பசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி

சீதோஷ்ண நிலையைக் கருத்தில் கொண்டு மலைப் பிரதேசங்களில் பசுமைக்குடில்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பசுமைக் குடில்களில் பொதுவாக கொய்மலர்கள் எனப்படும் பூக்கள் விளைவிக்கப்படுவது வழக்கம்.

தென் மாவட்டங்களில் முதல் முறையாக சமதளப் பகுதியில் காய்கறிகளை விளைவிப்பதற்கான பசுமைக்குடில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம் வடமதுரை வட்டாரம் அய்யலூரை அடுத்த ஏ.கோம்பை கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2,100 சதுர மீட்டர் பரப்பில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் வகையில் திருப்பூரைச் சேர்ந்த சந்திரன் இந்த பசுமைக்குடிலை உருவாக்கியுள்ளார். பசுமைக்குடிலின் மூலம் காய்கறிகள் உற்பத்தி செய்வதன் சிறப்பம்சம் குறித்து தினமணிக்கு அவர் அளித்த பேட்டி:

 • பசுமைக் குடில்களில் பொதுவாக மலர்கள் பயிரிடப்படுவது வழக்கம். முதல் முறையாக சமதளப் பகுதியில் வெள்ளரிக்காயினைப் பயிரிடுவதற்காக இந்தக் குடில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 • மாநிலத்தின் வெள்ளரித் தேவை நாளொன்றுக்கு 10 டன் என்ற அளவில் உள்ளது. ஆனால் கிடைப்பதோ நாளொன்றுக்கு 2 டன் என்ற அளவில் உள்ளதால் சந்தையின் தேவையை உணர்ந்து பயிர்களை உற்பத்தி செய்யும் போது விவசாயிக்கு நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகிறது.
 • பசுமைக்குடில்கள் மூலம் பயிர்களைப் பயிரிடும் போது அதற்கான பருவம் என்பது இல்லாமல் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்ய முடியும்.
 • பசுமைக்குடிலில் சீதோஷ்ணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்து வைக்க முடிவதால் திறந்தவெளி விவசாயத்தைக் காட்டிலும் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது.அதோடு 99 சதவீதம் அளவுக்கு தரம் இருக்கும்.
 • இதனால் விவசாயப் பொருள்களுக்கு கூடுதல் விலைக்கான வாய்ப்பு அதிகம்.
 • பயிர்களுக்குத் தேவையான உர விநியோகம்கூட சொட்டுநீர் பாசனம் மூலம் நடைபெறுவதால் ஒவ்வொரு கிராம் உரம்கூட வீணாகாமல் பயிருக்கு நேரடியாக கிடைத்து விடுகிறது.
 • இதைத் தவிர குறைந்த பரப்பில் அதிக மகசூல் என்பதும் திறந்த வெளி விவசாயத்தில் ஏற்படும் பூச்சிகளின் தாக்குதல் என்பது பசுமைக்குடிலில் ஏற்படுவதும் இல்லை.
 • கடும் வெயில், கடும் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் காரணமாக திறந்தவெளி விவசாயத்தில் ஏற்படும் பயிர் பாதிப்பு பசுமைக்குடிலில் இல்லை என்பது மற்றொரு சிறப்பம்சம்.
 • இதைத் தவிர தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியமும் வழங்குகிறது.
 • வெள்ளரிக்காயின் தேவை அதிகமாக உள்ள சந்தை சூழ்நிலையில் விதை விதைத்த 45 நாள் முதல் 120 நாள் வரை அறுவடை செய்யலாம்.
 • இதன் காரணமாக ஓரிரு ஆண்டுக்கு உள்ளாகவே செய்த முதலீட்டைத் திரும்பவும் எடுத்துவிடும் சூழ்நிலை பசுமைக் குடிலில் உள்ளது.
 • விவசாயத்துக்கான வேலை ஆள்கள் பற்றாக்குறை உள்ள இன்றைய சூழ்நிலையில் இரண்டு ஆள்களைக் கொண்டே பசுமைக்குடில் விவசாயத்தை மேற்கொண்டு விட முடியும்.

எனவே பசுமைக்குடில் விவசாயம் என்பது விவசாயிகளுக்கு ஒரு லாபகரமான தொழிலாக இருக்கும்

தோட்டக்கலை துணை இயக்குநர் த.சந்திரசேகரன் கூறுகையில், பசுமைக் குடிலை அமைக்க தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியமாக வழங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால் இதற்கு தகுந்த ஆலோசனையை திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலைத் துறை வழங்கத் தயாராக உள்ளது.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

One thought on “பசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *