செடி முருங்கை சாகுபடி

‘‘அடித்து வளர்க்காதப் பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் பயனில்லாமல் போய் விடும்’ என்பது விவசாயிகள் மத்தியில் சொல்லப்படும் சொலவடை. முருங்கை மரம், உயரமாக வளர்ந்தால், அதில் ஏறி காய் பறிக்க முடியாது.

தவிர, முருங்கை மரம் லேசானது என்பதால் ஆட்கள் ஏறினால், எடை தாங்காமல் உடைந்து விடும் என்பதால்தான் அப்படிச் சொல்லி வைத்தார்கள். இன்றோ, ஒடித்து வளர்க்க அவசியமில்லாத செடிமுருங்கைகள், விவசாயிகள் மத்தியில் வெகுவாக செல்வாக்கு பெற்று வருகின்றன. அதிக செலவில்லாமல் நல்ல வருமானம் எடுக்க முடியும் என்பதும் இன்னொரு முக்கிய காரணம்!

குறைந்த பரப்பில் செடிமுருங்கையைப் பயிரிட்டு, நல்ல வருமானத்தை எடுத்து வருகிறார், சேலம் மாவட்டம், ராமநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி. இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமான தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக இருக்கிறார்.

செடிமுருங்கைக்குக் குறைஞ்ச தண்ணி போதும்னு, ஒருத்தர் சொன்னதால, செடிமுருங்கை சாகுபடிக்கு மாறினேன். இப்போ நாலு வருஷமா, 30 சென்ட்ல செடி முருங்கை, 70 சென்ட்ல மஞ்சள், ஒரு ஏக்கர்ல நெல்னு சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன். மஞ்சளுக்கு ஊடுபயிரா செடிமுருங்கை போட்டா… மகசூல் நல்லாருக்கு. செடிமுருங்கையில நாலு வருஷம் வரைக்கும் மகசூல் கிடைக்கும். ஆனாலும், நான் ஒரு வருஷம்தான் வெச்சிருப்பேன்.

‘பசுமை விகடன்’ புத்தகத்தை வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். அதுல வெளியாகுற இயற்கை விவசாய முறைகளைப் பயன்படுத்த ஆரம்பிச்சதும் செலவு குறைஞ்சது. மகசூலும், வருமானமும் அதிகமாச்சு” என்ற பொன்னுசாமி, செடிமுருங்கை சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.அது அப்படியே பாடமாக இங்கே…

வைகாசிப் பட்டம்!

”களர் மற்றும் உவர் நிலங்களைத் தவிர்த்து, வடிகால் வசதியுள்ள அனைத்து நிலங்களிலும் செடிமுருங்கை நன்றாக வளரும். இதற்கு வைகாசிப் பட்டம் ஏற்றது. இதன் ஆயுள்காலம் நான்கு ஆண்டுகள். தனிப்பயிராகவோ… ஊடுபயிராகவோ சாகுபடி செய்யலாம். தனியாக நடவு செய்வதாக இருந்தால், நிலத்தை நன்றாக உழவு செய்து கொள்ள வேண்டும். 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்வதற்காக குறித்த இடத்தில் ஓர் அடி இடைவெளியில் மூன்று துளைகள் இட்டு, துளைக்கு ஒரு விதை வீதம் நடவு செய்ய வேண்டும். இதில் ஒன்று பழுதானாலும், மற்றவை பிழைத்துக் கொள்ளும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து, தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 8-ம் நாள் முதல் 10-ம் நாளுக்குள் முளைத்து வந்துவிடும். ஊடுபயிராக செய்வதாக இருந்தால், மஞ்சள் நடவு செய்த மூன்றாம் மாதத்தில் களை எடுத்த பிறகு, 10 அடி இடைவெளியில் செடிமுருங்கையை விதைக்க வேண்டும். தனியாக உரம் வைக்கத் தேவையில்லை. முதன்மைப் பயிருக்கு இடும் உரமே போதுமானது.

தனிப்பயிராக சாகுபடி செய்யும்போது, ஒன்றரை மாதங்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். 6-ம் மாதத்தில் மண் அணைக்க வேண்டும். 45-ம் நாளில் ஒரு செடிக்கு ஒரு கிலோ மண்புழு உரத்துடன் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கும்; 90-ம் நாளில் ஒரு செடிக்கு ஒரு கிலோ மண்புழு உரத்துடன் 200 கிராம் வேப்பம் பிண்ணாக்கும்; 130-ம் நாளில் ஒரு கிலோ மண்புழு உரத்துடன் 400 கிராம் வேப்பம் பிண்ணாக்கும் கலந்து வைக்க வேண்டும். 30-ம் நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை டேங்குக்கு (10 லிட்டர்) 300 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் தென்பட்டால், டேங்குக்கு 1 லிட்டர் வீதம் மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்கலாம். 50 லிட்டர் அமுதக்கரைசல், 50 லிட்டர் ஜீவாமிர்தக்கரைசல் ஆகியவற்றை மாதம் ஒரு முறை சுழற்சி முறையில் பாசனத் தண்ணீரில் கலந்து விட வேண்டும்.

கொழுந்து கிள்ளல் அவசியம்!

3 முதல் 4 மாதங்களில் மூன்று அடி உயரம்; 4 முதல் 5 மாதங்களில் ஐந்து அடி உயரம்; 5 முதல் 6 மாதங்களில் ஏழு அடி உயரம் என வளர்ந்து வரும். இந்தக் காலகட்டங்களில் முருங்கைச் செடிகளில் உள்ள ‘கொழுந்து’ பகுதியைக் கிள்ளிவிட வேண்டும். அதற்குமேல், அதிக சிம்புகள் விட்டு வளர ஆரம்பித்துவிடுவதால், கொழுந்து கிள்ளத் தேவையில்லை. 4-ம் மாதத்தில் பூ எடுக்க ஆரம்பித்து, 5-ம் மாதத்தில் இருந்து பிஞ்சுகளாக மாறி, 6-ம் மாதத்தில் காய்கள் அறுவடைக்குத் தயாராகும். அதிலிருந்து, சுமார் 6 மாதங்களுக்குத் தொடர்ந்து அறுவடை செய்யலாம். ஒரு மரத்தில் இருந்து, 200 முதல் 300 காய்கள் கிடைக்கும். ஒவ்வொரு காயும், ஒன்றரை முதல் மூன்று அடி நீளம் கொண்டதாக இருக்கும்”

30 சென்ட்… 50 ஆயிரம்!

சாகுபடிப் பாடம் முடித்த பொன்னுசாமி நிறைவாக, ”ஒரு மரத்தில் 20 கிலோ முதல் 30 கிலோ வரை மகசூல் கிடைக்கும். 30 சென்ட் நிலத்திலுள்ள 100 மரத்திலயும் சேர்த்து சராசரியா 2 ஆயிரத்து 500 கிலோ முருங்கைக்காய் கிடைக்குது. ஒரு கிலோவுக்கு சராசரியா விலை 20 ரூபாய்னு விற்பனை செய்றதுல

50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதில் 15 ஆயிரம் ரூபாய் செலவுனு வெச்சுக்கிட்டாலும், 35 ஆயிரம் ரூபாய் லாபம்” என்றார், மலர்ந்த முகத்துடன்!

தொடர்புக்கு, பொன்னுசாமி, செல்போன்: 09865638120.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *