நாட்டு முருங்கை: 70 சென்ட் நிலம் 120 மரங்கள் லாபம் ரூ.3 லட்சம்

இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்வது ‘லேட்டஸ்ட்’ தொழில்நுட்பமாக மாறி வருகிறது. விவசாயத்தில் ரசாயன உரம், பூச்சிகொல்லி மருந்துகளை பயன் படுத்துவது வெகுவாக குறைந்து வருவது ஆரோக்கியமானது.முழுக்க முழுக்க இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பயிர், செடி வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளை வேளாண்மைத்துறை ஊக்குவித்து வருகிறது. இப்பயிர் வகைகள் ஏற்றுமதி தரம் வாய்ந்ததாக இருப்பதால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது.
இந்த வரிசையில் திண்டுக்கல் மாவட் டம் கொடைரோடு அருகே பள்ளப்பட்டியை சேர்ந்த முன்னோடி விவசாயி சடையாண்டி இயற்கை முறையில் ‘நாட்டு முருங்கை‘ சாகுபடி செய்து வளமான வருமானம் ஈட்டி வருகிறார்.

‘விண் பதியம்’ தொழில்நுட்பம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, வலையபட்டியில் நாட்டு முருங்கை குச்சிகளை வாங்கி வளர்த்தார். அதிலிருந்து வரும் கிளைகளில் ‘விண் பதியம்’ எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரமான நாற்றுகளை உற்பத்தி செய்கிறார். இதற்காக நன்கு வளர்ந்த முருங்கை கிளையின் தடிமனான தண்டுப்பகுதியின் தோலை 1 இஞ்ச் அளவில் வட்டமாக வெட்டி எடுக்கின்றனர்.

தோல் உரித்த தண்டுப்பகுதியை சுற்றிலும் பஞ்ச கவ்யம், அசோஸ் பைரில்லம், கந்தக சக்தி கொண்ட ஈயம், வேப்பம் புண்ணாக்கு, பதப் படுத்தப்பட்ட எரு ஆகியவற்றின் சம அளவிலான கலவையை கைப்பிடி எடுத்து தண்டுப்பகுதியை சுற்றிலும் வைத்து அதன் மீது பிளாஸ்டிக் கவரால் மேலும், கீழும் கட்டி விடுகின்றனர்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

40 நாள் கழித்து தோல் உரிந்த தண்டுப்பகுதியில் வேர் துளிர் விட்டிருக்கும். அதை வெட்டி எடுத்து மண்புழு உரம் கலந்த பிளாஸ்டிக் பாக்கெட்களில் வைத்து 40 டிகிரி வெப்ப நிலையில் ‘சேம்பரில்’ பராமரிக்கின்றனர். பின் வெயிலில் 30 நாட்கள் வைத்து நாட்டு முருங்கை நாற்றுகளை தலா 35 ரூபாய்க்கு விற்கின்றனர்.

இத்தொழில்நுட்பத்தை 15 ஆண்டுகளாக கடைப் பிடித்து நாட்டு முருங்கை சாகுபடியில் வாட்டம் குறையாத லாபம் ஈட்டி சாதனை படைத்து வருகிறார்.

லாபம் ரூ.3 லட்சம்

சடையாண்டி கூறியதாவது:

  • பள்ளப்பட்டியில் 15 ஏக்கர் பரப்பளவில் நாட்டு முருங்கை சாகுபடி செய்கிறேன். தமிழகம் உட்பட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் நாட்டு முருங்கை நாற்றுகளை அனுப்பி வருகிறேன்.
  • உதாரணமாக கொடைரோடு அருகே ராமராஜபுரம் விவசாயி பாலசுப்பிரமணியன் தோட்டத்தில் என்னிடம் வாங்கிய நாட்டு முருங்கை நாற்றுகளை 70 சென்ட் பரப்பளவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் நடவு செய்தார். இதற்காக அவரின் மொத்த செலவு அப்போது ஆறாயிரம் ரூபாய்.
  • நடவு செய்த 120வது நாளில் இருந்து காய்ப்புக்கு வந்து விட்டது. 70 சென்ட் நிலத்தில் 120 மரங்கள் உள்ளன. தற்போது முருங்கை சீசன் குறைவு. எனினும் 120 மரங்களிலும் சடைசடையாய் முருங்கை காய்த்துள்ளன.
  • ஒரு கிலோ முருங்கைக்காய் 30 ரூபாய். சீசன் நேரத்தில் விலை மும்மடங்காக உயரும். இந்த சீசனுக்கு மட்டும் 3 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. ஆண்டுக்கு மூன்று காய்ப்பு எடுக்கலாம்.
  • கால்நடை எருவை பயன்படுத்தி முறையாக பராமரித்தால் 50 ஆண்டுகள் வரை முருங்கையில் தொடர்ந்து லாபம் எடுக்க முடியும்.
  • நெல், கரும்பை ஒப்பிடும்போது தண்ணீர் தேவை மிக மிகக் குறைவு.
  • கீரை, முருங்கைக்காய், முருங்கை விதைகளை பதப்படுத்தி பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர் என்றார்.

விவசாயி பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

  • நாட்டு முருங்கை சாகுபடியில் செலவு மிகக்குறைவு. லாபம் பல மடங்கு என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளோம்.
  • நாள் முழுக்க வயலில் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. காலை, மாலை தலா 30 நிமிடங்கள் செலவிட்டால் போதும். பூமி வறண்டு விட்டால் மட்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மரங்களுக்கு தேவையான அளவு கால்நடை எருவை உரமாக இட வேண்டும். முருங்கையில் இரும்பு சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
  • சைவ உணவில் முருங்கையை தவிர்க்க இயலாது என்பதாலும், இதன் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பண ‘நோட்டு’ எண்ண, ‘நாட்டு’ முருங்கை சாகுபடி ஏற்றது என்றார்.

கா.சுப்பிரமணியன், மதுரை

நாட்டு முருங்கை தொழில்நுட்பம் குறித்து 09791374087 ல் கேட்கலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *