மதிப்பூட்டல் மூலம் ஜமாய்க்கும் திருச்சி வாழை விவசாயிகள்! அமேசானில் கிடைக்கும் வாழை!

முக்கனிகளில் ஒன்றான வாழை அதிகம் விளையும் மாவட்டங்களில் முக்கிய இடம் திருச்சிக்கு உண்டு. வாழைக்குத் தனியாக ஆராய்ச்சி நிறுவனமும் இங்குதான் உள்ளது. இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள தொட்டியத்தில், 13 விவசாயிகள் சேர்ந்து வாழைப்பழங்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து வருகின்றனர். இந்தக் கூட்டு முயற்சியில் இருக்கும் விவசாயிகளில் ஒருவரான சுப்ரமணியத்திடம் பேசினோம்.

“வாழைப்பழம் அதிகபட்சம் மூன்று நாள்களுக்குமேல் தாங்காது. எனவே, ஆறு மாதங்கள், ஒரு வரும் என வைத்திருந்து சாப்பிடும் அளவுக்கு வாழைப்பழத்தை மதிப்புக்கூட்டி பல பொருள்களைத் தயார் செய்து வருகிறோம். இதற்கு முக்கியமான இன்னொரு காரணமும் உண்டு. வாழைக்கு நிலையான விலை கிடையாது. அப்படியே விலை இருந்தாலும் விவசாயிக்கு லாபம் கிடைக்காது. இதற்காக விவசாயிகள் சந்தையில் நேரடியாக விற்பனை செய்தாலும், விற்ற பழங்கள் போக மீதமுள்ளப் பழங்கள் வீண்தான். இவற்றையெல்லாம் தவிர்க்கத்தான் வாழையில் மதிப்பு கூட்டல் தொழிலைத் துவங்கினோம்.

அமேஸான்

கடந்த 2014-ம் ஆண்டு மதிப்பு கூட்டல் தொழிலைத் தொடங்கினோம். வாழை விவசாயம் அதிகமான தொல்லை தரக்கூடியது. சரியான பருவத்திலும் பக்குவத்திலும் காய்களை வெட்டி, சந்தைக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பாததால், பல விவசாயிகள் வாழையால் அதிகமாகக் கடன்பட்டிருந்தனர்.

காற்று பலமாக அடித்தால்கூட வாழை மரங்கள் அதிகமாகச் சேதமாகிவிடும். இதனால் பல நேரங்களில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க நாங்கள் 13 பேர் ஒன்றிணைந்து ‘மதூர் ஃப்ரூட்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினோம். இதனை ஆரம்பிக்க, விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவி பெரிதும் தேவைப்பட்டது. இங்கு இருக்கும் இயந்திரங்கள் தாய்லாந்து நாட்டில் பயன்படுத்தக்கூடியவை.

சூரிய ஒளியில் பொருள்களை உலர்த்துதல்!

வாழைப்பழம் மதிப்பு கூட்டலில் முக்கியமான முதல் வேலை, வாழைப்பழங்களைச் சூரிய ஒளி டிரையரில் உலர்த்துவது. உலர்த்தும் வாழைப்பழம் அப்படியே பாக்கெட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர வாழைப்பழப் பொடி, பிஸ்கட், சாக்லேட், வாழைக்காய் மிட்டாய் ஆகிய பொருள்களைத் தயார் செய்து வருகிறோம்.

இந்தத் தொழிலை ஆரம்பித்தபின், சந்தை வாய்ப்பை அமைத்துக்கொள்வதில் சறுக்கலைச் சந்தித்தோம். பழங்கள் கொள்முதல் செய்த விலையையும், விற்பனை செய்த விலையையும் ஒப்பிட்டால் நஷ்டம் வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. ஆனால், அதைக் கண்டு நாங்கள் துவண்டு போய்விடவில்லை. நாங்கள் தயாரிக்கும் பொருள்களைப் பெரும்பாலான கண்காட்சிகளில் ஸ்டால் போட்டு, பலருக்கும் அறிமுகம் செய்தோம். நாங்கள் தயார் செய்த பொருள்களை இலவசமாகத் தந்த காலமும் உண்டு. இப்படித்தான் பொருள்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தோம்.

சூரிய ஓலி உலர்த்துதல் - வாழைப்பழம்

அமேசானில் திருச்சி வாழை!

நாங்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு மவுசு உருவாவதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதன்பின் படிப்படியாகப் பெரிய கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் என எங்களின் சந்தையை விரிவுபடுத்தினோம்.

அந்த விற்பனை விரிவாக்கம் இப்போது இணையத்தில் விற்கிற வரை போய் நிற்கிறது. எங்கள் நிறுவனத் தயாரிப்புகளை விற்றுத்தர அமேசான் நிறுவனம் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் முழுமையாக எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னபின்புதான் எங்கள் பொருள்களை அமேசானில் விற்பனை செய்ய ஒப்புக்கொண்டனர். அதனால் இப்போது அமேசான் மூலமாக எங்கள் பொருட்கள் அமெரிக்கா வரை படுஜோராக விற்பனையாகிறது” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார், சுப்ரமணியம்.

இவர்கள் மட்டுமல்ல… இவர்களோடு இது நிற்கப்போவதும் இல்லை. இவர்களைப் போல பலவிவசாயிகள் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்து தொழில்முனைவோராக மாறி இருக்கிறார்கள். மாற்றி யோசித்தால் மகத்தான லாபம் நிச்சயம் என்பதற்கு இவர்கள்தான் உதாரணம்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *