உப்புநீர் கரைசல் மூலம் நெல்லின் விதைத்தரம் காண்பது எப்படி?

செய்முறை

 • முதலில் 15 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு பிளாஸ்டிக் வாளியில் 10 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • இதில் ஒரு நல்ல கோழி முட்டையை போடவும் முட்டை நல்ல எடையுடன் இருப்பதால் தண்ணீரில் மூழ்கிவிடுகிறது.
 • பின்பு உப்பை சிறிது சிறிதாகப் போட்டு கரைக்க வேண்டும் (10 லிட்டர் தண்ணீருக்கு 2 கிலோ உப்பு)
 • உப்பு கரைந்த நீரின் அடர்த்தி அதிகமாவதால் முட்டை மேலே மிதந்து வருவதைக் காணலாம். முட்டையின் மேற்பகுதி 25 பைசா அளவு தண்ணீரின் மேல்தெரியும் போது தண்ணீரின் அடர்த்தி விதைத்தரம் பிரிப்பதற்கு ஏற்றதாய் அமைகிறது.
 • மேற்கண்டவாறு தயாரித்த உப்புக் கரைசலில் முதலில் 10 கிலோ விதையை சிறிது சிறிதாகப் போட வேண்டும்.
 • எடை குறைந்த நெல் விதைகள் மிதக்கும். அதே சமயம், எடை அதிகமான, தரம் மிகுந்த விதைகள் கரைசலில் மூழ்கும்.
 • மிதக்கும் விதைகளை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். மூழ்கிய விதைகளையே விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
 • மூழ்கிய விதைகளை வெளியே எடுத்து இரண்டு அல்லது மூன்று முறை நீரில் கழுவி விதைகளின் மேல் படர்ந்த உப்பை நீக்கி விடவும்.
 • விதைகளை கழுவிய பிறகு நிழலில் உலர வைக்க வேண்டும். பிறகு விதைப்புக்குப் பயன்படுத்தலாம்.

பயன்கள்

 • முற்றாத விதைகள் மற்றும் பொக்கு விதைகளை இம்முறைப்படி பிரித்தெடுக்கலாம்.
 • வயலில் போதுமான அளவு செடிகளைப் பெற முடியும்.
 • இதன்மூலம் அதிக விளைச்சலைப் பெற முடிகிறது.
 • பூஞ்சாண் தாக்கிய விதைகளை விதைப்புக்கு பயன்படுத்துவதிலிருந்து தடுக்கிறது.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *