மாடித்தோட்டத்துல விவசாயம் செய்றவங்க, ஆர்வக்கோளாறுல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களைப் பக்கத்துல பக்கத்துல நடவு செஞ்சிடுறாங்க. அப்படி செய்யக் கூடாது. ஏன் வைக்கக் கூடாது? வெச்சா என்னாகும்னு ஒரு கேள்வி வரலாம். அதுல ஒண்ணும் பெரிய விஷயம் இல்லீங்க. உதாரணமா, தக்காளி, கத்திரி, மிளகாய் இதுக மூணும் ஒரே தாவரக் குடும்பம். ஒரே அப்பார்ட்மென்ட்ல அண்ணன், தம்பி, அக்கா வீடு இருக்குன்னு வெச்சுக்குங்க. அண்ணன் வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்க நம்ம வீட்டுக்கும் வருவாங்க. அக்கா வீட்டுக்கும் போவாங்கதானே… அதுதான் இங்கயும் நடக்குது. தக்காளிச் செடிக்கு வர்ற பூச்சி கத்திரிக்கும் போகும். மிளகாய்க்கும் போகும். ஆக ஒரு பயிருக்கு வர்ற பூச்சியை இன்னும் ரெண்டு பயிருக்குப் போயிட்டு வாங்கனு அனுப்புற வேலைதான் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களைப் பக்கத்துல பக்கத்துல வைக்குறதுனால நடக்குது. அதனால இந்த மூணு பயிர்களையும் பக்கத்துல பக்கத்துல வைக்கக் கூடாது.
நமக்கு இருக்கிறதே கம்மியான இடம். இதுல எப்படித் தள்ளித் தள்ளி வைக்கிறதுனு யோசிக்கிறீர்களா? தக்காளியை அடுத்து வெண்டைக்காய் வைக்கலாம். இது வேற குடும்பத்தைச் சேர்ந்தது. தக்காளிக்கு வர்ற பூச்சி இதுக்குப் போகாது. தக்காளி செடியில இருந்து 4 அடி தள்ளிக் கத்திரிக்காய் செடி வையுங்க. அதுல இருந்து 4 அடி தள்ளி மிளகாய் செடியை வையுங்க. இதுகளுக்கு இடையில இருக்குற இடைவெளியில மத்த பயிர்களை வையுங்க. இம்புட்டுதான் ப்ரோ. இது தெரியாமதான் ரொம்ப பேர் இந்தத் தவற்றை செஞ்சிடுறாங்க. உங்க மாடித்தோட்டத்துலயும் இப்படி இருந்துச்சுன்னா உடனே மாத்திடுங்க.
ரெண்டாவது விஷயம். `ஷேட் நெட்’னு சொல்ற நிழல்வலை. இது நம்ம ஊருக்குத் தேவையில்லாதது. இன்னிக்கு அது பேஷன் ஆகிப்போச்சு. நம்மளோட பயிர்கள் நிழலில் வளரக்கூடிய பயிர்கள் இல்ல. எல்லாமே வெப்பமண்டல பயிர்கள்தான். அந்தத் தாவரங்கள்ல முழுக்க முழுக்க வெயில்பட்டால்தான் நல்லா வளரும். அதனாலதான் மொட்டை மாடியில வைக்கிறோம். `ஷேட் நெட்’ போடும்போது தேவையான சூரிய ஒளி கிடைக்கிறது இல்ல. செடி வளரும். ஆனா நம்ம தேவையை நிறைவேற்றாது. ஒரு கணுவுக்கும் இன்னொரு கணுவுக்குமான இடைவெளி கூடும். தேவையான மகசூல் கிடைக்காது. வாளிப்பான தரமான காய்கறிகள் கிடைக்காது. சரி அப்ப `ஷேட்நெட்’ பயன்படுத்தக் கூடாதா?னு ஒரு கேள்வி வரலாம். எந்தெந்த தாவரங்கள் பூக்காதோ அந்தத் தாவரங்களுக்குப் பயன்படுத்தலாம். புதினா, கொத்தமல்லி, கீரை மாதிரியான பூக்காத தாவரங்களை வளர்க்கலாம். தக்காளி, மிளகாய், வெண்டை உள்ளிட்ட பூப்பூத்து காய்காய்க்குற பயிர்களை வெயில்லதான் வைக்கணும். இதுதான் மாடித்தோட்டத்தோட அடிப்படை.
சிலர் கேரட், முட்டைகோஸ் மாதிரியான இங்கிலீஸ் காய்கறிகளை மாடித்தோட்டத்துல பயிர் பண்றாங்க. அதுக்கு ஷேட்நெட் பயன்படுத்துறாங்க. அது வெயிலைக் குறைக்குமே தவிரக் குளிர்ச்சியை ஏற்படுத்தாது. இந்தப் பயிர்கள் எல்லாம் குளிரான பகுதிகள்ல வளரக்கூடிய பயிர்கள். ஆனா, பல வீடுகள்ல இந்தப் பயிர்களை வளர்க்குறாங்க. மண்ணுக்குள்ள வளரும் பயிர், நேரடியா சூரிய ஒளி படாத இடத்துல வச்சா வளரும். ஆனால், அது சரியான முறை இல்லைனு தோட்டக்கலைத்துறை விஞ்ஞானிகள் சொல்றாங்க. இதையும் கவனத்துல வெச்சுக்கங்க மக்களே.
மாடித்தோட்ட விவசாயத்துல இன்னோர் அடிப்படை, இயற்கை விவசாயம். நம்ம வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை, விஷம் இல்லாம உற்பத்தி பண்ணிச் சாப்பிடணும்னுதான் மாடித்தோட்டம் போடுறோம். இதுல அவசரத்துல சிலர் ஒரு தப்பு பண்ணிடுறாங்க. சில நேரங்கள்ல பூச்சித் தாக்குதல் அதிகமாகிடும். உதாரணமாக, மேலே சொன்ன மாதிரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களைப் பக்கத்துல பக்கத்துல வைக்கிறதுனாலக்கூட வரலாம். அதுமாதிரி அதிக பூச்சிக வந்தவுடனே பதறிப்போய், அவசரத்துக்கு ரசாயன மருந்தை வாங்கிட்டு வந்துத் தெளிச்சிடுறாங்க. அது மிக மோசமான விளைவுகளைக் கொடுக்கும்.
நிலத்தில விவசாயம் செய்யும்போது ஏக்கர் கணக்குல செய்வாங்க. மண் அதிக அளவுக்கு இருக்கும். அங்க செடிகளுக்கு ரசாயன மருந்து தெளிப்பாங்க. ஆனா செடி எப்பவும் ரசாயனத்தைத் தனக்குள்ள வெச்சுக்காது. மண்ணுக்குள்ள இறங்கிவிட்டுடும். அது பெரிய பரப்பளவுள்ள நிலம். அங்கு மண்ணுக்குள்ள போற ரசாயனம் மண்ணுக்கு ஆழத்துலப் போய்ப் படியும். அதுனால உடனடியா பாதிப்பு தெரியாது. ஆனா, நாம வீட்டுத்தோட்டத்துல சின்னச் சின்ன பைகள்லதான பயிர் வளர்க்குறோம். அந்தப் பையில மொத்தமே ஒரு கிலோ மண்தான் இருக்கும். அதுனால நாம தெளிக்குற ரசாயன மருந்து காலத்துக்கும் அந்தத் தொட்டியிலதான் கிடக்கும். அதை மறுபடியும் வெளியே அனுப்ப முடியாது. அடுத்த பயிரை அந்தத் தொட்டியில நடவு செஞ்சாலும் அதுலயும் அந்த ரசாயனத்தோட தாக்கம் இருக்கும். அதுனால அவசரத்துல பயன்படுத்தி இருந்தாலும் அந்தப் பயிர் முடிஞ்சவுடனே அந்தப் பையில இருக்க மண்ணை மாத்திடணும்.
இன்னொரு முக்கியமான விஷயம் மாடித்தோட்டத்தில மண் அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. அதுக்குப் பதிலா தென்னை நார்க்கழிவுதான் பயன்படுத்தணும். மண் அதிகமா பயன்படுத்தும்போது மாடியில எடை கூடிக்கிட்டேப் போகும். அது ஒரு கட்டத்துல கட்டடத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். பலரும் மாடியில மண் தொட்டி பயன்படுத்துறாங்க. அதுவே எடை அதிகம். அதுல மண்ணை வேற கொட்டிடுறாங்க. வீட்ல கீழ்ப்பகுதியில நிலத்தில் மண் தொட்டி பயன்படுத்தலாம். ஆனா, மாடியில் பயன்படுத்தும்போது மண் தொட்டி, மண் இரண்டையும் தவிர்ப்பது நல்லது. அதேபோல மாடித்தோட்டத்துல தண்ணி தேங்காம வடிஞ்சி போற மாதிரி பார்த்துக்கணும். இப்ப அதுக்கு தனியா சிமென்ட், பெயின்ட்னு பல டெக்னாலஜி கடைகள்ல கிடைக்குது.
ரெண்டு பயிர் அறுவடை முடிஞ்ச பிறகு, தென்னை நார்க்கழிவு உரத்தையும் மாத்திடணும். பையில இருக்க தென்னை நார்க்கழிவு உரத்தை வெயிலில் கொட்டி நல்லா காய வைக்கணும். அப்பத்தான் அதுல இருக்க தீமை செய்யுற நுண்ணுயிர்கள் அழிஞ்சுபோகும். பிறகு, அதை ஒரு பையில சேமிச்சு வெச்சுக்கலாம். தேவைப்படும்போது, அதுல டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ் சேர்த்து ஊட்டமேற்றி பயன்படுத்தணும். இன்னொரு முக்கியமான விஷயம்.
ஒரு பையில ஒரு செடியைத்தான் வைக்கணும். அப்பத்தான் பயிரோட முழுமையான மகசூல் நமக்குக் கிடைக்கும். பொதுவா, தக்காளி, கத்திரி ரெண்டும் 6 முதல் 8 கிலோ வரைக்கும் மகசூல் கொடுக்கும். ஆனா, ஒரே தொட்டியில ரெண்டு செடி வச்சா, நிறைய காய்க்கும்னு நினைச்சு வெச்சிடுறோம். ஒரு செடி மட்டும் இருந்தா சத்துக்களை முழுசா எடுத்துக்கிட்டு 6 கிலோ கொடுக்கும். அதே இடத்துல ரெண்டு செடி இருக்கும்போது ரெண்டும் சேர்ந்து 4 கிலோவுக்கு மேல காய்க்காது. அப்ப நமக்கு 2 கிலோ மகசூல் இழப்பு ஆகிடும். அதே மாதிரி ஒரே செடியா இருந்தா நாலஞ்சு மாசம் கூட செடி காய்க்கும். ஆனா, ரெண்டு, மூணு செடிக இருந்தா மூணு மாசத்துக்கு மேல செடிகள்ல மகசூல் எதிர்பார்க்க முடியாது. கத்திரி, தக்காளி வளைஞ்சு நெளிஞ்சு போகாம, நேராப் போற மாதிரி பாத்துக்கணும். குட்டி மரம் மாதிரி இருக்கணும். அப்பதான் நல்ல மகசூல் கிடைக்கும்.
சில பேரு நேரடியா விதையைப் பையில நடவு செஞ்சிடுறாங்க. பொதுவா அப்படி நடக் கூடாது. அப்படி நட்டாலும் நேரடியா வெயில் படக் கூடாது. தக்காளி, கத்திரி, மிளகாய் விதை ரொம்ப மெல்லிசா இருக்கும். மண்ணுல மேலாக வெச்சுதான் மூடுவோம். அது முளைக்க ஈரப்பதம் முக்கியம். நடவு செய்யும்போது மண்ணுல ஊத்துற தண்ணியோட ஈரப்பதத்தை விதை உறிஞ்சி பிறகுதான் முளைக்கும். அது முளைக்கிற வரைக்கும் ஈரப்பதம் குறையாம பாத்துக்கணும். வெயில்ல வைக்கும்போது, மண்ணோட ஈரப்பதம் போயி, விதையிலயும் ஈரப்பதம் போயிடும். முளைக்காது. என்னால ஈரப்பதம் போகாம பார்த்துக்க முடியும்னு நினைக்குறவங்க நேரடியா நடவு பண்ணலாம். நாட்டு விதையா ரெண்டு, மூணு விதையை நடவு பண்ணணும். முளைவிட்டதும், நல்லா இருக்குற செடியை விட்டுட்டு மத்த செடிகளைக் கிள்ளி விட்டுடணும். இதுல கவனமா இருந்தா மாடித்தோட்ட விவசாயத்துல நீங்க கில்லிதான்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
நான் மாடியில் அன்னாசிப்பழம் கன்றுகள் நட்டு வைத்துள்ளேன். நன்கு வளர்ந்து வருகிறது. இதற்கு தண்ணீர் தேவை குறித்து விபரம்
தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி!