இயற்கையின் அற்புதக் கொடை.. மூங்கில் அரிசி

  • நெல் போலவே இருக்கும்.
  • பழங்குடி மக்களின் முக்கிய உணவு.
  • 60 வயதான மரத்தில்தான் கிடைக்கும்.
  • உடலுக்கு ஊட்டம் கொடுக்கும்.

வாழையடி வாழையாக வாழ்க… மூங்கில் போல் சுற்றம் முறியாமல் வாழ்க’ என மணமக்களை வாழ்த்தும் பழக்கம் நம்மிடையே உண்டு. அதற்குக் காரணம், இந்தத் தாவரங்கள் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றி புதர் போல நெருங்கி வளர்பவை. ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைத்து காலகாலமாக வாழ்பவை. அதனால்தான் திருமண விழாக்களின் போது, மூங்கில் பந்தல்கால் நடுதலும், வாழை மரம் கட்டுதலும் தவறாமல் இடம் பெறுகின்றன.

அப்படி நம் வாழ்வில் ஒன்றியிருக்கும் பயிர்களில் ஒன்றான மூங்கில், மற்ற தாவரங்களைப் போல் ஒவ்வோர் ஆண்டும் பருவத்தில் பூக்காமல்… தன் வாழ்நாளை முடிக்கும்போது தன் இனத்தைப் பரப்புவதற்காக பூத்து விதைகளை உருவாக்கும். கிட்டத்தட்ட கோதுமை போல காட்சியளிக்கும் அந்த விதைகள்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கப்படுகிறது. இந்த விதைகளில் நெல் போலவே, மேலே தவிடு போன்ற தோலும் உள்ளே விதையும் இருக்கும். அதனால்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கிறார்கள்.

மூங்கில் காடுகள்

காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் முக்கிய உணவாக இருக்கும், மூங்கில் அரிசியானது சிங்கவால் குரங்கு, யானை, காட்டு மாடு போன்ற விலங்குகளுக்கும் பிடித்தமான உணவு. பழங்குடி மக்களிடம் இருந்து நாட்டுக்குள்ளும் பரவத் தொடங்கிய மூங்கில் அரிசி, முக்கிய இயற்கை உணவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மலை, மலை சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களிடையே மூங்கில் அரிசி மிகப் பிரபலமாக இருக்கிறது. இயற்கை அங்காடிகள், பாரம்பர்ய உணவுத் திருவிழாக்களில் மூங்கில் அரிசியும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக எல்லைப் பகுதியில் தேன்கனிக்கோட்டையில் இருந்து பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் உள்ள அய்யூர் வனப்பகுதியில் மூங்கில் மரங்களில் நெல் பூத்துள்ளன. இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன் வனத்துறை சார்பாக பரவலாக நடப்பட்ட மூங்கில் மரங்கள்தான் பூத்துள்ளன. தற்போது, அப்பகுதி மக்கள் மூங்கில் நெல்லைச் சேகரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இத்தகவல் அறிந்து அய்யூர் வனப்பகுதிக்குப் பயணமானோம். அய்யூர் வனப்பகுதியின் செல்லும் வழியில் மலை அடிவாரங்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மூங்கில் காடுகள்தான்.

மூங்கில் பூத்தால் மழை பெய்யாது!

மூங்கில் நெல் குறித்து அரசஜ்ஜுர் கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலை என்ற பாட்டியிடம் கேட்டபோது, “60 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு கல்யாணமாகி இந்த ஊருக்கு வந்தேன். அப்போ, ஃபாரஸ்ட்டுகாரங்க மூங்கில் கன்றுகளை நட்டுக்கிட்டு இருந்தாங்க. அந்த மரங்கதான் இப்போ பூத்திருக்கு. நெல் உக்காந்திருக்கிறதைப் பாக்குறப்போ சந்தோஷமாக இருக்கு. மூங்கில்ல இப்படி நெல் உக்காந்தா, அந்த வருஷம் மழை குறைவா பெய்யும், வெள்ளாமை செழிக்காதுனு சொல்வாங்க. ஆனா, இங்க அதையும் தாண்டி மழை பெய்ஞ்சிகிட்டுதான் இருக்கு. மூங்கில் அரிசி கிடைக்கிறப்போவெல்லாம் நாங்க விரும்பி சாப்பிடுவோம். முன்னாடி அந்த அரிசி மட்டும்தான் எங்களுக்குத் தெரியும்” என்றார்.

மாடு மேய்த்துக்கொண்டே நெல் பொறுக்குவோம்!

மூங்கில் வனத்துக்குள் நாம் சென்றபோது, அங்கு மூங்கில் நெல் பொறுக்கிக் கொண்டிருந்தார், பழங்குடி கிராமமான  சித்தலிங்கம்கொட்டாயைச் சேர்ந்த சாமுண்டியம்மா. “எங்க மாமியார்  இருந்தப்போ ‘பிதிரு நெல்லு’ (மூங்கில் நெல்) பொறுக்கிட்டு வருவாங்க. அதை உரல்ல குத்தி அரிசியாக்கி சாப்பிட்டிருக்கோம். இப்போதான், நான் முதல்முறையா இப்பதான் பொறுக்குறேன். போன வருஷமும் இந்தப் பகுதியில நிறைய பேர் பொறுக்கிகிட்டு வந்தாங்க. ஆனா, இந்த வருஷம்தான் அதிகமாக கிடைச்சுகிட்டிருக்கு. நான், 3 மாசமா சேகரிச்சிக்கிட்டிருக்கேன். ஒரு நாளைக்கு 4 கிலோ அளவுக்குக் கிடைக்குது. வீட்டுக்கு வெச்சுக்கிட்டது போக மீதியை விற்பனை செய்வேன். ஒரு கிலோ 40 ரூபாய்னு வாங்கிக்கிறாங்க. ஆடு, மாடுகளை மேய்ச்சிக்கிட்டே பொறுக்கிறதால ஒரு வருமானம் கிடைச்சிடுது. நாங்க கூட்டமாதான் போய் பொறுக்குவோம். மூங்கில் காட்டுல இருக்கிற பொம்மஅள்ளி அம்மன்தான் எங்களுக்கு காவலு” என்றார், சாமுண்டியம்மா.

வீட்டுக்குப்போக மீதி விற்பனைக்கு…

சாமுண்டியம்மாவுடன் இணைந்து நெல் பொறுக்கும் பணியில் இருந்தனர், சிக்கமல்லா-மாதம்மா தம்பதி. அவர்களிடம் பேசியபோது, “போன வருஷத்துல இருந்துதான் இங்க மூங்கில் நெல் கிடைக்குது. மரங்களின் வயசைப் பொறுத்து நெல் கிடைக்கும். இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்குக் கிடைக்கும். அடுத்து எப்போ கிடைக்கும்னெல்லாம் உறுதியா சொல்ல முடியாது. கிடைக்கிறப்போ பொறுக்கியெடுத்து வெச்சுக்குவோம். மரத்துல இருந்து உதிருற நெல்லைத்தான் பொறுக்க முடியும். எடுத்து சுத்தப்படுத்தி சலிச்சு வெச்சுக்குவோம். அதைக் குத்தி அரிசியாக்கி கஞ்சி காய்ச்சி குடிப்போம். தேவை போக மீதியை விற்பனை செய்வோம். போன வருஷம் 7 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. இந்த வருஷம் இதுவரை 10 ஆயிரம் ரூபாய் கிடைச்சிருக்கு. மழை இல்லாம இருந்தாத்தான்  நெல் பொறுக்க முடியும். இல்லாட்டி நெல் எல்லாம் முளைச்சு வந்திடும்” என்றனர்.

மலைவாழ் மக்களுக்கு மட்டுமே உரிமை!

மூங்கில் அரிசி குறித்து பேசிய, அரசஜ்ஜுர் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ், “மூங்கில் மரம் 40 வருஷத்துல இருந்து 60 வருஷம் வரை உயிர் வாழும். அதோட ஆயுள் முடியுற சமயத்துல, பூத்துக் காய்க்கும். அந்த விதைகள் காய்ந்து பூமியில் விழுந்த கொஞ்ச நாள்ல அந்த மூங்கில் மரம் பட்டுப்போயிடும். பூத்த மரம், உள்ளுக்குள் கூடு போல ஆகிடுறதால, வலுவிழந்து போயிடும். வேற எதுக்கும் அதைப் பயன்படுத்த முடியாது. வேர்ல இருந்தே பக்கக் கன்றுகள் முளைக்கும்னாலும், விதை மூலமாகவும் காட்டுக்குள்ள அதிகமா மூங்கில் மரம் பரவும். இந்த விதைகளைப் பொறுக்கிட்டுப் போய்தான் நர்சரிகள்ல மூங்கில் கன்றுகளை உருவாக்குவாங்க.

மழைக் காலத்துல கிடைக்கிற மூங்கில் குருத்துகளைப் பறிச்சிட்டு வந்து மசால் குழம்பு வெச்சி சாப்பிடுவோம். யானைகளுக்கு பிடிச்ச உணவு மூங்கில். அதனால, யானைகள் நடமாட்டம் அதிகமா இருக்கும். அதனால காடுகளுக்குள்ள மதியம் மூணு மணிக்கு மேல யாரும் போக மாட்டோம்” என்ற புஷ்பராஜ் நிறைவாக,

“வனப்பகுதியைச் சார்ந்துள்ள மலைவாழ் மக்களுக்கு மட்டுமே மூங்கில் நெல்லை எடுக்கிறதுக்கு சட்டத்துல உரிமை கொடுத்திருக்காங்க. அதுலயும் கீழ விழுந்திருக்கிறதைத்தான் பொறுக்கணும். மரத்தை வெட்டவோ, சேதப்படுத்தவோ கூடாது” என்றார்.

போர் வீரர்களுக்கான உணவு!

மூங்கில் காட்டுக்குள் மாடு மேய்த்துக் கொண்டிருந்த வீரபத்ரப்பா, “நான் சின்ன வயசுல இருக்கிறப்போ சாப்பிட்டது. பிறகு இப்பதான் சாப்பிடுறேன். உடம்புல இருக்கிற கொழுப்பைக் கரைச்சு எடுக்கிற சக்தி இந்த அரிசிக்கு உண்டு. இதைச் சாப்பிட்டா கழுத்து வலி, இடுப்பு வலி எல்லாம் சரியாகும்” என்றார்.

இதுகுறித்து, சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் கேட்டபோது, “ஆக்சிஜனை அதிகமாக வெளியிடும் மரம் மூங்கில். மூங்கில் அரிசி உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும். அந்தக் காலத்தில் அரசர்கள், போர் தளபதிகள், வீரர்கள் இந்த அரிசியைச் சாப்பிட்டிருக்கிறார்கள். வீரியமான உணவுகளில் இன்றும் மூங்கில் அரிசி இடம் பெறுகிறது. இதில் மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தையமின், ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. உடலில் ஊளைச் சதைகளைக் குறைக்கும் வல்லமை பெற்றது. பசியைக் குறைக்கும். ஆற்றலைப் பெருக்கும். உடல் எப்போதும் உரமாகவும், ஊட்டமாகவும் இருக்க  உதவும். இதை, தினையரிசி, சாமையரிசி ஆகியவற்றோடு கலந்து சமைத்து சாப்பிடலாம். தினசரி உணவில் குறைந்தளவு மூங்கில் அரிசி உணவைச் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு சுகமளிக்கும்” என்றார்.

மூங்கில் அரிசி கஞ்சி!
கிருஷ்ணகிரி மாவட்டம், சித்தலிங்கம்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பாலம்மாள் மூங்கில் அரிசி சமையல் குறித்துச் சொன்னார்.

“மூங்கில் அரிசியில கஜாயம் (அதிரசம்), மாவிளக்கு, கஞ்சி மூணையும்தான் அதிகம் செய்வாங்க. இதை சோறு மாதிரி பொங்கி சாப்பிட முடியாது. கஞ்சியாத்தான் குடிக்கணும். சில பேர் தோசை,  இட்லி செய்வாங்க.

மூங்கில் அரிசிய ஊற வெச்சி, ஒண்ணு ரெண்டா இடிச்சு கொதிக்கிற உலையில கொட்டி கலக்கி வேக விடணும். நல்லா கொதிச்சி, வாசம் வந்ததும் இறக்கி, ஆற வெச்சா கஞ்சி தயார். அதைக் குடிச்சா அவ்ளோ பிரமாதமா இருக்கும். பொதுவா மூங்கில் அரிசி உடம்புக்கு சூடு. அதனால கர்ப்பிணி பெண்களும் சூட்டு உடம்புக்காரங்களும் தவிர்க்கிறது நல்லது” என்றார்.

அரை கிலோ 200 ரூபாய்!

மூங்கில் மரங்கள் அதிகமாக காணப்படும் கேரளா, அஸ்ஸாம், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மூங்கில் அரிசி  விற்பனைக்காக வருகிறது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் வந்து வாங்குகிறார்கள். சென்னையில் பெரும்பாலான இயற்கை அங்காடிகளில் மூங்கில் அரிசி கிடைக்கிறது. தரத்தைப் பொறுத்து, அரை கிலோ மூங்கில் அரிசி 150 லிருந்து 200 ரூபாய் விலையில் கிடைக்கிறது. அதேசமயம் ஆன்லைனிலும் ஷாப்பிங் மையங்களிலும், சூப்பர் மார்க்கெட்களிலும் மூங்கில் அரிசி விற்பனைக்குக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *