மாடி தோட்டத்தில் பாலி ஹவுஸ் பார்முலா !

வீடுகள் தோறும் ‘மாடி தோட்டம்‘ என்பது பரலாகி வருகிறது.

தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் மாடி தோட்டம் அமைக்க ரூ.500 விலையில் தேங்காய் நார் துாசி கலந்த பாக்கெட்கள், விதைகள், இயற்கை உரங்கள், விளக்கக் கையேடுகள் என அனைத்தையும் வழங்குகின்றனர். இவற்றை ஆர்வத்தோடு வாங்கி செல்லும் பலர் ஆசை… ஆசையாய்… மாடி தோட்டம் அமைக்கின்றனர்.
தினமும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர். சில நாட்களில் செடிகள் நன்கு வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. அழகாக பூக்கள் பூக்கின்றன. பூவுக்குள் இருந்து பிஞ்சுக்காய் எட்டிப்பார்க்கிறது. அதை பார்த்த ஆனந்தத்தில் மனைவி, குழந்தைகளை வரவழைத்து, ”நான் வளர்க்கும் மாடி தோட்டத்தில் பூக்களும், காய்களும் பூத்து குலுங்குவதை பாருங்கள்,” என அங்கலாய்த்து கொள்வார்.

‘பஞ்சு பூச்சி’ நோய்:

‘சிவ பூஜையில் கரடி புகுந்தது’ போல் பச்சை பசேலென காட்சிஅளிக்கும் செடிகளின் மீது வெண்பட்டு விரித்தது போல் ‘பஞ்சு பூச்சிகள்’ அப்பி கொள்ளும். இலையின் பச்சையத்தை உறிஞ்சி வாழும். இதனால் இலைகள் சுருண்டு வளர்ச்சியடையாது. வேப்பம் எண்ணெய் மருந்து தெளித்தாலும் பூச்சிகள் அழியாது. பூச்சி தாக்கிய செடியை வேருடன் அழித்தால் மட்டுமே ஒழிக்க முடியும். இதனால் வெறுத்துப்போகும் மாடி தோட்ட விரும்பிகள் பலர் ஒரு கட்டத்தில் மாடி தோட்ட எண்ணத்தை கை விடுவதுண்டு.

பூச்சிகளுக்கு ‘குட்பை’:

‘மாடி தோட்டம் கோடி வருமானம்’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பூச்சிகளுக்கு ‘குட்பை’ சொல்லி, மகசூலுக்கு ‘வெல்கம்’ சொல்கின்றனர் மூன்று பொறியாளர் நண்பர்கள். மதுரையை சேர்ந்த பாரதி, கண்ணன், விவேக் ஆகியோர் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். தாங்கள் சார்ந்த துறையில் ‘பிசி’யாக உள்ளனர். எனினும் ஓய்வு நேரங்களில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ‘பாலி ஹவுஸ்’ முறையில் மாடி தோட்டம் அமைத்து பூச்சிகளுக்கு நிரந்தர விடை கொடுத்துள்ளனர். இரட்டிப்பு மகசூல் பெற்று வருகின்றனர்.
இவர்கள் கூறியதாவது:

வீட்டின் மாடியில் இட வசதிக்கு ஏற்ப பாலி ஹவுஸ் அமைக்க வேண்டும். இதில் செடிகளுக்கு தேவையான 18-20 வெப்ப நிலை கிடைக்கிறது. வீட்டிற்குள் செல்வது போல் பாலி ஹவுஸில் நுழைவு பாதை ‘ஜிப்’ வைத்து அமைக்க வேண்டும்.
ஜிப்பை திறந்து உள்ளே சென்றதும் மூடி விட வேண்டும். மூன்று அடுக்கு ‘பெட்’ அமைத்து பாலிதீன் பாக்கெட்டுகளில் தென்னை நார் துாசி நிரப்பி விதைக்க வேண்டும்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

பாலி ஹவுஸ் மேல் புறத்தில் குழாய் அமைத்து செயற்கை மழை பெய்வது போல் காலையில் 5.30, 7.00 மற்றும் 9.30 மணி என மூன்று முறை சுழற்சி முறையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதற்காக ‘ஆட்டோமேட்டிக் பம்பிங் ஸ்டேஷன் சிஸ்டம்’ அமைக்க வேண்டும்.
இம்முறையில் நீர் பாய்ச்ச தினமும் ஓரிரு லிட்டர் தண்ணீர் போதுமானது. எனினும் சிறிய பூ வாளி மூலமும் தண்ணீர் பாய்ச்சலாம். செடி முருங்கை, நாட்டு கத்தரி, சைனா கத்தரி, முள்ளங்கி, பீட்ரூட், காலிபிளவர், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி என வீட்டு சமையலுக்கு தேவையான அனைத்து வகை காய்கறிகளையும் பாலி ஹவுஸ் முறையில் மாடி தோட்டம் அமைத்து சாதிக்கலாம், என்றனர்.
பாலி ஹவுஸ் உள்ளே பூச்சிகள் வராது என்பதால் பூச்சி தாக்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. பூச்சி கொல்லி மருந்துக்கும் வேலை இல்லை. இயற்கை உரத்திற்கு வேம்பம் புண்ணாக்கு போதும். வீட்டின் தினமும் வீணாகும் காய்கறி கழிவுகளை பாலி ஹவுஸ் வெளியில் சேகரித்து இயற்கை உரம் தயாரிக்கலாம்.
தொடர்புக்கு 09943180596.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *