வெண்டைக்காய் சாகுபடி

இரகங்கள் : கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை : வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர் நீண்ட நேர வெப்ப நாட்கள் இதற்குத் தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது.

வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.

பருவம் : ஜீன் – ஆகஸ்ட்  மற்றும் பிப்ரவரி – மார்ச்

விதையும் விதைப்பும்

விதையளவு : எக்டருக்கு 7.5 கிலோ

நிலம் தயாரித்தல் : மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவிற்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ இடைவெளி விட்டு வரிப்பாத்திகள் (பார்சால்) அமைக்கவேண்டும்.

விதை நேர்த்தி மற்றும் விதைத்தல் : விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். பின்பு விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும். நிழலில் ஆறவைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ ஆழத்தில் ஊன்றவேண்டும். 10 நாட்களுக்கு வின் 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களைதல்வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும், பிறகு வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல் : அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். நட்ட 30 நாட்கள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக் கொள்ளலாம். மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியமாகும்.

பயிர் இடவேண்டிய சத்துக்கள்(கிலோ ஒரு மரத்திற்கு) இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ ஒரு மரத்திற்கு)
தழை மணி சாம்பல் 10:26:26 யூரியா
வெண்டை அடியுரம் 20 50 30 193 02
நட்ட 30 நாட்கள் கழித்து 20 0 0 44 0

இலைவழி ஊட்டம் : ஒரு சத யூரியா கரைசலை விதைத்து 30 நாட்கள் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும். மீயூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராம் ஒரு லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 30,45 மற்றும் 60வது நாளில் தெளிப்பதன் மூலம், விளைச்சலை அதிகப்படுத்தலாம்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

களை நிர்வாகம் : களைகள் முளைக்கும் முன் விதைத்த மூன்றாம் நாள் எக்டருக்கு ப்ளுக்குளோரலின் 2 லிட்டர் தெளித்து உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும். பிறகு விதைத்த 30ம் நாள், ஒரு கைக்களை எடுக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

காய்த்துளைப்பான் : வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த முறைகளை மேற்கொள்ளவேண்டும்.

  1. இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.
  2. காய்ப்புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்துவிடவேண்டும்.
  3. எக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும்.
  4. கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும் அல்லது எண்டோசல்பான் 1.5 மில்லி அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில கரைத்து தெளிக்கவேண்டும்.

சாம்பல் நிற வண்டு : இதனைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி. குருணை மருந்து எக்டருக்கு 12 கிலோ இடவேண்டும்.

நூற்புழு தாக்குதலைத் தடுக்க : எக்டருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும் போது, உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஒரு எக்டருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து 1 கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து கிலோ இடவேண்டும்.

அசுவினிப்பூச்சி : இதனைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி அல்லது டெமெத்தோயேட் 2 மில்லி மருந்து இவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.

நோய்கள்

மஞ்சள் நரம்புத் தேமல் நோய் : இது மிகவும் அதிக அளவில் வெண்டைணைத் தாக்கக் மூடிய ஒரு நச்சுயிரி நோய் ஆகும். இந்நோய் வெள்ளை ஈ என்ற புஸச்சகளால்ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது. இப்பூச்சியை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு 2 மில்லி வேம்பு எண்ணை மற்றும் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவேண்டும். கோடைக்காலத்தில் இந்நோய் மிக அதிக அளவில் வெண்டையைத் தாக்கும். இந்தப் பருவத்தில் நோயை எதிர்த்து வளரப்கூடிய பார்பானி கிராந்தி போன்ற இரகங்களைப் பயிரிடுவது நல்லது. மேலும் இந்நோயைத் தாங்கி வளரக் கூடிய இரகங்காளன பார்பானி கிராந்தி, அர்கா அனாமிகா மற்றும் அர்கா அபஹாப் போன்றவற்றை சாகுபடி செய்யவேண்டும்.

சாம்பல் நோய் : இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்த தெளிக்கவேண்டும். பிறகு 15 நாட்கள் இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்கவேண்டும். பிறகு இடைவெளியில் மறுபடியும்  ஒரு மறை தெளிக்கவெண்டும்.

அறுவடை

நட்ட 45 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்றவதற்கு முன் அறவடை  செய்து விடவேண்டும். 1 முதல் 2 நாட்களுக்கு ஒரு முறை அறவடை செய்வது முக்கியமாகும்.

மகசூல் : எக்டருக்கு 90 முதல் 100 நாட்களில் 12-15 டன் காய்கள் கிடைக்கும்.

நன்றி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வெண்டைக்காய் சாகுபடி

  1. manju says:

    i want to do somethink in small scale range field work for agriculture..so plz send me relavant details to my mail……..waiting for ur reply………..very eagerly………thank u….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *