மா தத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வழிகள்

நோய்க்கான அறிகுறிகள்

 • மா தற்போது பூத்து உள்ளதா? மா இலைகள் பகல் வெயிலில் பளபளவென்று எண்ணெய் தேய்த்துவிட்டது போல் மினுமினுப்பாக உள்ளதா?
 • மினுமினுக்கும் இலைகளை தொட்டுப் பாருங்கள், தேன் தெளிக்கப்பட்டது போன்று பிசுபிசுப்பாக உள்ளதா?
 • அப்படி இலைகள் மினுமினுப்புடன், பிசுபிசுப்பாகவும் காணப்பட்டால் இந்த இலைகளுக்கு மேலுள்ள பூங்கொத்துகளை மா தத்துப்பூச்சி தாக்கியுள்ளது.
 • பூங்கொத்துக்களை உற்று நோக்கினால் சிறிய பழுப்பு நிறமுள்ள, பக்கவாட்டில் நகரக்கூடிய தத்துப்பூச்சிகளை காணலாம்.
 • மா தத்துப்பூச்சிகள் முட்டைகளை இளங்குருத்துக்கள், பூக்கொத்துகள், இலைகளில் துளைத்து வைக்கின்றன.
 • இதனால், முட்டை உட்செலுத்தப்பட்ட பகுதிக்கு மேற்பகுதி வாடி கருகிவிடும். மேலும், முட்டையிலிருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள் மற்றும் முழு வளர்ச்சியடைந்த தத்துப்பூச்சிகள் இலைக்குருத்து மற்றும் பூங்கொத்துகளின் சாற்றினை உறிஞ்சுகின்றன.
 • இதனால் பூங்கொத்துகள் வலுவிழக்கின்றன. தாக்குதல் தீவிரப்பட்டால், பூ மொட்டுகள், பூக்கள், இளம் பிஞ்சுகள் காய்கள் உதிர்கின்றன. மேலும் இப்பூச்சிகள் வெளியேற்றும் தேன்பாகு போன்ற கழிவுகள் இலைகளின் மீது படிந்து கரும்பூசணம் வளர்ந்து ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுகிறது.

நோய் தாகும் பழ வகைகள்

 • நெருக்கி நடப்பட்ட தோப்புகளில் சேதம் விரைந்து பரவும்.
 • மல்கோவா, நீலம், செந்தூரம் போன்ற ரகங்கள் பெரும் பாதிப்புக்குள்ளவாதுண்டு. பெங்களூரா மற்றும் சப்பட்டை எனப்படும் பங்கனப்பள்ளி அல்லது பனேசன் ரகங்களில் தாக்குதல் சற்று குறைந்து காணப்படும்.

நோய் தடுக்கும் வழிமுறைகள்

 • மா நடவு செய்யும் போதே சிபாரிசு செய்யப்படும் இடைவெளியில் மரங்களை நட வேண்டும்.
 • முடிந்தவரை பாதிப்புக்குள்ளான பூங்கொத்துகளை கவாத்து செய்து அகற்றி எரித்து அழிக்க வேண்டும்.
 • காய்ந்த சருகுகளை தீயிட்டு புகைமூட்டம் செய்து தாக்குதலை ஓரளவு குறைக்கலாம்.
 • ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒன்றரை மில்லி பாசலோன் அல்லது ஒரு கிராம் அசிப்பேட் கலந்து இலைகள், பூங்கொத்துகள், தண்டுகளில் ராக்கர் தெளிப்பான் மூலம் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
 • மாலை நேரத்தில் தெளிப்பது நல்ல பலன் தரும்.
 • தேவைப்பட்டால் பத்துநாட்கள் கழித்து மறுமுறை தெளிக்கலாம்.
 • மருந்து கரைசல் இலைகளில் நன்கு படிவதற்காக, சாண்டோவிட், இன்ட்ரான் போன்ற திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு அரை மில்லி வீதம் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முருகேசன் தனது செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *