. செலவு குறைவு. சிறிய மரங்களுக்கு பயிர் பாதுகாப்பு, நீர் பாசனம் போன்ற பணிகளுக்கு செலவு குறைவு. சிறிய மரங்களில் காய்களை அடிபடாமல் பறிப்பது சுலபம்.அறுவடை செலவு குறைவு.
 • இவரது தோட்டத்தை பல விவசாயிகள் நேரில் வந்து பார்க்கின்றனர். விவசாயி தண்டபாணி தான் அனுசரித்துவரும் சாகுபடி முறைகளை விவசாயிகளுக்கு பொறுமையாக விளக்கி வருகிறார்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *