பசுமைப் புரட்சி மற்றும் உலகமயமாக்கல் போன்ற காரணங்களால் நமது மரபு விவசாயம் நம்மை விட்டு அதிகமான தூரத்துக்குச் சென்று விட்டது. ஓடும் நீரை தடுத்துநிறுத்தி அணைகட்டி விவசாயம் பார்த்த முன்னோர்களின் வழிவந்த மக்கள் இன்று புழுங்கல் அரிசிக்கும், பச்சை அரிசிக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் பெருகி வரும் நோய்களும் அதற்கு காரணமாக விளங்கி வரும் ரசாயன உரமேற்றப்பட்ட காய்கறிகளும் நஞ்சான உணவையே மக்களுக்கு கொடுக்கிறது.
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள், விவசாயம் செய்ய இடமில்லாதவர்கள் அனைவரும் மாடித்தோட்டத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் முறையைப் பின்பற்றி வருகின்றனர். பெரும்பாலான மக்களிடம் மாடித்தோட்டம் அமைக்கும் ஆர்வம் இருந்தாலும்கூட அவற்றை சரியாக அமைப்பது எப்படி என்பது குறித்த தெளிவு இல்லை. ஆனால் இந்த விஷயங்களைப் பின்பற்றினால் உங்கள் வீட்டு மாடியிலும் காய்கறிகளை அறுவடை செய்யலாம்.
எளிதாக அமைக்கலாம் மாடித்தோட்டம்:
மாடித்தோட்டம் அமைக்க முதலில் தேர்வு செய்ய வேண்டியது இடத்தைத்தான். இதற்கென தனியாக ஒர் இடம் தேவையில்லை. மாடியில் காலியாக உள்ள இடங்கள், படிக்கட்டுகள், மாடிச் சுவர்கள் மற்றும் தொங்கு தொட்டிகள் என மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஏராளமான இடமும், வழியும் உள்ளது. பிளாஸ்டிக் பைகள், மண் தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள் ஆகிய பொருட்களில் செடிகளை வளர்க்கலாம்.
இந்த தொட்டிகளில் செம்மண், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, ஆகியவை கலந்து அடியுரமாக கொடுக்கலாம்.
மண்கலவை தயாரானதும் உடனே விதைக்கக் கூடாது. 7 முதல் 10 நாட்களில் மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி வேலை செய்ய ஆரம்பித்து விடும். அதன் பிறகே எந்த ஒரு விதையையும் நடவு செய்ய வேண்டும்.
விதைகளைத் தேர்வு செய்யும்போதும், நடவு செய்யும்போதும் கவனம் தேவை. தொட்டியில் அதிகமான ஆழத்தில் நடக்கூடாது, அதே போல வழிய வழிய தண்ணீர் ஊற்றுவதையும் தவிர்க்க வேண்டும். தண்ணீரை தெளிக்க உதவும் பூவாளியை பயன்படுத்துவது நல்லது. காய்கறிகளின் விதைகளைப் பயன்படுத்தினால், செடி வளர்க்க பைகள் அல்லது தொட்டிகளைப் பயன்படுத்தலாம். இதற்கு அளவு, வடிவம் என எதுவும் கிடையாது.
இதுவே கீரையாக இருந்தால் பாத்தி அமைப்பது போன்று நடலாம். மேலும் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம் என எல்லா வகை பொருள்களிலும் வளர்க்கலாம். செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் அடியுரம் கலந்த மண்ணை நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.
தொட்டியில் நடும் விதைகளை முற்றிய காய்கறிகளில் இருந்து எடுக்கலாம், கடைகளில் வாங்கி வந்தும் நடவு செய்யலாம். விதைக்கும் விதையானது நாட்டு விதையாக இருத்தல் இன்னும் சிறப்பு. விதையின் உருவத்தைவிட இரண்டு மடங்கு ஆழத்தில் நடவு செய்தால் போதுமானது.
அதன்பின்னர், மண்ணால் மூடிவிடவேண்டும். கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் போன்ற பயிர்களை நாற்று விட்டு நடவு செய்வது மிக அவசியம். வெண்டை, முள்ளங்கி போன்ற விதைகளை நேரடியாக நடவு செய்யலாம். விதை நட்டவுடன் பூவாளியைக் கொண்டு நீர் தெளிக்கலாம்.
அடுத்தது மாடித்தோட்டத்தில் முக்கியமானது ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் ஊற்ற வேண்டும். தொட்டி நிரம்பி வழியும் அளவுக்கு தண்ணீர் ஊற்றக் கூடாது. மாடித்தோட்டத்துக்கு உபயோகப்படுத்தும் உரங்கள் உயிரி உரங்களாகவும், இயற்கை உரங்களாகவும் இருப்பது நல்லது. மாடித்தோட்டத்தில் பூச்சித்தாக்குதல் ஏற்பட்டால் மூலிகைப்பூச்சி விரட்டியைக் கலந்து தெளிக்கலாம். செடிகளின் வளர்ச்சிக்கு பஞ்சகவ்யா தெளிக்கலாம். வேரின் ஆழத்தில் புழுக்களின் தாக்குதலை தவிர்க்க வேப்ப எண்ணெய் கரைசலை நீரில் கலந்து விடலாம். தற்போது பெரும்பாலான மக்கள் சொட்டு நீர்ப்பாசனமும் அமைத்து வருகின்றனர்.
வாரம் ஒரு முறை செடியைச் சுற்றி மண்ணைக் கொத்தி விட வேண்டும். மண்ணைக் கொத்திவிட்ட பின்பும் பஞ்சகவ்யா தெளிக்கலாம். காய்கள் பறிக்கும்போது முற்றிவிடாமல் அவ்வப்போது அறுவடை செய்துவிட வேண்டும். மாடித்தோட்டத்தில் முக்கியமானது காலநிலை, அதாவது ஜூன், ஜூலை மாதங்களில் அமைக்கலாம்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
It’s very useful for me
I need more detail about tarrace garden