மானாவாரி நிலத்திலும் நல்ல மகசூலுக்கு டிப்ஸ்

மழையை மட்டுமே நம்பி சாகுபடி செய்யப்படும் மானாவாரி விவசாயத்தில், சில நவீன யுக்திகளை கையாண்டு, நல்ல மகசூல் எடுக்கலாம் என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோபி வேளாண் உதவி இயக்குனர் பொறுப்பு ஆசைத்தம்பி கூறியதாவது:

 • தமிழகத்தில், 52 விழுக்காடு நிலம் மானாவாரியாக உள்ளது. மானாவாரியில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு, சோளம், கம்பு, ராகி, பருத்தி மற்றும் பயறு வகைகளான உளுந்து, துவரை, பாசிப்பயறு, தட்டை போன்றவை பெரும்பாலும் சாகுபடியாகிறது.
 • சிறு விவசாயிகளின் நிலங்கள் பெரும்பாலும் மானாவாரி சாகுபடியில் தான் உள்ளது. உரிய காலத்தில் மழை பெய்யாததாலும், தேவையான அளவு மழை கிடைக்காததாலும் மானாவாரி பயிர்களில் மகசூல் பெரிதும் பாதிப்படைகிறது.
 • சில நவீன தொழில்நுட்பங்களை கடைபிடித்தால் நல்ல மகசூல் பெற முடியும்.
 • மானாவாரி நிலங்களில் சராசரி மழையளவு ஆண்டுக்கு, 600 மி.மீ., முதல், 800 மி.மீ., வரை உள்ளது.
 • 35 முதல் 40 நாட்களில் மழை பெய்து முடிந்து விடுகிறது. சில ஆண்டுகளில் மழை பொய்த்து விடுகிறது.
 • சில உழவியல் முறைகள் மூலம் பெய்யும் மழையை மண்ணில் தங்க வைத்து பயிருக்கு பயன்படுத்த இயலும்.
 • வயல் அமைந்துள்ள சரிவுக்கு குறுக்கே உழவு செய்வதால் மழை நீர் சால்களில் தேங்கி நின்று, மண்ணின் அடிப்பகுதிக்கு சென்றடையும்.
 • நிலப்பரப்பில் விழும் மழை நீர் வேகமாக வழிந்து விடாமல் நிதானமாக செல்வதால் மண்ணில் அதிக நீர் ஈர்க்கப்படும்.
 • மானாவாரி நிலங்களில் மண் ஈரத்தை சேமித்து வைக்க கோடை உழவு மிகவும் அவசியம்.
 • அறுவடைக்கு பின் சட்டிக்கலப்பையால் நிலத்தை ஆழமாக உழவேண்டும்.
 • நீர்ப்பிடிப்பு தன்மை அதிகமாகும். களை கட்டுப்படும். மண் அரிமானம் தடுக்கப்படும்.
 • மானாவாரி நிலங்களில் அங்கக உரங்களான தொழு உரம், கம்போஸ்ட் தென்னை நார்கழிவு உரம் ஊட்டமேற்றிய தொழு உரம் ஆகியவை இடுவதால் மண் ஈரம் காக்கப்பட்டு மண் வளம் மேம்படும்.
 • விதைகளை கடினப்படுத்துவதால், அவை வறட்சியை தாங்கி முளைத்து, நல்ல பயிர் எண்ணிக்கையை கொடுத்து, அதிக மகசூல் கிடைக்கும்.
 • ஒரு கிலோ விதைக்கு, 500 கிராம் சாம்பல், மூன்று சதம் கோந்து என்ற விகிதத்தில் கலந்து, ஐந்து மணி நேரம் நிழலில் காய வைத்து, விதைக்க வேண்டும்.
 • மழைக் காலத்தை சராசரியாக கருத்தில் கொண்டு, மழை பெய்வதற்கு இரண்டு வாரம் முன்பாகவே புழுதி விதைப்பு செய்ய வேண்டும்.

இந்த  வழிமுறைகளை கடைபிடித்து மானாவாரியில் மகசூல்  அதிகரிக்கலாம்

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *