தமிழக அரசின் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அடுத்து வாழை இலைக்கான தேவை அதிகரித்து விலையும் கூடியுள்ளதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதிகளான ஜேடர்பாளையம் ஆனங்கூர், வெங்கரை, பொத்தனூர், பாண்டமங்கலம் வேலூர் அனிச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் வந்து கொண்டிருப்பதால் வாழைகள் செழித்து வளர்வதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
பிளாஸ்டிக் பைகளுக்கான தடை விதிக்கப்பட்ட நிலையில் வாழை இலையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்று வந்த ஒரு கட்டு வாழை இலை 600 முதல் 700 ரூபாய் வரை விற்பனையாவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் பைகளுக்கான தடை தொடரும் பட்சத்தில் வாழை, பாக்கு, மட்டை உள்ளிட்டவற்றுக்கான தேவை அதிகரித்து விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்