கோவையில் கொடிகட்டும் மாடித் தோட்டங்கள்!

“முன்னால எல்லாம் காய்கறி விலையைப் பார்த்தா மலைப்பா இருக்கும். அதிலும் மருந்தடிச்சது எது, பூச்சி புடிச்சது எது, சொத்தைக் காய் எதுன்னே புரிபடாம வாங்கிப் பாடாய்ப் பட்டிருக்கோம். இப்ப பார்த்தீங்கன்னா, அதெல்லாம் சுத்தமா இல்லை. ஏன், காய்கறி வாங்க கடைக்கே போறதில்லைன்னா பார்த்துக்குங்களேன். பக்கத்து வீடுகளுக்கும் நாங்க விளைவிக்கிற காய்கறிகளையே கொடுக்கிற நிலைக்கு வந்துட்டோம்!’ என்று ரொம்ப உற்சாகமாகப் பேசும் தம்பதிகள் கோவையில் அதிகரித்துவருகிறார்கள்.

திரும்பின பக்கமெல்லாம் மாடித்தோட்டங்கள் உருவாகி வருவதுதான் இதற்குக் காரணம். சமீபகாலமாகக் கோவையில் உள்ள வீடுகளின் மொட்டை மாடிகளில் பசுமைக்குடில்கள் அதிகமாக உருவாக ஆரம்பித்திருப்பதை உணர முடிகிறது. அதற்குள் சென்று பார்த்தால் ‘கதைகதையாம் காய்கறியாம்!’ என்று தங்கள் தோட்ட அனுபவங்களை ரசித்துப் பகிர்ந்துகொள்கின்றனர் தோட்ட ஆர்வலர்கள்.

800 அடி தோட்டம்

கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் மாடித்தோட்டம் போட்டிருக்கும் குமார், உஷா தம்பதி கொத்தமல்லி, பாலக் கீரை, வெந்தயக் கீரை, தும்பை, லெமன் கிராஸ், காட்டுக் கீரை என ஒரு பக்கமும், மா, சப்போட்டா, மாதுளை, ஆரஞ்சு, எலுமிச்சை என மர வகைகளை இன்னொரு பக்கமும், கத்தரி, வெண்டை, தக்காளி, புடலை, காலிஃபிளவர், அவரை என மறுபக்கமும், கனகாம்பரம், மல்லி, முல்லை, செம்பருத்தி என ஒரு பகுதியிலும் தனித்தனியாகப் பிரித்து 800 சதுர அடியில் தோட்டம் போட்டு அசத்தியுள்ளனர்.

உஷா - ஸ்ரீகுமார் தம்பதி Courtesy: Hindu
உஷா – ஸ்ரீகுமார் தம்பதி Courtesy: Hindu

 

“எனக்குச் சொந்த ஊர் கேரளாவுல உள்ள ஆலப்புழை. கோயமுத்தூருக்கு வந்து 30 வருஷமாச்சு. சொந்தமா பிசினஸ் செய்றேன். ஐந்து வருஷத்துக்கு முன்னால ஒரு ஹாபியா இந்த மாடித்தோட்டத்தை ஆரம்பிச்சோம். இப்ப கடைக்குக் காய்கறி, பழங்கள் வாங்கப் போறதையே நிறுத்திட்டோம்.

இயற்கை முறையில் உரம், பூச்சிக்கொல்லியாக வேப்பம்புண்ணாக்கு, வேப்பஎண்ணெய், சோப் ஆயில், நீம் ஆயில், வெள்ளைப்பூண்டு போன்றவற்றைக் கலந்து நாங்களே தயாரித்த மருந்துகளைப் பயன்படுத்துகிறோம். இது எல்லாமே மாடித்தோட்டம் போடும் நண்பர்களுடன் இன்டர்நெட்ல பேசிப்பேசி உருவான விஷயம். இதுபோன்ற விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் நண்பர்கள் இணையத்துல 2,000 பேருக்கும் மேல இருக்காங்க.

இதுல விளையற காய்கறிகளைப் பிரெஷ்ஷா நாங்க பயன்படுத்துறது மட்டுமில்லாம, அக்கம்பக்கத்துல உள்ளவங்களுக்கும் சந்தோஷமா கொடுக்கிறோம். காலையில இதைப் பராமரிக்கிறதுல உடம்புக்கு ஒரு உடற்பயிற்சி. மாலையில் இதற்குள் ஒரு வாக். மாடித்தோட்டம் இருக்கிறதால கிரவுண்ட் புளோர் வீட்டுல இதமான சில்னெஸ். இப்படித் தோட்டத்தால கிடைக்கும் பலன்களை நிறைய சொல்லலாம். எங்களைப் பார்த்து இங்குச் சுற்றுவட்டாரத்துல நிறைய பேர் மாடித்தோட்டம் போட்டுட்டாங்க, தெரியுமா!” என்று வியக்க வைக்கிறார் குமார்.

கடையில் கிடைக்காத காய்கறி

இதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கூறும்போது, ‘நான் ஈ.எஸ்.ஐ. மானேஜரா இருந்து ஓய்வு பெற்றேன். ஓய்வு காலத்துல என்ன செய்யலாம்னு யோசிச்சேன். கிச்சன் கார்டன்னு சொல்லப்படுற மாடித்தோட்டத்துக்கு தோட்டக்கலைத் துறையில் மானியத்துடன் விதைகள், உரம் எல்லாம் கொடுப்பதா நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டேன்.

கிருஷ்ணன் Courtesy: Hindu
கிருஷ்ணன் Courtesy: Hindu

மாடில பந்தல் போட்டு, தென்னை நார்க் கழிவு 100 பாக்கெட் வாங்கிட்டு வந்து 800 சதுர அடியில் தோட்டத்தை அமைச்சேன். அதற்கேற்ற மாதிரி இந்தப் பந்தலையும் போட்டேன். செலவையெல்லாம் ஒரு பொருட்டா நினைக்கலை. முதல் இரண்டு விளைச்சல் வேஸ்ட் ஆச்சு. பூச்சி புடிக்கறது. வாடிப்போறதுன்னு பிரச்சினை.

இதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கூறும்போது, ‘நான் ஈ.எஸ்.ஐ. மானேஜரா இருந்து ஓய்வு பெற்றேன். ஓய்வு காலத்துல என்ன செய்யலாம்னு யோசிச்சேன். கிச்சன் கார்டன்னு சொல்லப்படுற மாடித்தோட்டத்துக்கு தோட்டக்கலைத் துறையில் மானியத்துடன் விதைகள், உரம் எல்லாம் கொடுப்பதா நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டேன்.

மாடில பந்தல் போட்டு, தென்னை நார்க் கழிவு 100 பாக்கெட் வாங்கிட்டு வந்து 800 சதுர அடியில் தோட்டத்தை அமைச்சேன். அதற்கேற்ற மாதிரி இந்தப் பந்தலையும் போட்டேன். செலவையெல்லாம் ஒரு பொருட்டா நினைக்கலை. முதல் இரண்டு விளைச்சல் வேஸ்ட் ஆச்சு. பூச்சி புடிக்கறது. வாடிப்போறதுன்னு பிரச்சினை.

அதுக்காகச் சோர்ந்து போகலை. எங்களுடையது விவசாயக் குடும்பம். சின்ன வயசிலிருந்தே விவசாயத்துல ஊறினவன். நானே மாட்டுச் சாணம், மண்புழு உரம் எல்லாம் தயாரிக்க ஆரம்பிச்சேன். மாடியின் ஒரு பகுதியிலேயே அதுக்குத் தகுந்த தொட்டிகளை ஏற்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவில் அதைத் தயாரிச்சு செடிகளுக்குக் கொடுத்தேன்.

தோட்டத்துக் காய்கறிகளே தோத்துடுங்கிற அளவுக்கு விளைச்சல் தளதளன்னு ஆயிடுச்சு. வெண்டை, கத்தரிக்காய் மட்டும் இப்ப போட்டிருக்கேன். தினசரி 10 கிலோவுக்குக் குறையாம கிடைக்குது. அதுவும் மருந்தில்லாத காய்கறி கடைல கிடைக்குமா சொல்லுங்க?

அதைவிட முக்கியம். காலை, மாலையில் இந்தத் தோட்டத்துக்குள்ள வந்துட்டா வெளியே போக மனசு வராது. கேரட், பீட்ரூட் எல்லாம் போடலாம்தான். ஆனா அது ஒரு செடிக்கு ஒரு காய்தான் காய்க்கும். அதுவே வெண்டை, கத்தரி, தக்காளின்னு பார்த்தீங்கன்னா செடிக்கு 10 முதல் 30 காய்கள்கூடக் காய்க்குது. அதுதான் அப்படிப்பட்ட வெரைட்டியா தேடிப் போட்டிட்டு இருக்கோம்!’ என்றார்.

ஆர்வம் அதிகரிப்பு

மாடித்தோட்டம் பெருகிவருவது குறித்துக் கோவை தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் ராமகிருஷ்ணனிடம் பேசியபோது, ‘கோவையில் மட்டுமல்ல சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் நிறைய பேர் மாடித்தோட்டம் போடும் ஐடியாவில் வருகிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் 3,250 மாடித்தோட்ட கிட்டைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்துள்ளோம். 2014-ல் அரசு மானியத்துடன் கூடுதலாக கிட் விற்பனை செய்தோம்.

இப்போது ரூ.500-க்கு கேக் வடிவிலான தென்னை நார்க் கழிவு (காயர்) ஆறு பாக்கெட்டுகள் (இதில் உரம், செம்மண் எந்த விகிதத்தில் கலந்து விதைகள் போட வேண்டும் என்பது குறித்துச் செய்முறைக் குறிப்புகளுடன்), ஏழு பாக்கெட் காய்கறி விதைகள், நீரில் கரையும் இயற்கை உரங்கள், அசோஸ் பைரில்லம் மற்றும் இயற்கை முறை மருந்துகள் எல்லாம் வழங்குகிறோம்!’ எனத் தெரிவித்தார்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *