விவசாயத்தை பெரிதாக நினைத்து வாழ்ந்த விவசாயிகள் எல்லாம் அவற்றை பிளாட் போட்டு விற்று வருகின்றனர். விளை நிலத்தை சீரமைத்து வாழை விவசாயம் மூலம் வருமானத்தை பெருக்கி வருகிறார் காரைக்குடி, அரியக்குடி வளன் நகர் விவசாயியும் முன்னாள் ராணுவ வீரருமான ஆரோக்கியசாமி.

மொத்தமுள்ள 4 ஏக்கரில் ஒரு ஏக்கரில் வாழை, 1.5 ஏக்கரில் நெல், ஒரு ஏக்கரில் தென்னை விவசாயம் மேற்கொண்டுள்ளார். தினந்தோறும் வாழ்வாதாரத்தை வாரி வழங்கும் வெண்டை, கத்தரி விவசாயத்தை அரை ஏக்கரில் செய்து வருகிறார். திசுவாழை பயிரிட்டுள்ள இவர் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் லாபம் பார்த்து வருகிறார்.
அவர் கூறியது:
ஜி-9 வகை திசு வாழை தோட்டக்கலை துறை உதவி வேளாண் அலுவலர் மங்களசாமி மூலம் எனக்கு கிடைத்தது. கன்றுகள் நம்முடைய வாழை போன்று அல்லாமல் சிறிய செடி போல இருக்கும். 11 மாதத்தில் காய்ப்பு எடுக்க ஆரம்பித்து விடலாம். பச்சை பழ வாழை பயிரிட்டுள்ளேன். ஒரு தாரில் 135 முதல் 140 காய்கள் இருக்கும். தற்போதைய நிலையில் தார் ஒன்று ரூ.500 முதல் 600 வரை விற்பனையாகிறது.
ஒரு வாழை காய்த்து முடிந்தவுடன் அதை வெட்டிவிட்டு, அதன் பக்க கன்று மூலம் அடுத்த வாழை உருவாகிறது. ஒரு வாழை வைத்தால், மூன்று முறை மகசூல் பெற முடியும். ஆறு அடிக்கு ஒரு கன்று நட வேண்டும். 15-வது நாளில் ஒரு வாழைக்கு 5 கிலோ மாட்டு சாண உரம், 200 கிராம் டி.ஏ.பி., 200 கிராம் பொட்டாஷ் இட வேண்டும். 40-வது நாள் இதே அளவு உரம் இட வேண்டும்.
150-வது நாள் 10 கிலோ மாட்டு சாணம் மட்கியது வைக்க வேண்டும். திசு வாழையை பொறுத்தவரை நீர் சத்து அதிகம் தேவை. இதனால் சொட்டு நீர் பாசனம் சிறந்தது.
இந்த வாழை 6-வது மாதம் பூக்கும். 8-வது மாதம் காய்க்க துவங்கும். ஒரு ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் செலவாகும். ஆனால், வருமானமோ ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் லாபமாக கிடைக்கும். வாழையின் ஊடே காய்கறி விவசாயமும் மேற்கொள்ளலாம்.
அதே போல், நெல் விவசாயம் உரம் போடாமல் இயற்கை விவசாயம் மூலம் மேற்கொண்டு வருகிறேன். நெல் நடவுக்கு முன்பு, வேம்பு இலை, வாகை இலை ஆகியவற்றை நிலத்தில் போட்டு உழுது அதன்பிறகு நடவு பணி துவங்குகிறது. இதனால், இயற்கையான அரிசி நமக்கு கிடைக்கிறது, என்றார்.
இவரை தொடர்பு கொள்ள 09487413100.
–டி.செந்தில்குமார், காரைக்குடி.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
thanks to you sir good thing i have and nice note’s all so i am happy
Thanks sir