வாழை சாகுபடியில் விளைச்சலைப் பெருக்கும் வழிமுறைகள்

வாழை சாகுபடியில் விளைச்சலைப் பெருக்குவதற்கு முறையான வழிமுறைகளைக் கையாண்டால் அதிக மகசூலைப் பெற முடியும்.  இது குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியல் துறை வல்லுநர் விஜயகுமார் கூறியது:

 • வாழையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மண்வெட்டியால் கொத்தி மண் அணைக்க வேண்டும்.
 • பக்கக் கன்றுகளை மாதம் ஒரு முறை நீக்க வேண்டும்.
 • இலைக்காக சாகுபடி செய்யப்படும் பூவன், கற்பூரவள்ளி மற்றும் மெந்தன் ரகங்களில் முதல் மூன்று அல்லது நான்கு பக்கக் கன்றுகளை வளர விடலாம்.அதிகம் உள்ள பக்கக் கன்றுகளை வெட்டி அழித்துவிட வேண்டும்.
 • மீண்டும் மீண்டும் பக்கக் கன்றுகள் துளிர்த்தால் கன்றுகளின் நடுக்குருத்தில் ஒரு கன்றுக்கு இரு சொட்டுகள் மண்ணெண்ணையை கவனமாக இங்க் ஃபில்லர் கொண்டு விட்டும் அழிக்கலாம்.அதிக சொட்டுகள் மண்ணெண்ணை விட்டால் தாய்க்கன்றுகள் இறந்து விடும். எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.
 • கடைசி பூ அல்லது சீப்பு வெளிவந்த ஒரு வாரத்தில் ஆண் பூவை ஒடித்து விடவேண்டும்.
 • பிறகு, 10 கிராம் யூரியா தொட்டுக் கொண்டிருக்கும்படி கட்டிவிட வேண்டும்.
 • இதனால் சத்துகள் அனைத்தும் காய்களுக்குச் செல்வதால் வாழைக்காய்கள் சீக்கிரம் விளையும்.
 • வாழைக்காய்களின் பருமனை அதிகரிக்க ஒரு கிராம் டு4 டி மருந்தை 20 மிலி எரிசாராயத்தில் கரைத்து பின் அத்துடன் 40 லிட்டர் தண்ணீர் கலந்து 200 தார்களில் பூவின் கடைசி மடல் விரிந்ததும் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
 • நீண்ட சதைப் பற்றுள்ள வாழைக்காய்கள் கிடைக்க சைட்டோசைம் 180 மிலியை 180 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் வாழை மரங்களில் நடவு செய்த 90 மற்றும் 120 வது நாள்களில் விசைத்தெளிப்பான் மூலம் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.
 • வடிகால் வசதியில்லாத நீர்ப் பிடிப்புதன்மை அதிகமாக உள்ள வாழை வயலில் ஒரு வாழை மரத்துக்கு யூரியா அல்லது அமமோனியம் சல்பேட் 25 கிராம் என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து விசைத்தெளிப்பான் மூலம் மரங்கள் மீது நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
 • வறட்சியான சமயங்களில், ஒரு வாழை மரத்துக்கு டை பொட்டாசியம் ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராம் என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து விசைத்தெளிப்பான் கொண்டு இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
 • வாழைத் தார் நன்கு பெருக்க, பொட்டாசியம் சல்பேட் 20 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தார் மீது நன்கு படும்படி தெளித்தல் அவசியம்.
 • மேலும் ஒரு மரத்துக்கு யூரியா 350 கிராம் மற்றும் மியூரேட் ஆப் பொட்டாஷ் 250 கிராம் வேர்ப்பகுதியில் மண்ணில் இட்டும் நீர்ப் பாய்ச்சலாம்.
 • வாழைக்காய்கள் வெப்பத்தினால் வெடிக்காமல் இருக்க வாழைத்தாரை காய்ந்த இலைகள் கொண்டோ அல்லது பாலிதீன் பைகள் கொண்டோ மூட வேண்டும்.
 •  காய்ந்த இலை மற்றும் நோய் தாக்கிய இலைகளை அவ்வப்போது அகற்றி எரிப்பதால் வயலை நோய், பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
 • காய்களின் நுனியில் ஒட்டியிருக்கும் பூவின் எஞ்சிய பாகத்தை நீக்குவதால் நோய் பரவுதலைத் தடுக்க முடியும்.
 • குலை வெட்டிய பின்பு, இலையில் வெட்டுப்பாகத்தில் வாசலின் அல்லது களிமண் கொண்டு பூச வேண்டும்.
 •  நன்செய் நில வாழையில் ஒவ்வொரு வரிசை விட்டு கால்வாய்கள் எடுக்க வேண்டும். மேலும், ஐந்து வரிசைகளுக்கிடையில் குறுக்கு கால்வாய்கள் எடுக்க வேண்டும.
 • நல்ல மகசூல் பெறுவதற்கு, ஒரு வாழை மரத்தில் 10 முதல் 12 பச்சை இலைகள் இருக்க வேண்டும்.
 • கூடுதல் வருமானம் கிடைக்கவும், களைகளைக் கட்டுப்படுத்தவும் வாழையில் ஊடுபயிராக மணிலா, உளுந்து, தட்டைப்பயிர், மொச்சை, சோயா மொச்சை, மிளகாய், கிழங்கு வகைகள், பூ வகைகள், இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களைப் பயிர் செய்யலாம்.
 • கொடிவகைக் காய்கறிகளான பூசணி, தர்பூசணி, பரங்கி, வெள்ளரி, பாகல், சுரை மற்றும் புடலை போன்றவற்றை வாழையில் ஊடுபயிர்களாக பயிரிடக்கூடாது. ஏனெனில், இக்கொடிவகைக் காய்கறிகளில் ஏற்படும் ஒரு வகை வைரஸ் நச்சுயிரி நோய் வாழைக்கும் பரவும் அபாயம் உள்ளது.
 • ஆப்பிரிக்க நத்தை பப்பாளி, தக்காளி, பலா, சம்பங்கி, சாமந்தி, ரப்பர், பாக்கு, காப்பி, தேயிலை, தேயிலை, நெல், காய்கறி மற்றும் கோகோ பயிர்களை வைரஸ் நச்சுயிரி நோய் தாக்குவதால் இந்தப் பயிர்களை எக்காரணம் கொண்டும் வாழையில் ஊடுபயிராக பயிரிடக்கூடாது என்றார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *