புரட்சி விதைகளால் வாடிய பயிர்கள்

விதை சார்ந்த கொள்கையில் (National Seed Policy) இன்றைக்கு எப்படி அமைச்சர்கள் பேசுகிறார்களோ, அப்படியே அன்றைக்கும் (60-களில்) பேசினார்கள். அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி போன்றோர் எச்சரித்தும்கூட, அன்றைய வேளாண் அமைச்சர் சி.சுப்பிரமணியன் வலுக்கட்டாயமாக ஐ.ஆர். ரக விதைகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்தார். அன்றைக்கு ஒட்டு விதைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த எம்.எஸ். சுவாமிநாதன், இன்றைக்கும் மரபீனி மாற்ற விதைகளுக்கு ஆதரவான குரல் எழுப்புகிறார்.

ராக்பெல்லர் பவுண்டேஷன், ஃபோர்டு பவுண்டேஷன் ஆகியவற்றின் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் பணம் இறக்கப்பட்டு உழவர்களிடம் வலுக்கட்டாயமாக வெளிநாட்டு விதைகளும் வேதி உரங்களும் திணிக்கப்பட்டன. இன்றைக்கு அந்த ராக்பெல்லர் பவுண்டேஷனின் இடத்தில் மான்சாண்டோ வந்துவிட்டது.

வரலாறு அப்படியே திரும்புகிறது. அன்று விதைகள் ஓரளவு அரசுக் கட்டுப்பாட்டில் இருந்தன. அதனால் ஓரளவு தப்ப முடிந்தது. ஆனால் இப்போது, முற்றிலும் பன்னாட்டு கும்பணிகளின் கைகளில் சென்றுவிடும் ஆபத்து உள்ளது. இத்துடன் முடிவிப்பு (டெர்மினேட்டர்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், நமது உள்ளூர் விதைகளும் மலடாகிப் போகும்.

ஒரு மக்கள் அறிவியலாளர்

ரிச்சாரியா என்ற மாபெரும் மக்கள் அறிவியலாளர் ஆயிரக்கணக்கான உள்நாட்டு ரக நெல் விதைகளைச் சேகரித்து வைத்திருந்தார். இந்திய மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக அவர் இருந்தபோது, நெட்டை ரகம் மட்டுமல்லாது நம் நாட்டுக்கே உரிய குட்டை ரகங்களையும் கண்டறிந்து வைத்திருந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் பகுதியைச் சேர்ந்த கடூர் சாலா (Gadur Sela – Bd:810) என்ற நெல் வகை ஹெக்டேருக்கு 9.8 டன் விளைச்சலைத் தர வல்லது. இப்பகுதி பழங்குடிகள் நிறைந்த பகுதி. அவர்களிடம்தான் எண்ணற்ற அரிய வகை விதைகள் இருந்தன, இருக்கின்றன. அந்த விதை வளத்தை இன்றைய மேலை நாட்டு அறிவியல் உலகம், அறிவியல் இல்லை என்று கூறுகிறது. இதேபோலப் பாடல் பூல் போன்ற குட்டை ரகம் இருந்துள்ளது. இவை நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை. இவற்றை ஆதரித்த ரிச்சாரியா, நோய் எதிர்ப்புத் தன்மையற்ற அந்நிய விதைகளை ஏற்க மறுத்தார்.

தவறான முடிவு

இந்திய வேளாண் சந்தையைக் கைப்பற்ற, அந்நிய விதைகளை இந்தியாவில் பயன்படுத்த வேண்டும் என்ற நெருக்கடியை அமெரிக்கா ஏற்படுத்தியது.

இதற்குப் பல காலம் முன்பாகவே, இந்தியாவின் வேளாண்மை என்பது சிறு- குறு உழவர்களால்தான் உயிர்ப்புடன் இருக்க முடியும். ஜமீன்தார்களிடம் குவிந்து கிடக்கும் நிலங்கள் உழுபவர்களின் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜே.சி. குமரப்பா, தற்சார்பை அழிக்கும் மையப்படுத்தப்பட்ட வேதி வேளாண்மையை மிகக் கடுமையாக எதிர்த்தார்.

ஆனால், பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அந்நிய விதைகளை அனுமதித்தனர். அதனால் பெரும் பேரழிவு ஏற்பட்டது. துங்குரோ வைரஸ் என்ற நோய் தாக்குதலும், அதுவரை காணப்படாத பூச்சி தாக்குதலும் ஏற்பட்டன.

வாடிய பயிர்கள்

வீரிய விதைகள் எனப்படும் பசுமைப் புரட்சி விதைகள் அதிக அளவு உரம், நீர் போன்றவை தேவைப்படுபவையாக உள்ளன. ஏனெனில், இந்த விதைகள் கட்டுப் படுத்தப்பட்ட ஆய்வகங்களில் வைத்து உருவாக்கப்படுகின்றன. இவற்றைக் கொழுக்க வைப்பதற்காக அதிக அளவு வேதி உரங்களைக் கொட்ட வேண்டும்.

அறிவியல் முறைப்படி ஒரு செடியானது, சவ்வூடு பரவல் என்ற முறையில் தனக்கான ஊட்டங்களை நீர் வழியாக எடுத்துக்கொள்கிறது. ஊடுருவும் தன்மை கொண்ட ஒரு சவ்வினால் செறிவு அதிகமான நீர்மமும் செறிவு குறைவான நீர்மமும் பிரிக்கப்பட்டு இருந்தால், அச்சவ்வின் ஊடாகச் செறிவு குறைவான நீர்மத்தைச் செறிவு அதிகமான நீர்மம் ஈர்த்துக்கொள்ளும். இதுதான் சவ்வூடு பரவல் தொழில்நுட்பம்.

செடியில் அமைந்துள்ள பாகங்கள் யாவும் சில்லிகளால் (cell) ஆனவை. இவற்றின் சுவர், மேலே கூறிய சவ்வைப் போல அமைந்துள்ளது. இந்தச் சவ்வின் வழியாகச் செறிவு குறைந்த நீர் செறிவுமிக்க சில்லிச் சாறு மூலமாக ஈர்த்துக்கொள்ளப்படுகிறது. இந்த முறையில் பயிர்களின் வழியாக நீர் நகர்ந்து ஊட்டங்களையும் கொண்டு செல்கிறது.

இப்போது பாசன நீருடன் யூரியா போன்ற வேதி உப்புகளை இடும்போது, பாசன நீரானது செறிவுமிக்கதாக மாறிவிடுகிறது. இதனால் பயிர்களில் உள்ள நீர்மம் வெளியேறிவிடுகிறது. எப்போதெல்லாம் வேதி உரங்கள் போடப்படுகிறதோ அப்போதெல்லாம் செடிகள் வாடி நிற்பதைக் காண முடியும். இதை ஈடுசெய்வதற்காக அதிக அளவு நீர் பாய்ச்ச வேண்டும். இந்தப் பசுமைப் புரட்சி விதைகள் அதிகமாக வேதி உரங்களைச் சார்ந்து இருப்பதால், இவற்றின் தாக்கம் நீர் வளத்திலும் கைவைத்தது.

கட்டுரையாசிரியர்,
சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *