விதை நெல் பராமரிக்க ஆலோசனைகள்

கடலூர் மாவட்டத்தில் தானே  புயலால் பாதிக்கப்பட்ட நெல் விதைப் பண்ணை வயல்களில் உள்ள நெல் மணிகளின் தரத்தைப் பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து கடலூர் மாவட்ட வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

 • கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் வீசிய புயல் காற்றில் நெல் விதைப் பண்ணை வயல்களில் பயிர்கள் சாயந்ததாலும், நெல் மணிகள் ஒன்றோடொன்று உராய்ந்ததாலும் மணிகளின் நிறம் பழுப்பாகிக் காணப்படுகிறது.
 • வயல்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சாய்ந்திருந்தால் விதை நெல்லுக்கு ஏற்றுக் கொள்ள இயலாது.
 • சம்ப பருவத்தில் 600 ஹெக்டேரில் நெல் விதைப் பண்ணைகள் அமைத்து சான்று விதை பெற்றிட பதிவு செய்யப்பட்டு உள்ளது. இப்பருவத்தில் சம்பா மசூரி, அம்பை 16, ஆடுதுறை 38, ஆடுதுறை 39, கோ 43, கோ (ஆர்) 50, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி மற்றும் நீண்டகால ரகமான சாவித்திரி ஆகியவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
 • விதை தரத்தைப் பராமரிக்கும் வழிமுறைகள்:
 • வயல்களில் 2 அங்குல உயரத்துக்குக் குறைவாகத் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும்.
 • அறுவடைக்கு 10 நாள்களுக்கு முன் தண்ணீர் முழுவதையும் வடிகட்டிவிட வேணடும்.
 • நெல் கதிர்களில் 90 சதம் மணிகள் வைக்கோலின் நிறத்தில் இருந்தால் அது அறுவடைக்கு ஏற்ற தருணம்.
 • தக்க தருணத்துக்கு முன்னரே அறுவடை செய்து உலர வைக்கும் போது, விதைகள் சுருங்கி சிறுத்து விடுவதுடன் முளைப்புத் திறனும் குறைந்து விடும்.
 • காலம் கடந்து அறுவடை செய்தால் விதைகளின் நிறம் பனி விழுந்து மங்கி விடுவதுடன் பூஞ்சாணங்களின் தாக்குதலுக்கும் உள்ளாகும்.
 • புயல் பாதித்த கதிரில் மகரந்தச் சேர்க்கை பாதிப்பால் பதர் அதிகமாக இருக்கும். எனவே அறுவடை செய்த குவியல்களை இயந்திரத்தினாலோ, பணியாளர்களைக் கொண்டோ பதர் முழுவதும் போகும் அளவுக்குத் தூற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
 • பிரித்து எடுத்த விதைகளை சில நாள்கள் குவித்து வைத்தால், விதைகள் சூடேறி, முளைப்புத்திறன் குறையும். எனவே பிரித்தெடுத்த விதைகளை உடனே உலர வைக்க வேண்டும்.
 • கதிர் அறுவடை செய்யும் இயந்திரங்களை ஒரு ரகத்துக்கு பயன்படுத்தி விட்டு, வேறு ரகத்துக்கு மாற்றும் போது, இயந்திரங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் மற்ற ரகக் கலப்பினால் விதைகளின் இனத்தூய்மை பாதிக்கப்படும்.
 • விதை நெல்லின் ஈரப்பதம் 13 சதம் இருக்குமாறு காயவைத்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு புதிய கோணிப்பைகளில் நிரப்பி அனுப்ப வேண்டும்.
 • விதை மூட்டைகளை மரக்கட்டை அட்டகம் அல்லது, தார்ப்பாய்களின் மீது அடுக்கி வைக்க வேண்டும்.
 • வெறும் தரை அல்லது சுவர் மீது சாய்த்து அடுக்கினால் விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கும்.

விதை நெல் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகள் இந்த ஆலோசனைகளைக் தரமான விதை நெல்லை உற்பத்தி செய்யலாம்.

இவ்வாறு விதைச்சான்று உதவி இயக்குநர் ஹரிதாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *