‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று நம் முன்னோர்கள் காரணத்துடன்தான் சொல்லிவைத்திருக்கிறார்கள். ஆவணி மாதத்தில் பெய்யும் மிதமான மழை இளம் பயிர்களுக்கு ஏற்றதாகவும், புரட்டாசியில் விட்டு விட்டு அடிக்கும் வெயில், மழை ஆகியவை வளர் பயிர்களுக்கு உகந்ததாகவும் இருக்கிறது. மானாவாரி விவசாயத்தில் ஆடிப்பட்டம்தான் மிக முக்கியமானது. அதனால்தான் விதைப்புக்குப் பலரும் ஆடிப்பட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில், ‘சாம்பார் வெங்காயம்’ என்றழைக்கப்படும் சின்னவெங்காயத்தை ஆடிப்பட்டத்தில் நடவுசெய்து, விவசாயிகள் அதிக மகசூல் எடுக்கிறார்கள், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலரும்.
சின்னவெங்காயத்தை அனைத்து பகுதிகளிலும் பயிர்செய்யமுடியாது. ஈரம் கலந்த காற்றும், மிதமான தட்பவெட்ப நிலையும் உள்ள பகுதிகளில் மட்டுமே சிறப்பான மகசூல் பெறமுடியும். சின்னவெங்காயத்தின் விலை, சில பட்டங்களில் காலை வாரி விட்டாலும், தொடர்ந்து சாகுபடிசெய்து வருபவர்களுக்கு அது ‘ஜாக்பாட்’ என்பது ஊரறிந்த உண்மை. அதனால், பலரும் விடாமல் சின்னவெங்காயத்தைச் சாகுபடிசெய்துவருகிறார்கள். அவர்களில், பரம்பரையாக சின்னவெங்காயத்தைச் சாகுபடிசெய்துவரும் முன்னோடி விவசாயி மாறனும் ஒருவர். இவர், திராட்சைச் சாகுபடியிலும் கலக்கிவருகிறார்.
கோயம்புத்தூர்-சிறுவாணி சாலையில் உள்ள குப்பனூரில் இருக்கிறது, மாறனின் தோட்டம். ‘ஜிலுஜிலு’வென பன்னீர் தெளிக்கும் தென்மேற்குப் பருவமழையின் தூறலில், ‘தளதள’வென வளர்பருவத்தில் இருக்கும் வெங்காய வயலுக்குள் வலம் வந்தபடியே பேசினார், மாறன்.
விதைச் செலவு இல்லை!
“இது, சின்னவெங்காயத்துக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை சிறப்பா இருக்கிற பகுதி. அதிக வெப்பமும், அதிகக் குளிரும் இல்லாத மிதமான சூழலைக் கொடுக்கிற நில அமைப்பு, வெங்காயத்துக்கு ஏத்த மாதிரி அமைஞ்சிருக்கு. இப்ப, வெங்காயத்திலும் வீரிய ரகங்கள் பல வந்தாச்சு. அதுக்கெல்லாம் பட்டம் கிடையாது. நாங்க நடவுசெய்றது நாட்டு ரக வெங்காயம். இது, ஆடிப்பட்ட விதைப்புல சிறப்பான மகசூலைக் கொடுக்கக்கூடியது. குறுகிய நாள்ல அதிக லாபம் கொடுக்கக்கூடிய பணப்பயிர் சின்னவெங்காயம் மட்டும்தான்.
வெங்காயச் சாகுபடியில விதைக் காய்க்குத்தான் அதிகமா செலவாகும். ஏக்கருக்கு, குறைந்தது 15 ஆயிரம் ரூபாய்ல இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவுபிடிக்கும். பெரும்பாலான விவசாயிங்க, முன்போகத்தில் விளைஞ்சதுல, தரமான காய்களை விதைக்காகத் தேர்வுசெய்து எடுத்து வெச்சுக்குவாங்க. நாங்களும் அப்படித்தான் முன்போக காய்களை விதைக்காய்களா பயன்படுத்திக்கிட்டு வர்றோம். ஒரு ஏக்கருக்கு 700 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். ஆயிரம் கிலோ பச்சை வெங்காயத்தை எடுத்து சேமிச்சாதான் 700 கிலோ விதை வெங்காயம் கிடைக்கும். நான் 10 ஏக்கர்ல விதைக்கிறதுக்கு 7 ஆயிரம் கிலோ விதை வெங்காயத்தையும் என் வயல்ல இருந்தே எடுத்துக்கிறேன். ஒரு கிலோ விதை வெங்காயம் 25 ரூபாய்னு கணக்கு வெச்சுக்கிட்டாலும், இதுமூலமா வருஷத்துக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் எனக்கு மிச்சமாகுது” என்ற மாறன், தொடர்ந்தார்.
ஏக்கருக்கு 7 ஆயிரம் கிலோ மகசூல்!
“ஒரு ஏக்கர்ல சின்னவெங்காயம் சாகுபடிசெய்ய அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவாகும். வெங்காயத்தைப் பொறுத்தவரை விலை, ஆகாசத்துக்கும் போகும். அதளபாதாளத்துக்கும் போகும். போன பட்டத்துல கிலோ 70 ரூபாய் வரைக்கும் விற்பனையாச்சு. இந்த வருஷம், சராசரி விலையா கிலோவுக்கு 30 ரூபாய் கிடைச்சது. ஒரு ஏக்கர்ல குறைஞ்சபட்சம் 7 ஆயிரம் கிலோ மகசூல் கிடைக்கும். அதுல, விதை வெங்காயத்துக்கு ஆயிரம் கிலோ எடுத்து வெச்சது போக, 6 ஆயிரம் கிலோவுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்னு வருமானம் கிடைச்சது. இதுல, செலவுகளைக் கழிச்சா… ஏக்கருக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும். 60 நாள்ல ஒரு லட்ச ரூபாய்க்கு மேல வருமானம் கொடுக்கிற சின்ன வெங்காயம் எங்களைப் பொறுத்தவரைக்கும் ஒரு அட்சயபாத்திரம்தான்” என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார், மாறன்.
விதைத்தேர்வு!
நன்றாக விளைந்த, திடமான காய்களைத்தான் அடுத்த போகத்துக்கான விதைக் காய்களாகத் தேர்வுசெய்ய வேண்டும். அறுவடைசெய்த வெங்காயம் விதை வெங்காயமாக மாற, மூன்று மாதங்கள் பிடிக்கும். தேர்வுசெய்த வெங்காயத்தைச் சுத்தம்செய்து, காற்றோட்டமான பட்டறைகளில் போட்டுவைத்தால், முளைப்புத்தன்மை நன்றாக இருக்கும்.
சாகுபடி செய்யும் விதம்…
வெங்காய சாகுபடி முறை குறித்து மாறன் சொன்ன விஷயங்கள், பாடமாக இங்கே…
சித்திரை மாதத்தில் இரண்டு முறை கோடை உழவுசெய்து நிலத்தைப் பண்படுத்த வேண்டும். இரண்டாவது உழவுக்கு முன்பாக ஏக்கருக்கு தலா 5 டன் ஆட்டு எரு மற்றும் தொழுவுரம் இட வேண்டும். குறுகிய காலப் பயிரான வெங்காயத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு அடியுரம் முக்கியம். நன்கு உழவுசெய்து, மண்ணைப் பொல பொலப்பாக்கி ‘பார்’ அமைக்க வேண்டும். பாருக்குப்பார் 45 சென்டி மீட்டர் (ஒன்றரை அடி) இடைவெளி இருக்க வேண்டும். பார் வரப்புக்களின் மையப்பகுதியில் சொட்டுநீர்க் குழாய்களைப் பதித்துக்கொள்ள வேண்டும். மண்ணை ஈரமாக்கி, வெங்காயத்துக்கு வெங்காயம் 10 சென்டி மீட்டர் இடைவெளி இருக்கும்படி நடவுசெய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது, ஏக்கருக்கு 700 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். நடவு முடிந்த மூன்றாவது நாளில், உயிர்த்தண்ணீர் விட வேண்டும். தொடர்ந்து, வாரம் மூன்று முறை பாசனம் செய்ய வேண்டும்.
களை எடு… உரம் கொடு!
சின்னவெங்காயத்தைப் பொறுத்தவரை, களைக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். ஆட்டு எரு போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தும்போது, அதிக அளவில் களைகள் முளைப்பதைத் தவிர்க்க முடியாது. உடனுக்கு உடன் அவற்றைப் பிடுங்கி அப்புறப்படுத்திட வேண்டும். இல்லையென்றால், பயிர்களுக்குப் போய்ச் சேரவேண்டிய சத்துக்களைக் களைகளே கபளீகரம் செய்துவிடும். ஆகவே, நடவுசெய்த 25 மற்றும் 40-ம் நாள்களில் களை எடுப்பது அவசியம். களை எடுத்த கையோடு… 50 கிலோ தழைச்சத்துகொண்ட உரத்தை மேலுரமாக இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
35-ம் நாளில் வெங்காயத்தாள் பச்சை காட்டி செழித்து நிற்கும். இந்தச் சமயத்தில், வெங்காய ஈ, வெட்டுப்புழு ஆகியவை தாக்கலாம். அதோடு, இலைப்புள்ளி நோயும் வர வாய்ப்பு உண்டு. வாரம் ஒரு முறை பயிர்கள் நனையும்படி மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்பதன் மூலம் பூச்சி, நோய்த் தாக்குதல்களைக் குறைக்கலாம்.
50 முதல் 60 நாட்களுக்குள் தாள்கள் மஞ்சள் நிறமாகி மடியும். இந்தச் சமயத்தில், மண்ணுக்குள் இருக்கும் வெங்காயத்தைப் பிடுங்கிப் பார்க்க வேண்டும். இளஞ்சிவப்பு நிறத்தில் காய்கள் பிரிந்து திடமாக இருந்தால், அறுவடை செய்யலாம். காய்ந்த தாளோடு சேர்த்துப் பிடுங்கி, காற்றோட்டமுள்ள மேட்டுப்பாங்கான இடத்தில் குவியல் போட்டு, அதை இரண்டு நாட்கள் கலைத்து விட்டால், வேர்களில் உள்ள ஈரப்பதம் காய்ந்து, ஒட்டியிருக்கும் மண் துகள்கள் உதிர்ந்து விடும். வெங்காயத்தில் உள்ள காய்ந்த தாள்களை அறுத்து விட்டு விற்பனை செய்யலாம்.
பட்டறைப் பாதுகாப்பு!
வெங்காயத்தை, பட்டறை அமைத்து சேமித்து வைப்பது எளிமையான முறை. ரயில் பெட்டிபோல மூங்கில் தட்டிகளை நீளவாக்கில் அமைத்துக்கொண்டு அதனுள் வெங்காயத்தைக் கொட்டி, சோளத்தட்டைகளைக்கொண்டு வீட்டுக்கூரை போல மேய்ச்சல் போடவேண்டும். அடிப்பகுதியில் கரையான் பூச்சிகள் புற்று வைக்காதபடி 4 அடி உயரத்தில் வரிசையாக கற்களை அடுக்கி, அதன் மீது மூங்கில்பாய் விரித்து பெட் அமைத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் ‘வெங்காயம் சேமிப்புப் பட்டறை’ என்பார்கள். இதில் வெங்காயத்தைச் சேமித்து 90 நாட்கள் கழித்து பட்டறையைப் பிரித்துப்பார்த்தால், வெங்காயத்தில் இருந்த ஈரப்பதம் சுத்தமாக வெளியேறி, காய்ந்த சருகுகளுடன் வெளிர் நிறத்தில் காணப்படும். அதை மறுபடியும் காற்றில் தூற்றி, சேதம் அடைந்த வெங்காயங்களை அப்புறப்படுத்தி, மூட்டை பிடித்து மூன்று மாதங்கள் வரை வைத்திருக்கலாம்.
சேதாரத்தைக் குறைக்கும் சொட்டுநீர்ப் பாசனம்!
“விதைய நட்டமா… தண்ணிய விட்டமா… என அசால்டாக இருந்தா, வெங்காய விவசாயத்தில் வெற்றிபெற முடியாது. அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளியைக் கவனிப்பதுபோல கண்ணும் கருத்துமா 60 நாட்களும் வயலைச் சுத்திச்சுத்தி வந்து பராமரிக்கணும். வெங்காயம் ரொம்ப மென்மையான பயிர். பேன், அசுவிணி, சாறு உறிஞ்சும் பூச்சிகள் பயிருக்குள் புகுந்து மேய்ந்துவிடும் வாய்ப்பு அதிகம். அதேபோல பாசன நீரும் அதிகம் தேவைப்படும். நிலம் காயாமல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் கொடுத்துக்கிட்டே இருக்கணும். சொட்டுநீர்ப் பாசனம் மிகவும் ஏற்றது. நேரடி வாய்க்கால் மூலமா ஒரு ஏக்கருக்கு பாயுற தண்ணீரை சொட்டு நீர் வழியா மூணு ஏக்கருக்குக் கொடுக்கலாம்” என்கிறார், மாறன்.
கிடை கொடுக்கும் கொடை!
“எங்க பகுதியில கிடை ஆடு மேய்க்கிறவங்க அதிகம் இருக்காங்க. வருஷத்துக்கு ஒரு முறை எங்க நிலம் முழுசும் மாத்தி மாத்தி கிடை போட்டுக்கிட்டே இருப்பாங்க. பல வருஷமா தொடர்ந்து ஆட்டு எரு எங்க நிலத்துல விழுறதால, மண்வளம் பெருகிக்கிடக்கு. அதனால, ரசாயன உரம் பக்கம் போக வேண்டிய தேவையே இல்லாமப் போயிடுச்சு. பாசனம் மட்டும் சரியா கொடுத்துட்டுவந்தா போதும். வெங்காயம், வெங்கலம் போல விளையும். பாத்தி அமைச்சு நடவு செய்வதைவிட, பார் அமைச்சு வெங்காயத்தை நடவுசெய்றதுதான் நல்லது. வரப்புபோல அமைஞ்சிருக்கும் நீண்ட பார்கள்ல பொதுபொதுனு மண் இருக்கிறதால வெங்காயத்தின் வேர்கள் சுலபமா இறங்கி நல்லா வளரும்” என்கிறார், மாறன்.
உடனே விற்க வேண்டும்!
வெங்காயத்தைச் சேமித்துவைப்பவர்கள், மழைக் காலங்களில் நீர் படாமல், வெங்காயக் குவியலை ‘தார்பாலின் ஷீட்’ கொண்டு மூடி வைக்க வேண்டும். அதேபோல தொடர்ந்து மூடி வைக்கவும் கூடாது, காற்றோட்டம் இல்லாவிட்டால், அதிக வெம்மை காரணமாக வெங்காயம் அழுகிவிடும். அதிகபட்சம் வெங்காயத்தை 70 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம். அறுவடை முடிந்த கையோடு விற்பனை செய்யும்போது கிடைக்கும் எடை, சேமித்துவைத்து விற்கும்போது கிடைக்காது. 30 சதவிகிதம் எடை இழப்பு ஏற்படும். கூடுதல் விலை கிடைத்தால் மட்டும்தான் இதை ஈடுகட்ட முடியும். அதனால், உடனே விற்றுவிடுவது நல்லது.”
தொடர்புக்கு, மாறன் செல்போன்: 09786644424
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
ஐயா,
வணக்கம். நான் பொறியியல் பட்டதாரி..
தற்போது மலேசிய நாட்டில் பணிபுரிகின்றேன்.
எனக்கு விவசாய தொழிலே விருப்பம்.
எங்களுக்கு 3ஏக்கர் நிலம் உள்ளது..
அதில் தற்போது கரும்பு, நெல் பயிறிடுகிறோம்.
வெங்காயம் பயிரிட்டால் இலாபம் கிடைக்குமா?
ஊர் தஞ்சாவூர்.
வெளிநாட்டு வேலை விடலாமென்று நினைக்கிறேன்.
விவசாயம் செய்ய விரும்புகிறேன்.
எனக்கு தாங்கள் நல்ல ஆலோசனை வழங்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.. நன்றி.
அன்புள்ள அய்யா
பதில் எழுதுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு மன்னிக்கவும். நானும் உங்களை போல ஒரு பொறியியல் வேலை செய்பவன். கடந்த 2 வாரம் வேலை அதிகம் 🙂
விவசாயம் செய்ய விரும்புவோர்க்கு நான் கொடுக்கும் அட்வைஸ் இதுதான்
– எல்லாரும் சாகுபடி செய்வது போல் நெல், கரும்பு பதிலாக சந்தையில் நல்ல டிமாண்ட் உள்ளவற்றை சாகுபடி செய்யலாம். உதாரணமாக நேற்று பெங்களூரில் நாவல் பழம் 200கி ரூ 50! இங்கே எனக்கு தெரிந்த ஒருவர் வீபூதிப்பச்சை சாகுபடி செய்து இத்தாலி ஹோட்டல் எல்லாம் ஒரேகமோ செய்கிறார்!
– ஒரே பயிரை நம்பாமல் 2-3 ஊடு பயிர்கள் பயிர் இடலாம். ஒவ்வொரு பயிரின் சாகுபடி காலமும் வேறு மாதங்களாக இருந்தால் வருடம் முழுவதும் வருமானம் கிடைக்கும். பூச்சி வந்து ஒரு பயிர் போனாலும் மற்றவை பிழைக்கும்.
– இயற்கை உரம், இயற்கை பூச்சி விரட்டிகளால் இரண்டு லாபம். உங்கள் ஹெல்த் பாதிக்காது. செலவு குறையும். லாபம் அதிகரிக்கும். அதிக அளவு மகசூல் இல்லாவிட்டாலும், லாபம் இருக்கும்.
– மதிப்பூட்டிய பொருள் தயாரித்து விற்பது. தக்காளியை நேராக விற்காமல், சிறிது செலவு செய்து கெட்சுப் செய்வது. இவற்றால் நிறைய லாபம் கிடைக்கும்
– கடைசியாக நீங்களே நேரடியாக விற்பனை செய்வது. முகநூல், வெப்சைட் வாட்ஸாப்ப் மூலம் customer நேரடியாக விற்பது. பெங்களூரில் பல பேர் இப்படி விற்பனை செய்கின்றனர். இப்படிதான் நான் என் வீட்டுக்கு வெல்லம் வாங்குகிறேன். மாதம் ஒரு நாள் வந்து வீட்டிலேயே கொடுத்து செல்கின்றனர். சந்தை விலையை விட அதிகம் இருந்தாலும் சந்தையில் உள்ள ஆர்கானிக் பொருட்களை விட கம்மியே!
இந்த குறிப்புகள் உங்களுக்கு உபயோகம் ஆக இருக்கும் என நினைக்கிறேன். விவசாயம் என்பது ஒரு பிசினஸ். லாபம் நஷ்டம் இருக்கும். வேலை போல் மாதா மாதம் ஒரே அளவு வரவு இருக்காது. ஆனால் மன நிறைவு, நல்ல உணவு, டீசெண்டான வாழக்கை நிச்சயம். வாழ்த்துக்கள்!!