வெண்டை சாகுபடியில் சாதாரண ரகங்கள் அதாவது அர்க்க அனாமிகா மற்றும் அர்க்கா அபை உள்ளன. ஆனால் இவைகள் ஒட்டு வீரிய ரகங்கள் அல்ல. இருந்தாலும் விவசாயிகள் இவைகளை சாகுபடி செய்கிறார்கள். அடுத்து ஒட்டு வீரிய ரகங்களும் உள்ளன. குறிப்பாக மைக்கோ ரகங்கள் (நம்பர் 10, 11, 12) இவைகளையும் சாகுபடி செய்யலாம்.
இதில் ஒரு அனுகூலம் உள்ளது. விதை வாங்கும் இடத்தில் விதையை “கௌச்’ என்னும் மருந்துடன் கலந்து தருகிறார்கள். இது வியாதிவராமல் தடுக்கின்றது.
- வெண்டை சாகுபடி செய்பவர்கள் முதலில் வெண்டையைத் தாக்கும் மஞ்சள் நரம்பு நோய் பற்றி தெரிந்துகொள்வது நல்லது.
- வெண்டையை இளம் வயதில் மஞ்சள் நரம்பு நோய் தாக்கும். நரம்புகள் தடித்து முதலில் இலை மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை அடைவார்கள்.
- ஆதலின் விவசாயிகள் நோய்கள் தாக்காத ரகங்களை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன. கௌச் மருந்து மஞ்சள் நரம்பு நோயினை தாக்காமல் கவனித்துக் கொள்கிறது.
சாகுபடி விபரம்:
- சாகுபடிக்கு தேர்ந்தெடுத்த நிலத்தினை நன்கு உழுது ஏக்கருக்கு நன்கு மக்கிய தொழு உரம் 10 டன் இட்டு மீண்டும் இயற்கை உரம் மண்ணோடு நன்றாக கலக்கும்படி உழவேண்டும்.
- பிறகு நிலத்தில் 60 செ.மீ. இடைவெளி கொடுத்து பார்சால் அமைக்க வேண்டும். விவசாயிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த ரகங்களின் விதையை பாரில் விதைக்கு விதை 20 செ.மீ. இடைவெளியில் குழிக்கு ஒன்று அல்லது இரண்டு விதைகள் விதைக்க வேண்டும்.
- விதைத்த பின் எம்.என். மிக்சர் 5 கிலோவை மணலுடன் கலந்து ஒரே சீராக இடவேண்டும். உடனே பாசனம் செய்ய வேண்டும்.
- செடி முளைத்து மூன்று இலை பருவத்தை அடைந்தவுடன் ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் அன்னபேதி உப்பு மற்றும் 20 கிராம் யூரியா இவைகளை கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும்.
- வளர்ச்சி காலத்தில் மூன்று களையெடுக்க வேண்டும்.
- இரண்டாவது களையெடுக்கும் சமயம் ஏக்கருக்கு ஒரு மூடை டி.ஏ.பி.,ஒரு மூடை பொட்டாஷ் இட்டு செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.
- செடி முளைத்து வரும்போது அதாவது செடியின் வயது 25 நாட்கள் இருக்கும்போது கான்பிடார் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி என்ற அளவில் தெளித்துவிட வேண்டும்.
- இந்த மருந்தின் காரம் நீண்டநாள் இருக்குமாதலால் விதை விதைத்து சுமார் 70 நாட்கள் மங்சள் நோய் வராமல் தடுக்கும். கான்பிடார் மருந்தினை ஒருமுறை பயன்படுத்தினால் போதும்.
- நிலத்தில் 35வது நாளிலிருந்து காய்கள் காய்க்கத் துவங்கும். செடியின் வயது 25 நாட்களாக இருந்தபோதும் கான்பிடார் காரம் விஷம் இருக்காது.
- சாம்பல் நோய் லேசாக தலைகாட்டும். உடனே ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் நனையும் கந்தகம் கலந்து செடிகள் மேல் தெளிக்க வேண்டும்.
- வெண்டை செடிகள் அதிக அளவு உஷ்ணத்தால் அடிபடாமல் இருக்க வெண்டை செடிகளைச் சுற்றி கொத்தவரை செடிகளை வளர்க்கலாம். இதற்கு பூஸா நௌபஹார் ரகத்தை இடலாம்.
- வெண்டை சாகுபடி செய்த நிலத்தைச் சுற்றி நான்கு புறங்களிலும் மரக்குச்சிகளை ஒரு அடி இடைவெளியில் நட்டுவிட வேண்டும்.
- வயலினுள் வெண்டையை விதைக்கும்போது ஏற்கனவே நட்ட குச்சிகள் அடிப்பாகத்தில் குழியெடுத்து குழிக்கு இரண்டு விதை வீதம் கொத்தவரை விதையை விதைக்கலாம்.
- கொத்தவரை செடிகள் வளர்ந்த மேல் கொத்தவரை செடிகளை குச்சியோடு சேர்த்து கட்டவேண்டும்.
- கொத்தவரை செடிகள் வெண்டை செடிகள் வேர்களில் உஷ்ணக்காற்றின் பாதிப்பு இல்லாமல் கவனித்துக் கொள்கிறது. கொத்தவரை சாகுபடியில் ஒரு ஏக்கரில் ரூ.2,000 வருமானம் கிடைக்கிறது.
வெண்டை அறுவடை: நிலத்தில் விதைத்த 35-ம் நாள் முதல் அறுவடை கிடைக்கும். இரண்டு மூன்று நாட்கள் இடைவெளியில் அறுவடை கிடைக்கும். மொத்தமாக 20, 25 அறுவடை செய்யலாம். ஆனியில் பாடுபட்டு உழைத்தால் ஏக்கரில் நிகரலாபம் ரூ.28,000 வரை கிடைக்க வாய்ப்பு உண்டு.
–எஸ்.எஸ்.நாகராஜன்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்